எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சினிமா நடிகர்களின் அரசியல் தலையீடு பற்றிய தங்களது நீண்ட அறிக்கையினை இரண்டு முறை எழுத்தெண்ணிப் படித்தேன். தமிழகத்தின் இரு நடிகர்களை மய்யப்படுத்தி எழுதப் பெற்றிருந்தாலும், தமிழக வரலாற்றில் வெள்ளித் திரையினரின் அரசியல் நுழைவிற்குத் தமிழகம் மீண்டும் பலியாகி விடக் கூடாது எனும் கருத்தினைக் காய்தல் உவத்தல் இன்றித் தாங்கள் வெளிப்படுத்திய திறத்தினை புரட்சிக் கவிஞரின் மொழியில் காழ்ச்சிந்தை மறச் செயல் என்றே கூறுவேன். தமிழக அரசியல் வானில் அந்த அறிக்கை ஒரு விடிவெள்ளி என்றே தோன்றுகிறது. கருத்தாழம் மிக்க அக்கட்டுரை எதிர் கால அரசியலை கணித்துப் பார்க்க வழி வகுப்பதோடு தமிழக வரலாற்றிலும் இடம் பெறத் தக்கதாகும்.

வெள்ளித்திரையின் போலி மயக்கத்தில் சிக்கிக் கிடக்கும் பாமரத் தன்மையினை முதலீடாகக் கொண்டு அரசியலில் முற்றுமாக நுழைவதற்கு முன்னரே, தமிழ் மண்ணின் தலைமைக்குத் தயாராகி விட்டேன் எனும் தற்பெருமையும், தலைக்கனமும் தரை மட்டமாகி விட்டன.

எந்த நேரத்திலும் எப்பாடுபட்டேனும் யார் தோளிலாவது ஆரோகணித்து அருந்தமிழ் மண்ணில் நுழைந்துவிடக் காத்திருக்கும் காவிக் கும்பலுக்குக் கதவு திறக்கும் கையாளோ என்று தாங்கள் சந்தேகித்து,  சுயநலத்துக்கும், பதவி மோகத்திற்கும் ஆட்பட்டு அலைதலைப்  பக்குவமாகச் சுட்டிக் காட்டியதோடு, எழுதப்பட்ட வசனத்தை எடுத்துப்பேசி, ஆட்டுவித்தபடி ஆடுகின்ற நடிப்பு உலகினர் ஆட்சியைப் பிடிக்க எண்ணும் நினைப்பே நம்பத்தகுந்தது அல்ல என்னும் உண்மையினையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அத்தகைய அறிக்கை தங்களது அரசியலறிவின் முதிர்ச்சியைக் காட்டுவது மட்டுமன்றி, தமிழகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஆழ்ந்த அக்கறையினையும் வெளிப்படுத்துகின்ற ஒரு அற்புத ஆவணம் ஆகும்.

"விடுதலை" நாளிதழில் வந்த இந்த அறிக்கையும், மறுநாளும் வந்த இது தொடர்பான செய்திகளும் தமிழக மக்களின் வீடு தேடிச் செல்ல வேண்டும். அவர்களது கரங்களில் தவழ வேண்டும். திரைப்படச் சபலத்துக்கும், ஜாதீயப் பிரிவுகளுக்கும்,  இலவசங்களைப் பெற்று வாக்குரிமையான மூலதனத்தை இழக்கும் பின்னடைவுகளுக்கும் அறிவுரை புகட்டும் வாய்ப்பாக  இந்த அறிக்கையினை மீண்டும் தனியாக அச்சிட்டு வெளியிட வேண்டுமெனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பேராசிரியர் பழனி. அரங்கசாமி,

தஞ்சை

குறிப்பு: தங்கள் விருப்பப்படி துண்டு அறிக்கைகளை ஆங்காங்கு கழகப் பொறுப்பாளர்கள் விநியோகிக்கின்றனர்.

- ஆசிரியர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner