எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தினந்தோறும் எண்ணற்ற நாளேடுகள் கண்கவர் வண்ணங்களில் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வண்ணமயமாய் வெளிவருகின்றன. அவை அனைத்தும் வியாபார நோக்கோடு லாபத்தை முன்னிறுத்தி வெளியிடப்படும் நாளேடுகள் ஆகும். ஆனால், லாபத்தை பின்னுக்குத் தள்ளி எவ்வித சுயநலமும் இன்றி இனநலம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாள்தோறும் வெளிவருகின்ற நாளேடு "உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேடு" மட்டுமே.

கடைவீதிகள் மற்றும் பேருந்து - ரயில் நிலையங்களில் ஏராளமான நாளிதழ்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் "விடுதலை" நாளிதழை தேடிப்பிடித்து வாங்கிப்படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதியானது!

வருமானத்தைவிட தன்மானம் - இனமானம் பெரிது எனக்கருதி நாளும் வெளிவருகின்ற பகுத்தறிவு நாளேடான "விடுதலை" நாளேட்டை விரும்பி சுவாசிக்கும் - நேசிக்கும் வாலிபர்களில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், அதில் வருகின்ற செய்திகள் அனைத்தும் வாலிபர்களை  - மாணவர்களை நல்வழிப்படுத்துகின்ற, வழிகாட்டுகின்ற அரிய பணியினை செவ்வனே செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக 29.9.2017 அன்று "விடுதலை" நாளேட்டை நோக்கியபோது அதில் குறிப்பிடத்தக்கவை:

1) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஊன்றிப்படித்து உண்மை உணர்க! தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போகவேண்டுமா? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நீண்டதொரு முக்கிய அறிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் - ஆதரவையும் பெற்றுள்ளது. அவை இன்றைய காலகட்டத்திற்கு அனைவர் கரங்களிலும் தவழவேண்டிய ஓர் முக்கிய ஆவணக் கையேடாகும்.

2) மாரடைப்பு என்ற இதயக்கொல்லி நோய் - அறிந்துகொள்வீர்! எனும் ஆசிரியர் அவர்களின் "வாழ்வியல் சிந்தனைகள்" கட்டுரை வாசிக்க மட்டுமன்றி வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பயனுள்ள தகவல்களை வாரி  வழங்கியுள்ளது. அக்குறிப்புகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது காலத்தின் தேவை.

3) அனிதா - சமூகநீதியின் பாடம் தலையங்கம் - மாணவர்கள் மற்றும் வாலிபர்களை காந்தம் போல் கவர்ந்தது. அனிதா சமூகநீதிக்கான பாடமாக ஒளிர்வார் - ஒளிரட்டும், ஒளிரவும் செய்வோம் என்ற வரிகள் மாணவர்கள் மனதில் பசுமையாய்ப் பதிந்தன.

4) கழகக்களங்கள் பகுதியில் மறைந்த கவிஞர் தமிழ் ஒளியின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (25.9.2017) மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் "ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம், மனுதர்ம சமூகத்துக்கு மரணஅடி கொடுப்போம்" என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மின்னும் வைரமாய் ஜொலிக்கின்றன.

5) "நீட்" எனும் சமூக அநீதிக்கு பலியான படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், மகளிர் சமுதாயம், பகுத்தறிவாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் என வெள்ளம் போல் திரண்ட மக்கள் கடல் பெரியார் திடலில் கருங்கடலாய்ச் சங்கமித்து இன எதிரிகளை மிரளவைத்தது.

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் ‘நீச' பாசையில் பேசலாமா? 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து... கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பன உரையாடல், "குடியரசு" ஏட்டில் (21.12.1930) வெளிவந்த ஆஸ்திகர்களே எது நல்லது? மற்றும் சிறீரங்கம் ரங்கநாதனின் நன்றி கெட்ட தனம் முதலிய பகுத்தறிவு வினாக்கள் பக்தர்களை சிந்திக்கத் தூண்டின.

7) முத்தாய்ப்பாக, அனிதாவின் மரணத்துக்குக் காரணம் வெறும் ‘நீட்' அல்ல - மனுதர்மமே! எனவே, நீதித்துறையிலும் தேவை சமூக நீதி! சமூக நீதி! என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அழுத்தமாக வலியுறுத்திப் பேசியது இன எதிரிகளுக்கு மரண அடியாக அமைந்தது.

இறுதியாக சட்டமன்றம் - நீதிமன்றம் - வீதிமன்றம் இவை மூன்றும் முக்கியம். இரண்டிலும் முடியாவிட்டால் வீதிமன்றமே வெற்றியைத் தீர்மானிக்கும். அதற்காக நாம் மக்கள் மன்றத்தில் வாதாட வேண்டும், போராட வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறைகூவல் விடுத்தபோது அதனை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஆர்பரித்து ஆரவாரமிட்டனர். தமிழ்நாடு தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா ஆண்ட மண், எனவே சமூக அநீதியை தமிழகம் ஒருபோதும் ஆதரிக்காது, ஏற்காது என்பதை மத்திய - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியாக ஓங்கி ஒலித்தது ஆசிரியர் அவர்களின் அறைகூவல்.

எனவே கல்வி வேலைவாய்ப்பில் சமூகநீதி - இடஒதுக்கீடு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற எண்ணற்ற சமூகநலன் சார்ந்த கருத்துக்களைத் தாங்கி வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான "விடுதலை எனும் அறிவாயுதத்தை" வாலிபர்களும், மாணவர்களும் நாள்தோறும் விரும்பிப் படித்து பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கின்றனர்.

ஆகவே, பெரியாரால் வென்றெடுக்கப்பட்ட சமூகநீதியை, திட்டமிட்டு அழிக்க முயலும் இன எதிரிகளின் சூட்சுமத்தை முறியடிக்க தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அணி அணியாக அணிவகுத்து நிற்க வாலிபர்களும் - மாணவர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். நாமும் அவர்களுடன் தோளோடு தோளாக துணை நின்று சமூகநீதியை வென்றெடுப்போம்.

வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!

- சீ.இலட்சுமிபதி,

தாம்பரம், சென்னை-45.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner