எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டூர், ஜூலை 31 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாகச் குறைந்தது.

கருநாடக மாநிலத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகள் நிரம்பிய நிலையிலும் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால், அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 40 அடியாக இருந்த மேட்டூர் அணை 120 அடியை எட்டி கடந்த 23-ஆம் தேதி நிரம்பியது. இதனால் மேட்டூர் காவிரியில் நொடிக்கு 80 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது கருநாடக மாநிலத்தில் மழை குறைந்ததால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்து, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 59,135 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, திங்கள் கிழமை காலை நொடிக்கு 31,411 கன அடியாகவும், மாலையில் 28 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை அணையிலிருந்து நொடிக்கு 59,714 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு திங்கள்கிழமை காலை நொடிக்கு 33,970 கன அடியா கவும் மாலையில் 28 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டது. இதனால் உபரிநீர் போக்கியில் தண்ணீர் நீரோடை போல செல்கிறது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டி.எம்.சியாகவும் இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து 120 அடிக்குக் குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பரங்கிமலை ரயில் விபத்து

4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை, ஜூலை 31- சென்னை பரங்கிமலையில் கடந்த வாரம் மின்சார ரயிலில் தொங்கிய படி சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கடற்கரை-திருமால்பூர் விரைவு ரயில் அன்று காலை 8.30 மணிக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மாம்பலம்-கோடம்பாக்கம் இடையே உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் நீண்ட நேரமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.  இந்நிலையில் கடற் கரையில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயில் காலை புறப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக அதில் ஏராளமான பயணிகள் தொங்கிக்கொண்டு சென்றனர். பரங்கிமலை அருகே வந்தபோது, ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் நிலைய கான்கிரீட் தடுப்பில் பயங்கரமாக மோதினர். இதில் தொங்கிக் கொண்டிருந்தவர்களில் 10 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி!

கடலூர், ஜூலை 31  கீழணையில் இருந்து வரும் காவிரி நீரால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. திங்கள்கிழமை ஏரியின் நீர்மட்டம் 7.5 அடியை எட்டியது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு தஞ்சை மாவட்டம், கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட 42 ஆயிரம் கன அடி நீரால் கீழணை ஒரே நாளில் தனது முழுக் கொள்ளளவான 9 அடியை எட்டியது. கடந்த 3 நாள்களாக அணையிலிருந்து விநாடிக்கு 2,800 கன அடி வீதம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதனால், வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 7.50 அடியாக இருந்தது. அடுத்த 3 அல்லது 4 நாள்களில் ஏரி முழுக் கொள்ளளவான 47.50 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது.

இந்த ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டால் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். மேலும், வீராணத்திலிருந்து சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விரை வில் அனுப்பப்படும் எனவும் கூறப்படுகிறது.

பக்கவாதம்: 3 மணி நேரத்துக்குள் மருத்துவமனை செல்வது அவசியம் நரம்பியல் துறைத் தலைவர் தகவல்

சென்னை, ஜூலை 31  பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்துக் குள் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண் டியது அவசியம் என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் கூறினார்.

மருத்துவர்கள்-பொதுமக்கள் கலந்துரையாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நரம்பியல் துறையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டாக்டர் லட்சுமி நரசிம்மன் பேசியது:

மூளையில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு அல்லது ரத்தக் கசிவினால் பக்கவாதம் ஏற்படுகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகை பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், மன அழுத்தம் ஆகியவை பக்கவாதத்தின் முக்கியக் காரணிகளாகும். ஒரு பக்கம் கை, கால் மரத்துப் போதல் அல்லது செயலிழப்பு, ஒரு பக்கமாக வாய் கோணுதல், பார்வை இழப்பு, நடையில் தள்ளாட்டம், தலை சுற்றல், வாந்தி ஆகியவை பக்கவாதத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.

பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றால் மூளையில் உள்ள ரத்தக்குழாய் அடைப்பைச் சரி செய்ய முடியும். அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாளைக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்படும் 10 அல்லது 12 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 9,368 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பக்கவாதத்துக்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்..

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner