எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

ஆஞ்சநேயர் சிலைக்கு

1008 லிட்டர் பால் அபிஷேகம்!

ஆனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன. இக்கோயிலில் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வடைமாலை அலங்காரம் செய்யப் பட்டது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது (தினமணி 19.6.2017). தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ள 39,000 கோயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் பால், தேன் கற்சிலைகளின் மேல் பார்ப்பன அர்ச்சகர்களால் ஊற்றப் படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் (மதுரை கிளையின்) நீதிபதிகள் மாண்புமிகு ஆர்.சுதாகர் மற்றும் மாண்புமிகு வி.எஸ்.வேலுமணி இருவரும் ஒரு வழக்கின் முடிவில் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளனர். “கடவுளின் சிலை மீது ஊற்றப்படும் பாலை குழந்தைகள், ஏழைகள், ஆதரவற்றோர், விதவைகள் ஆகியோருக்கு அளிக்கலாம்“ என்ற மனித நேயமிக்க தீர்ப்பைக் கூறியுள்ளனர். (“நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” 26.2.2014).

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவான 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் நோயினாலும், பசியாலும் 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறந்து விடுகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.

தந்தை பெரியார் 19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில் தன் வாழ்நாளில் இறுதிப் பேருரை ஆற்றினார். பேருரையில் “ஓணான் கடவுள், நாய் கடவுள் என்று நினைத்ததை எல்லாம் கடவுள் என்றால் இது பைத்தியக்கார சங்கதியா? கடவுள் சங்கதியா? இந்தப் பைத்தியக்காரத் தனத்திற்கு நமது பணம், நமது நேரம், சக்தி எவ்வளவு செலவாகிறது?” என்று குறிப்பிட்டார்.

குரங்கை ஆஞ்சநேயர் சிலையாக ஆக்கி அதற்கு 1008 லிட்டபால் அபிஷேகம் செய்வது பெரியார் கூறியதுபோல் பைத்தியக்காரத்தனம் அல்லவா? அந்த 1008 லிட்டர் பாலை 4000 சிறுவர்களுக்கு ஒரு வேளை வயிராற குடிப்பதற்கு பால் கொடுக்கலாம்.

தந்தை பெரியார் படத்தையும், அறிஞர் அண்ணா படத்தையும் தன்கட்சிக் கொடியில் போட்டிருக்கும் இயக்கம் இதைப் போன்ற ஆடம்பர அபிஷேகங்களைத் தடை செய்ய வேண்டும்.

தங்கள் பணிவன்புள்ள

செய்யாறு இர.செங்கல்வராயன்

திருவண்ணாமலை மாவட்டம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner