எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லால்குடி வட்டம், கீழவாளாடி பெ.சங்கப்பிள்ளை (பெரியார் பெருந்தொண்டர்) அவர்களின் பேரனும், இலால்குடி கழக மாவட்ட இளைஞரணி தலைவரும் ஆவேன். சில மாதங்கள் முன்பு எமது குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வாங்கினேன். அதில் ஜாதியின் பெயரினை “ர்” விகுதியில் குறிப்பிடாமல் “ன்” விகுதியில் ஒருமைப்படுத்தியே வழங்கியுள்ளனர். இதுபோல பலருக்கும் இவ்வாறே வழங்கப்படுகின்றது. ஒரு மையில் “ன்” என்று முடியும்படி குறிப்பாக சில பட்டியல் இன மக்களுக்கு மட்டுமே ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும் அவலம் இன்றும் தொடர்கிறதே என்று எண்ணும் போது மன வேதனை அடைகின்றேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இவ்வாறாகவே வழங்கப்படுவதாகவே அறிகின்றேன்.

இவ்வாறு ஒருமையில் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும்போது அவ்வாறு மட்டுமே அழைக்கப்படவும் வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகின்றது. இதனால் மாணவச் செல்வங்களுக்கு உளவியல் ரீதியான ஒரு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவே உணர்கின்றோம். சமுதாயத்தில் பின்தங்கியுள்ள குறிப்பாக பட்டியல் இனத்தினைச் சார்ந்த மக்களுக்கு மட்டுமே இவ் வாறு சான்றிதழ் வழங்கப்படுவது வேதனை அளிக்கின்றது. குறிப்பாக பார்ப்பனர்களுக்கு “அய்யர், அய்யங்கார்” என “ர்” விகுதியில் பள்ளிச் சான்றிதழ் வழங்கப்படுகிறதே தவிர “அய்யன், அய்யங்கான்” என “ன்” விகுதியில் வழங்கப்படுவதாக யாம் அறிந்தவரை இல்லை. மேலும் ஆதிக்க ஜாதியை சார்ந்த தமிழினப் பெருமக்களுக்கும் “ன்” விகுதியில் வழங்கப்படுவதாக யாம் அறியவில்லை. ஒரு வேளை அனைவருக்கும் ஒருமை யிலே வழங்கப்பட்டால் நமக்கு இது ஒரு வேறுபாடாய் / பாகு பாடாய் / பாரபட்சமாய் தெரிய வாய்ப்பில்லை என்றே உணர முடிகின்றது.

எனவே அனைவருக்கும் சமநீதியே, சமூகநீதி என அரிய பல காரியங்களைச் செய்து தமிழின மக்களின் விடியலுக்காக அயராது பாடுபடும் தாங்கள் ஒட்டுமொத்த பட்டியலினத்தின் “ன்” விகுதியில் ஜாதி சான்றிதழ் பெறும் மக்களின் ஒட்டுமொத்த உள்ளக் குமுறலினை நீக்கிட ஆவன செய்திட வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம். இந்த தமிழி னச் சமுதாயத்தினை சீர்த்திருத்தும் பணியில் தாங்கள் படும் இன்னல்கள், துயரங்கள் ஆகியன யாம் அறிந்ததே; மேற்கொண்டு தங்களின் பணிச்சுமையை இதன்மூலம் அதிகப்படுத்தினால் மன்னித்து அருளவும்! நாதியற்ற சமூகத்தின் ஒரே விடிவெள்ளியாய் தாங்கள்தான் செயல்பட்டு, அவலம் போக்கிட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கின்றோம்.

- வீ.அன்புராஜா,

கீழவாளாடி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner