எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆலவிழாம்பட்டி...

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்கின்ற தகவல் தெவிட்டாத தேன்சுவை மிகுந்த செய்தியாக நம்மை பெருமிதம் அடையச்செய்கிறது.

ஆனால், அதேவேளையில் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் சரியான வழிகாட்டுதல் இன்றி திசை தெரியாமல் கால்போன போக்கில் தடம் மாறிச்சென்று மதுபோதை, கிரிக்கெட் போதை, கடவுள் போதை, சினிமா போதை, சின்னத்திரை போதை மற்றும் பல்வேறு போதைகளுக்கு ஆட்பட்டு சிந்திக்கும் செயல் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் சோம்பலில் உழன்றுகொண்டு அதுவே சுகமான சுகம் எனக்கருதி தன்னைத்தானே சீரழித்துக் கொள்வதோடு மட்டுமின்றி தெரிந்தோ தெரியாமலோ வீட்டையும், நாட்டையும் பாழ்படுத்திக் கொண்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பாமரமக்கள் மதுவுக்கு அடிமை ஆனதாலும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆட் பட்ட தாலும் பல குடும்பங்கள் சீரழிந்து சிதறுண்டுபோன கசப்பான சம்பவங்கள் நாட்டில் நடந்தேறியுள்ளன. எனவே இதுபோன்ற விலை மதிப்பற்ற மனித உயிர்களைப் பறிக்கின்ற வேதனைமிகுந்த சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்திட வேண்டியது அனைவரின் இன்றியமையாக் கடமையாகும்.

மேலும், மதுஅருந்தும் கொடிய பழக்கம் தற்போது மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு அண்மைக்காலமாக வருகின்ற விரும்பத்தகாத செய்திகள் பெற்றோர்களையும் - சமுதாயச் சிந்தனையாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி உள்ளன.

இத்தகைய சமுதாயச் சீர்கேடு நிறைந்த தீய பழக்க வழக்கங்கள் ஏதோ தனிநபர் பிரச்சினை என்று வாளா இருந்து விட முடியாது. இக்கொடிய மதுப்பழக்கம் இளைஞர்களையும் - மாணவர்களையும் மெல்ல மெல்ல சீரழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பேராபத்து இதில் அடங்கியுள்ளது என்பதை ஏனோ மாநில அரசு உணர மறுக்கிறது!

இப்படிப்பட்ட வேதனை மிகுந்த சூழலில்; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலவிழாம்பட்டி கிராமம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, தமிழகத்தை தலை நிமிர வைக்கும் கிராமமாகத் திகழ்வதை நாளேட்டின் வாயிலாக (23.4.2017) அறிந்தபோது ஆச்சரியம் கலந்த அந்த கற்கண்டுச் செய்தியால் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

ஆம், அக்கிராமத்தில் உள்ள மக்கள் யாருமே மது அருந்துவதோ, வரதட்சணை வாங்குவதோ கிடையாது என்கின்ற தேனினும் இனிய செய்தி அறிந்து முற்போக்குச் சிந்தனையாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள், மனித நேய மாண்பாளர்கள், நடுநிலையாளர் கள் மகளிர் சமுதாயம் உள்ளிட்ட அனைவரும் இன்பவெள்ளத் தில் மூழ்கினர். மகிழ்ச்சிப் பெருக்கில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

இத்தகைய இனிய சூழலில் நாட்டிற்குப் பெருமையும், புகழையும் ஈட்டித் தந்திருக்கின்ற தமிழகத்தின் முன்னோடி கிராமமான ஆலவிழாம்பட்டி கிராமத்தை மத்திய - மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், சமுதாயத் தொண்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே மதுவால் வீட்டிற்கும் நாட்டிற்கும் உண்டாகும் தீமைகளையும், வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்கூறி அவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதின் வாயிலாக இந்திய நாடு “மது இல்லா நாடாக வரதட்சணை வாங்காத நாடாக” உருப்பெற்று எழுந்து உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது உறுதி.

மது இல்லா நாட்டை வென்றெடுப்போம்! வரதட்சணைக் கொடுமையினை விரட்டியடிப்போம்!

- சீ.இலட்சுமிபதி,

தாம்பரம், சென்னை-45

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner