எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெருமதிப்பிற்குரிய 'விடுதலை' பேராசான் அய்யா அவர்களுக்கு, வணக்கம்.

நியூஸ் 7 தொலைக்காட்சி  15.7.2018 அன்று இரவு ஒளி பரப்பிய நேர்காணல் வினா - விடை பேட்டியில், மாட்சிமிகு திராவிடர் கழகத் தலைவர் ஆகிய தாங்கள் பொழிந்த கருத்து மழையை பார்த்தும் - கேட்டும், இந்த 86 அகவை எழுத்தாளன் அ.மறைமலையான் எய்திய இன்பப் பூரிப்புக்கு எல்லையே இல்லை.

'பகுத்தறிவுப் பகலவன்' பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் ஒரே முழுமையான கொள்கை வழித் தோன்றல் தாங்கள் மட்டுமே என்பதை மெய்ப்பிக்கும் முறையிலேயே திராவிட இயக்கக் குறிக்கோள் நெறிகளுக்கு அழுத்தப் பொலிவு அளிக்கும் ஆணித் தரமான விடைகளை வழங்கினீர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகச் செயல்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவரங்கம் நிகழ்வில் பக்தியாளரால் நெற்றியில் இடப்பட்ட பொட்டைப் பகுத்தறிவு உணர்வோடு தான் அழித்தார் என்பதையும் நன்றாகவே தாங்கள் பாராட்டினீர்கள்.

தேர்தல் களத்தில் இறங்காமல் குமுகாய நீதிக்குப் போராடும் திராவிடர் கழகச் செம்மல்கள் பின்பற்றி நடக்கும் பகுத்தறிவுக்கும்-

தேர்தல் போட்டியில் பங்கு பெற்று பக்திப் பற்றாளர்கள் வாக்குகளையும் வாங்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தோர் கடைப்பிடிக்கும் பகுத் தறிவுக்கும் -

ஒரே தர ஒற்றுமை இருக்க இயலாது என்கிற நடைமுறைப் போக்கையும் தெளிவாகவே தாங்கள் உணர்த்தினீர்கள்.

இந்நாளில் தொலைக்காட்சி ஊடகங்களில் வினாக் கணைகள் தொடுக்கும் பேட்டியாளர்கள் தாங்களே தலைசிறந்த அறிவாளிகள் என்கிற ஆணவத் திமிரோடு - நேர்காணலில் பங்கு பெற வருவோர் தங்களை விட அகவையிலும், கல்வியிலும் முதிர்ந்த அரசியல் தலைவர்களாகவும், அறிஞர்களாகவும் இருந்த போதிலும் - அவர்களிடம் அடிக்கடி இடைமறித்து, இழிவான கேள்விகளைத் தொடுத்து அவர்களை அவமானப் படுத்துகிறார்கள்.

"குதர்க்கக் கேள்வி தொலைக்காட்சிப் பேட்டியாளர்

குறும்புச் செருக்கை ஒழிப்போம்!"

- என்னும் தலைப்பே தந்து தாக்குதல் கட்டுரை தீட்ட வேண்டிய அளவுக்கு, தொலைக்காட்சித் தொகுப்புரையாளர்கள் வரம்பு மீறி வாய் நீளம் காட்டுகிறார்கள்.

'நியூஸ் 7' தொலைக்காட்சிப் பேட்டியாளரும் அப் படித்தான் நுனிப்புல் அறிவுக் கேள்விகளால் ஆணவத்தோடு மட்டம் தட்ட முயன்றார். ஆனால் தங்களுடைய நுண்ணறிவு விடைகளோ, அந்த வம்பு நாக்காளருக்கு வலிமையான சாட்டை அடிகளையே தந்தன.

"என்னிடம் கேட்கக் கூடிய கேள்விகளை எல்லாம் விட்டு விட்டு எதை எதையோ கேட்கிறீர்கள்? இப்போது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லுங்கள்!"

-என்று சிண்டு முடியும் பேட்டியாளரையும்  திண் டாடித் தவிக்க விட்டீர்களே - அந்த வாதத் திறமையை எவரால் தான் வெல்ல முடியும்?

"எழுத்துப் பேரருவியாக மட்டும் அல்லாமல் வாதாடும் சொல் ஆற்றலிலும் வழிகாட்டிப் பெருவிளக்கே - 'விடுதலை' பேராசான் மானமிகு கி.வீரமணி அய்யா!'"

-என்னும் போற்றி மாலையே இந்த முதியவன் (86 அகவை) உள்ளத்தில் ஓவியமாய் எழுகிறது. இன்னும் நீண்ட நெடுங்காலம் 'புவி அறிவுப் போர்முரசு'  என, தாங்கள் வாழ்ந்து வழிகாட்ட என் மனம் கனிந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்.

தங்கள் அன்புநிறை

அ.மறைமலையான்

17.7.2018

(கண்ணந்தங்குடி - கவிஞன்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner