எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாள்தோறும் வெளிவருகின்ற நாளேடுகளில் பெரும்பாலானவை நமது இன மக்களின் நலனைப் பற்றியோ, முன்னேற்றத்தைப் பற்றியோ சிறிதும் அக்கறை இன்றி வணிக நோக்கோடும், வஞ்சகர்களுக்கு வெஞ்சாமரை வீசுகின்ற செய்திகளை முன்னிலைப்படுத்தியும் வெளிவருகின்றன என்பது நடைமுறையில் உள்ள யதார்த்தமான உண்மை நிலையாகும்.

ஆனால், இனத்தின் மீட்சிக்காக பல்வேறு சோதனைகளை - தடைகளைத் தகர்த்தெறிந்து, பகுத்தறிவுக் கொள்கைகளைத் தாங்கி பீடு நடை போட்டு தினந்தோறும் வெளிவருகின்ற ‘திராவிடர் இனத்தின் முனை மழுங்காத அறிவாயுதம் விடுதலை’ நாளேடாகும். அத்தகைய ‘விடுதலை’ நாளேட்டின் எழுச்சி - ஏற்றம், அதனால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் ஏராளம், ஏராளம்!

அதன் பயனாய்; இளைஞர்களும், மாணவர் களும் மற்ற மற்ற நாளேடுகளைப் புறந்தள்ளி உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளேட்டினை நாள்தோறும் வாசித்து - நேசித்து பகுத்தறிவுக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதின் வாயிலாக பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் பயணித்தும், பெரியார் திடலை நோக்கி அணி அணியாக அணிவகுத்தும் வருகின்றனர் என்பது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 85 வயதிலும் 25 வயது வாலிபராக அயராமல் - தளராமல் உழைக்கின்ற உழைப்பிற்கும் கிடைத்த உன்னத வெற்றியாகும்.

‘விடுதலை’ நாளேடு வெறும் காகிதமாக அல் லாமல், பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய கருத் துக் கருவூலமாக - அறிவாயுதமான பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி நாளும் வெளிவருகின்றது என்பது தேனினும் இனிய செய்தியாகும். எடுத்துக் காட்டாக 10.12.2017 நாளன்று ‘விடுதலை’ நாளேட்டினை கண்ணுற்றபோது அதில் முக்கியமாக ஒரு சில:

1) மண்டல் குழு பரிந்துரைப்படி பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீதம் அளிக்கப்படாமல் வஞ்சித்துவரும் மத்திய அரசின் துறைகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களை பட்டியலிட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை சுட்டிக்காட்டியிருப்பது பிற்படுத்தப்பட்ட மக்களிடையே போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2) கேரள மாநிலம் கோழிக்கோட்டில் டிசம்பர் எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப் பின் 41ஆம் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழாவில் (10.12.2017) தமிழர் தலைவர் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று திரண்ட நிகழ்வு சமீபகாலமாக சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் விடப்படுகின்ற சவாலை முறியடிக்க வேண்டியதின் அவசியத்தை பறை சாற்றும் விதமாக அமைந்திருந்தன.

3) தந்தை பெரியார் 27.7.1969 அன்று சிதம்பரத்தில் ஆற்றிய சொற்பொழிவில் (‘விடுதலை’, 4.8.1969) முத்தாய்ப்பாக, கோயில்களில் இருக்கும் சிலையை நம் மக்கள் தொட்டால் தீட்டு என்பது உள்ளவரை நாம் சூத்திரர்கள் தானே! என்கின்ற வியப்புக்குரிய வினா இன்றைய இளைய தலைமுறையினரை சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுகின்றது.

4) மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக பலமுறை பிரதமர் மோடியிடம் முறையிட்டும் அதனை அலட்சியப்படுத்தியதால் பா.ஜ.க. வின் முக்கிய பிரமுகர் நானா படோல் தனது எம்.பி. பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் விலகியிருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

5) ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வைத்  தோற்கடிப்பது தான் எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்திருப்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைவர்களிடையே அச்ச உணர்வை உண்டாக்கியுள்ளன.

6) தமிழ்நாடு பெரியார் பிறந்த மண் - நீதிக்கட்சி ஆண்ட மண் - நாளையும் ஆளப்போகிற மண் என்பதை நீதிக்கட்சியின் 101ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரைவீச்சு மற்றும் நாம் எடுக்கக்கூடிய சூளுரைகளை பெட்டிச் செய்தியாக பட்டியலிட்டிருப்பது என் போன்ற இளைஞர்களையும், மாணவர்களையும் வெகுவாக - ஈர்த்துள்ளன.

7) ஜாதிப் பிரச்சினையை ஒழிக்கவும், கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கவும், ஆதி திராவிடத் தோழரை திருமணம் செய்யும் ஜாதி மறுப்பு மணத்துக்கு வழங்கப்படும். மானியத்துக்கான வருமான உச்சவரம்பை மத்திய சமூக நீதித்துறை நீக்கியுள்ளது. இத்தகைய செயல்திட்ட முறையாது, ஜாதி ஒழிப்புக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை ஓயாது உழைத்த ‘ஜாதி ஒழிப்பு வீரர்’ தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் தலைவர்களுக்குக் கிடைத்த அளப்பரிய வெற்றியாகும்

இறுதியாக, “புராணம் என்றால் பூரிப்பு; வர லாறு என்றால் வக்கரிப்பா?” என்ற தலைப்பில் மின்சாரம் வெளியிட்டுள்ள கட்டுரையின் முடிவில் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உருவாக்கியுள்ள சனாதன எதிர்ப்பு - பார்ப்பனீய ஒழிப்பு என்னும் ஊழிக்கனல், அத்தகைய சக்திகளை ஊதித்தள்ளிவிடும் எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் வரிகள் ‘எக்காளமிடும் காவிகளுக்கு’ எச்சரிக்கை மணியாக ஓங்கி ஒலித்தது!

இவ்வாறு இனநலனை மட்டுமே முன்னிலைப் படுத்துவதில் முனைப்பு காட்டுகின்ற ‘விடுதலை’ நாளிதழில் சமூகநீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, வாழ்வியல் சிந்தனைகள், மின்சாரம் கட்டுரைகள் உள்ளிட்ட எண்ணற்ற பயனுள்ள - நலம் பயக்கும் செய்திகள் நாள்தோறும் வெளிவருவதால் சமூக  நலனில் அக்கறை கொண்ட சமூகநீதிச் சிந்தனையாளர்கள், அறிஞர் பெருமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள், மகளிர், இளைஞர்கள் - மாணவர்கள் ஆகியோர் ‘விடுதலை’ நாளிதழை தினந்தோறும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ்கின்றனர்.

எனவே வாழ்க்கைக்கு வளம் சேர்க்க உதவும் வாழ்வியல் நெறிகளைத் தாங்கி வலம் வருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளேடு “வஞ்சகர்களை வீழ்த்துகின்ற வாளாகவும், திராவிடர் இனத்தைப் பாதுகாக்கின்ற கேடயமாகவும்“ விளங்கி வருவதால், ‘விடுதலை’ நாளேட்டை திக்கெட்டும் பரப்புவோம், விண்ணை முட்ட உயர்த்திப் பிடிப்போம்.

வெல்க விடுதலை! வீழ்க ஆரியம்!

- சீ.இலட்சுமிபதி,

தாம்பரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner