எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முத்தூர் அரசுப் பள்ளி வாயிற் கதவில்

தாமரைச் சின்னம் பொறிக்கப்படுவதா?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம்,  முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 13.01.2018  அன்று பொன்விழா (1966-2016) மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெறவுள்ளது.

அதையொட்டி பள்ளிக் கட்டடங்கள் வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து   புதியதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வாயிற் கதவில்  தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெறும் இந்நிகழ்வுகளையொட்டி இப்பள்ளியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியிலும் சரஸ்வதி வீணை வாசிப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு, அரசுக்குச் சொந்தமான இடத்தில் எவ்வித மத அடையாளங்களும் இருக்கக் கூடாது என்ற மதச்சார்பின்மை கொள்கைக்கெதிராக வைக்கப்பட்டுள்ளது.ஒரு கட்சியின் சின்னம் அரசுப் பள்ளியில் பொறிக்கப்படலாமா? இது தலைமையாசிரியருக்குத் தெரியாதா? இதை தலைமையாசிரியர் அனுமதித்தற்கு காரணமும், பின்னணியும் என்ன?  என்ற கேள்விகள்  பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இப்பிரச்சினைகள்  அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் மத்தியில் போராட்ட மனநிலையைத் தோற்றுவித்துள்ளதால் விரைவில்  தாமரையை அகற்றக் கோரியும், பொது இடத்தில் மதச்சார்பின்மையை உறுதி செய்யக் கோரியும்  முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின்  முன்பாக போராட்டங்கள் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டக் கல்வி நிர்வாகம் இப்பிரச்சினையை ஆழப்புரிந்துணர்வோடு அணுகி, உரிய நடவடிக்கை மேற்கொண்டு போராட்டங்களைத் தவிர்க்குமா?

- திருப்பூர் மணிகண்டன்

  

69 விழுக்காடு இடஒதுக்கீடு எப்படி வந்தது?

"69% இடஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?" என்ற அருமையான தலைப்பை கொண்ட புத்தகத்தை தொகுத்து வரலாற்று ஆவணமாக வடிவமைத்த கோ.கருணாநிதி அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

69 விழுக்காடு இடஒதுக்கீடு சாதாரணமாக கிடைத்து விடவில்லை. இதை அடைவதற்கு பக்கபலமாக நின்று ஒரு கிரியா ஊக்கியாக (சிணீtணீறீஹ்st) செயல்பட்ட நம் ஆசிரியர் அவர்களுக்கு 1994ஆம் ஆண்டு யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கம் நடத்திய பாராட்டு விழா நினைவு கூரத்தக்கது. ஆசிரியர் இல்லை என்றால் 69 விழுக்காடு இல்லை என்பது புத்தகத்தை படிப்பதிலிருந்து அறிகிறோம். அந்த அளவிற்கு அவருடைய பங்கு இதில் இருக்கிறது.

அன்றும், இன்றும், என்றும் சமூக  நீதிக்காகவும், தமிழர் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து அயராது பாடுபட்டு வருபவர் நம் ஆசிரியர் என்பதை கூறிக்கொள்வதில் தமிழர்களாகிய நாங்கள் பெருமையடைகிறோம்.

- க.சந்திரன்

அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102