எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விசுவ இந்து பரிசத்து அமைப்பு, நவம்பர் 24 முதல் 26 வரையில் கருநாடக மாநிலம் உடுப்பியில்  "தரும சன்சத்" என்னும் இந்துத்துவ  மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டின் ஒரு பகுதியாக, " இந்து வைபவா" என்னும் பெயரில் ஒரு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கண்காட்சிக்கு மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரையிலும் பயிலும் மாணாக்கர்களை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு, மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை  அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பினர். " நம் நாட்டின் பழம்பெருமையையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறும் கண்காட்சி" என்று அதிகாரிகள் காரணம் காட்டியுள்ளனர். உடுப்பி வட்ட ஊராட்சித் தலைவரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான  தினகர் பாபு என்பாரின் ஆணைக்கிணங்கச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அதிகாரிகள்  கூறினர்.    "Campus Front of India" அமைப்பின் உடுப்பி மாவட்டப் பிரிவினர் கல்வி அதிகாரிகளின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர் 22 அன்று அறிக்கை வெளியிட்டனர். நடவடிக்கை தொடர்ந்தால் அதனை எதிர்த்துப் போராடப் போவதாகவும் அறிவித்தனர்.

மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்தியநாத்தும் கலந்து கொள் வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  சங் பரிவார அமைப்பின் நிகழ்ச்சிக்குக் கருநாடக அரசுக் கல்வித்துறை அதிகாரிகள் துணை போவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்,  சுற்றறிக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சங் பரிவாரத்தினர் இந்துத்துவ வெறியை மாணாக்கர்களிடம் பரப்ப, அதிகாரிகளின் துணையுடன் திணிக்கச் சூழ்ச்சியுடன் முற்பட்டதும், சமூக உணர்வாளர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்தச் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கும்போதே இந்த நிலைப்பாட்டைச் சங் பரிவாரத்தினர் எடுக்கின்றனர் என்றால் சங் பரிவார ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் எந்த அளவுக்குச் செல்லுவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.!

சங்பரிவார ஆதரவு நடுவண்  ஆட்சியின் வல்லதிகாரப் போக்கும் எப்படியிருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு! ஆயின் சமூக விழிப்புணர்வின் தேவையும் இந்த நிகழ்வால் உறுதி செய்யப்படுகின்றது.

- முத்து.செல்வன்,

பெங்களூரு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner