எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம் கழக சுயமரியாதைச் சுடரொளிகளாம் முன்னோடிகளை நினைவு கூர்ந்து நன்றிக்கட னாற்றும் செய்திகள் "உண்மை" இதழில் வெளி யிடப்பட்டு வருவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன். கடந்த மே மாதம் (16-31, 2018) இதழில் மொழிப்போர் வீரத்தாய் டாக்டர் மு.தர்மாம்பாள், பன்மொழிப் புலவர் க. அப்பா துரையார், தண்ணீர்ப்பானை பாகுபாட்டைக் கண்டித்து 1943 ஆம் ஆண்டிலேயே திராவிட மாணவர் கழகத்தை, கவிஞர் கருணானந்தம் அவர்களோடிணைந்து உருவாக்கிய இனமான எழுச்சி நாயகன் தவமணிராசன் ஆகியோரை நினைவு கூர்ந்து நன்றிக்கடன் ஆற்றியுள்ளீர்கள்.

சேலத்தில் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக 1944 ஆம் ஆண்டு முகிழ்ந்ததற்கு ஆறு மாதங்கள் முன்பாகவே, பார்ப்பனீய எதேச்சதிகாரத்தை எதிர்த்து, தகர்த்து எறிந்த எழுச்சி பெற்ற மாணவர் போராட்டம் நடந்த குடந்தை ஆடவர் கல்லூரியில் 1955-57இல் படித்த மாணவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். அதோடு தவமணிராசன் அவர்களின் பெரு முயற்சியில் திராவிட மாணவர்களின் முதல் மாநாடு 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19, 20 ஆகிய இரு நாட்களிலும் குடந்தை வாணிவிலாச சபாவில் நடந்துள்ளது. ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும், அறிஞர்களும் கலந்து கொண் டனர். அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், க.அன்பழகன், இரா.செழியன், கடலூர் இளம்வழுதி கே.ஏ.மதியழகன், மா.நன்னன், ஏ.பி.ஜெனார்த்தனன், குடந்தை நீலமேகம், தாவுத்பாட்சா, புலவர் குழந்தையா, பெரியசாமி, புதுக்கோட்டை கான் பகதூர் கலிபுல்லா சாயபு எனப் பல அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அப்போது கிளர்ந்தெழுந்த பகுத்தறிவு இனமான எழுச்சியின் தொடர்ச்சியாக, குடந்தை வாணிவிலாச சபாவின் நிரந்தர நடிகனாகி நிர்வாகத்திலும், பல்வேறு பொறுப்புகளையேற்று கிடைத்த நல்வாய்ப்புகளைப் பயன்படுத்தி அண்ணாவின் நாடகங்களான சந்திரோதயம், சந்திரமோகன், குமரிக்கோட்டம், வேலைக்காரி, ஓர் இரவு, தஞ்சையின் வீழ்ச்சி, புலிநகம், நீதி தேவன் மயக்கம் ஆகியவற்றையும், கலைஞரின் தூக்குமேடை, மணிமகுடம், பராசக்தி ஆகிய வற்றையும் சபாவில் நடத்தி பகுத்தறிவுகலைப் பணியாற்றி வருகிறேன். என் பணிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் எனக்கு - நாடகப் பணிக்கான பெரியார் விருதும், எழுத்தாளருக்கான சிறப்பு விருதும் வழங்கிப் பெருமைபடுத்திய தமிழர் தலைவர் அய்யா  ஆசிரியர் அவர்களின் அன்பையும், பண்பையும் மறவாமல் என் வாழ்நாளில் கிடைத்த இந்தப் பெருமையை பெரும் பேறாகக் கருதுகிறேன்.

திராவிட மாணவர் கழக பவள விழா நடக்கவிருக்கும் இக்காலக்கட்டத்தில் அகவை எண்பதை நெருங்கும் எனது வாழ்த்துகளை மனமார வழங்கி தங்கள் பணி தொடர வேண்டும்; அதன் பயனை என்போன்ற இளவல்கள் பெற வேண்டும் என்பதே என் அவா.

- கு.ப.செயராமன்

பாபநாசம், கால்நடை ஆய்வாளர் (ஓய்வு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner