எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

‘இந்து’ எழுதுமா?

5.04.2017 நாளிட்ட ‘தி இந்து’ நாளிதழில், ‘‘அடுத்த நூற்றாண்டுக்கான  திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?’’ என்ற கட்டுரையில் பிராமணர்களை திராவிட இயக்கத்துக்குள் உள்ளிழுக்க வேண்டும் என்று கூறிய கட்டு ரையாளர் சில நாள்களுக்கு முன்பு திராவிட இயக்கத்துக்கு ஜெயலலிதா என்ற பிராமணப் பெண் தலைமை தாங்கியது ஒரு வரலாற்று முரண் என்று கூறியிருந்ததை மறக்க முடியாது.

இன்று அவரே ‘‘வெளியில் வெறுமனே பிராமண எதிர்ப்பு வெற்றுச் சவடால் அடித்து, ஏனைய மாநிலத்தவர் மத்தியில் இனத் துவேசியாக பார்க்கப்படுவதால் யாருக்கு என்ன லாபம்?’’ என்று கூறியுள்ளார். வட மாநிலங்களிலும் ‘‘பார்ப்பனர் - பார்பனரல்லாதார் என்ற உணர்வு பரவி வருவதை மறந்து விட்டாரா’’ என்று தெரியவில்லை. எனவே திராவிட இயக்கத்தவரை விமர்சிப்பது யதார்த்தத்தை திசை திருப்பும் செயல் என்று கருதுகிறேன்.

அதே நேரத்தில் ‘‘எங்கே பிராமணன்?’’ என்று சோ. ராமசாமி கட்டுரை எழுதியதும், ‘துக்ளக்‘ இதழில் ‘‘தமிழக அந்தணர் வரலாறு’’ தொடர் கட்டுரை வந்ததும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பன அல்லாதார் திருவண்ணாமலையில் சரஸ்வதி மற்றும் பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்ததற்காக அதை அகற்றிய நிகழ்ச்சி நடந்ததும், கீ.ராமலிங்கனார் , காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரை சந்தித்தபோது அவர் தமிழில் பேசாமல் சம்ஸ்கிருதத்தில் பேச அதற்கு காரணமாக “சங்கராச்சாரியார் பூஜையில் இருக்கும் பொழுது நீசப் பாஷையில் பேச மாட்டார்’’ என்று கூறப்பட்டதும்,  திருவையாற்றில் இசை அரசு தண்டபாணி தேசிகர் சித்தி விநாயகனே என்ற தமிழ் பாட்டை பாடியதற்கு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ‘‘தேசிகர் தமிழ் பாடி சந்நிதானத்தை தீட்டுப் படுத்திவிட்டார். நான் இந்த மேடையில் பாட மாட்டேன்’’ என்று அடம்பிடித்ததும், எழுத்தாளர் சுஜாதா தனது ‘‘நிர்வாண நகரம்‘’ என்ற நாவலில் 42 ஆம் பக்கத்தில், ‘‘சிவராஜ் பாலுவிடம் கூறினான்’’ ‘‘சரோஜாதேவி படிக்கிற பசங்களெல்லாம் எனக்கு அட்வைஸ் கொடுக்கிறிங்கடா. நான் படிக்கறது என்ன தெரியுமா? நீட்ஷே! ஸ்பெல்லிங் தெரியுமா? நான் ஒரு ஆரியன். உயர்ந்த வர்க்கம். ஆளப்பிறந்தவன். ஆட்டிப்படைக்கப் பிறந்தவன்’’ என்று எழுதியிருப்பதும் கட்டுரையாளருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தால் திராவிட இயக்கத்தவரை பார்த்து இனத்துவேஷி என்று சொல்லமாட்டார். இவைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இருக்கட்டும்! போனது போகட்டும்!. குறைந்த பட்சம் பார்ப்பனர்கள் தங்கள் பூணூலை அகற்றிவிட அறிவுரை கூறினால் நல்லது.

நீதிபதி பொ. நடராசன் (பணி நிறைவு),

‘‘தமிழகம்‘’

ராசீவ் காந்தி நகர், உலகனேரி,

மதுரை 625107

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner