எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் - பெரியாரும்!

‘தமிழ் இந்து’ நாளிதழ் கடந்த 25 ஆம் தேதி எச்.பீர்முகம்மது என்பவரது கட்டுரையை மறைந்த குத்தூசி குருசாமியின் பிறந்த நாளை (ஏப்.23) முன் னிட்டு வெளியிட்டிருந்தது. அதில் தமிழ்நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் குத்தூசி குருசாமி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அறிந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், எழுத்துச் சீர்திருத்தத்தை மக்களி டையே வெகுநாட்களாக எடுத்துச்சொல்லி, தனது பத்திரிகையிலும் நடைமுறைப்படுத்தியவர் பெரியார். என்றும், பெரியார் நூற்றாண்டு நினைவையொட்டி அப்போது இருந்த அதிமுக எம்.ஜி.ஆர். அரசு எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த வெளியிட்ட அரசாணையில் ‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை  தமிழக அரசு ஏற்று அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது’’  எனக் குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைக் கடித வடிவில் ‘இந்து தமிழ்’ நாளிதழும் வெளியிட்ட நிலையில் 28.4.2017 அன்று  திரு எஸ்.வி.ஆர். அவர்களின் கட்டுரை ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளது.

அதில் 1927 இல் பெரியார் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகளை எடுத்துக்காட்டி கட்டுரை துவங்குகிறது.

‘‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத் திலும் படிக்கவில்லை. நமக்கு புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு,  நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதை கண்ணியமாய் ஒப்புக் கொள்கிறோம்.’’

பெரியாரின் இந்த அறிவு நாணயம் தமிழர் தலைவர் அவர்கள் சொல்வதைப்போல் ‘‘ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவர் பெரியார்’’ என்பதையே  நமக்கு தெளிவுபடுத்துகிறது.

பெரியார் ‘குடிஅரசில்’ பயன்படுத்திய இவ்வரிகள் யாருக்காக, எப்போது பயன்படுத்தப்பட்டது? தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கும், இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ‘நவசக்தி’ இதழில் தூத்துக்குடி சோம சுந்தரம் பிள்ளை, ‘இந்து மதமும் வைக்கம் வீரரும்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார்.  அதில் தந்தை பெரியார் அவர்களை கிண்டலடிக்கும் வகையில் ‘‘நாயக்கர் ஆராய்ச்சி செய்து பேசுகின்றாரா?’’ என எழுப்பிய கேள் வியை எடுத்துப்போட்டு அதற்கு பெரியார் கொடுத்த பதிலே மேற்குறிப்பிட்ட வரிகள்.

பெரியார்தான் எழுத்துச் சீர்திருத்தத்தத்தையே கண்டுபிடித்ததாக யாரும் இங்கு வாதிடவில்லை. மாறாக பெரியாரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட, மேற் கொள்ளப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம் என்பதாலேயே அது பெரியாரின் எழுத்தாகிப்போனது.

1936 இல் தந்தை பெரியார்  அவர்கள் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரி யிலும் மாணவர்களிடம் ஆற்றிய உரை ‘மொழி’ ‘எழுத்து’ என்ற தலைப்பில் சிறு புத்தகமாக ஈரோடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

எழுத்துச் சீர்திருத்தம் பற்றி மாணவர்களிடம் விரிவாக பேசிய பெரியார், இது தொடர்பாக கடந்த நாற்பது ஆண்டுகளாகவே கவனித்து வருவதாக குறிப் பிட்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட எழுத்துகளைக் கொண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு திருக்குறள் புத்தகத்தையும் தான் கண்டதாகவும் பேசியி ருக்கிறார்.

தேவையில்லாத தமிழ் எழுத்துகளை குறைக்க வேண்டும் என்கிற எண்ணம் பதினெட்டாம் நூற்றாண் டின்  (1896) இறுதியிலேயே, குத்தூசி குருசாமி பிறப்பதற்கு (1906) முன்பே பெரியாருக்கு ஏற்பட்டிருக்கிறது.

பின் தொடர்ச்சியாக அதனை வலியுறுத்தி வந்தவர் 1935 ஆம் ஆண்டிலிருந்து  தனது ‘புரட்சி’, ‘குடியரசு’ பத்திரிக்கையிலும், பின் ‘விடுதலை’ பத்திரிகையிலும் செயல்படுத்தினார்.

பெரியாருக்கு  ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த தமிழ் அறிஞர்கள் உண்டு. அப்படி ஆதரவாக செயல்பட்ட பெரியாரின் தளகர்த்தர்களில் குத்தூசி குருசாமியும் ஒருவர் என்பதே உண்மை. மாறாக குத்தூசி குருசாமி அவர்கள்தான் எழுத்துச் சீர்திருத்தத்தையே கொண்டு வந்தார் என்று உண்மைக்கு மாறான ஒரு கருத்தை கட்டுரையாக வெளியிட்டிருப்பது ஏன்?

- கி.தளபதிராஜ்,

மயிலாடுதுறை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner