எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் இரங்கல் அறிக்கை


மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட உலக தமிழினத்தின் முதல்வராகிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தியது உலகத் தமிழர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த பிறகும் அவர் வென்றார் என்பது அவரின் நெடு வாழ்வில் சந்தித்த பல போராட்டங்களை நினைவு கொள்ள செய்தது. ஓய்வறியாச் சூரியனாக சுற்றிச் சுழன்ற அவரின் பணிகள் எண்ணிக்கையிலடங்கா. அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு இயல், இசை, நாடகம், திரைத்துறை, இதழியல் என்று பல துறைகளிலும் தன் தனி முத்திரையை பதித்த சரித்திர நாயகர் அவர்.

அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும்,  திராவிட இயக்க பற்றாளர்களுக்கும் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர் கட்டிக்காத்த சமூக நீதிச் சுடரை அணையாமல் பாதுகாப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிகப் பெரிய நன்றிக்கடனாகும்.

வாழ்க கலைஞர். வெல்க பகுத்தறிவு.

சென்னை, ஆக.9 திமுக தலைவர் கலைஞர் மறைவை யடுத்து, அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, நாடுமுழுவதுமிருந்து திரண்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.  நேற்று (8.8.2018) மாலை அண்ணா நினை விடம் அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கலைஞர் தனது 94 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை  பலனின்றி நேற்று முன்தினம் (7.8.2018) மாலை 6.10 மணிக்கு காலமானார்.

பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, அவர் வாழ்ந்த இல்லமான கோபாலபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், நேற்று அதிகாலை மயிலாப்பூரில் உள்ள சிஅய்டி காலனியிலுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இல்லத்தில் கலைஞரின் உடல் சில மணி நேரம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

ராஜாஜி ஹால்

இதையடுத்து நேற்று (8.8.2018) அதிகாலை 5.40 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக கலைஞரின் உடல் சென்னை, அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடல்  மீது திமுக கொடி போர்த்தப்பட்டு இருந்தது.

ராஜாஜி ஹாலுக்கு கலைஞர் உடல் வந்ததும், நேற்று காலை 6 மணிக்கு முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்து கலைஞர் உடல்மீது தேசியக்கொடியை போர்த்தினர்.

மரியாதை செலுத்த குவிந்த மக்கள்

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள்,  பொது மக்கள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டது. கலைஞர் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரும் முன்னதாகவே  பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.

உடல் வந்ததும்  கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள்  தலைவா... தலைவா என்று கூறி கதறி அழுதனர்.

மறைந்த கலைஞரின் முகத்தை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு மரியாதை செலுத்த வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த  காவல்துறையினர் திணறினர்.

பிரதமர், முதல்வர்கள், தலைவர்கள் மரியாதை

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேனாள் பிரதமர் தேவேகவுடா, இலங்கை அமைச்சர்கள் மனோகணேசன், ராதா கிருஷ்ணன்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில ஆளுநர் சதாசிவம், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேர ராவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கேரள மாநில மேனாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர்   ரமேஷ் சென்னிதாலா, கருநாடக மாநில முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேசுவரா, கருநாடக மேனாள் முதல்வர் சித்தராமையா, தேசியவாத காங்கிரசு கட்சித் தலைவர் சரத்பவார், காஷ்மீர் மாநில மேனாள் முதல்வர் பரூக்அப்துல்லா, உத்தரபிரதேச மாநில மேனாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், பீகார் மாநில மேனாள் துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) சார்பில் அதன் தலைவர் பீர்முகமது, துணைத் தலைவர் வே.சிறீதர், பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர், துணைச் செயலாளர் ஜி.சசிரேகா, பொருளாளர் வி.மணிமாறன் ஆகியோர் உள்பட பல் வேறு மாநில முதல்வர்கள், தமிழக மற்றும்  அகில இந்திய அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அணி அணியாக வந்து மலர் வளையம், மாலை வைத்து மரியாதை செலுத்திவிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சரியாக நேற்று காலை 6.05 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு 3.55 மணி வரை கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்  கலைஞர் உடல் அருகே நிற்க அனுமதி அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் அப்போது கதறி அழுதனர்.

காவல்துறையினர் மரியாதை

பிற்பகல் 3.50 மணிக்கு 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலைஞர் உடல் அருகே வந்தனர். இதையடுத்து, கலைஞர் உடல் அருகே  காலையில் இருந்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட தமிழக காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பாதுகாப்பு பணி முடித்து செல்லும் முன், அனைத்து காவலர்களும் கலைஞர் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு  சென்றனர். இந்த காட்சி, அங்கு இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

ராணுவ வாகனத்தில்...

சரியாக நேற்று மாலை 3.55 மணிக்கு முப்படை வீரர்கள் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் உடலை சுமந்து கொண்டு ராணுவ வாகனத்திற்கு கொண்டு சென்று ஏற்றினர்.  அப்போது, ராஜாஜி அரங்கத்திலிருந்து சுற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞரின் இறுதிப் பயணம் ராணுவ வாகனத்தில் சரியாக  4.05 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டது.

இறுதி ஊர்வலம்

ராணுவ வாகனத்துக்கு பின்னால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழரசு, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்  உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.கலைஞர் உடலை சுமந்து கொண்டு பயணம் செய்த ராணுவ வாகனம் இறுதி ஊர்வல பாதையான சிவானந்தா சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை, அண்ணாசதுக்கம் உள்ளிட்ட பகுதியின் இரண்டு பக்கங் களில் கூடி  இருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள் ளத்தில் நீந்தியபடியே வந்தது. சரியாக மாலை 6.15 மணிக்கு அண்ணா சதுக்கம் அமைந்துள்ள வளாகத்துக்கு கலைஞரின் உடல் வந்தடைந்தது. ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா  சதுக்கம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்தை கலைஞரின் உடலை சுமந்து வந்த ராணுவ வாகனம் கடக்க 2 மணி 10 நிமிட நேரம் ஆனது.


உணர்ச்சிமிக்க ஒலி முழக்கங்கள்

ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலைஞரின் போராட்டகுணத்தை எடுத்துக் காட்டும் வண்ணம் வாழ்நாள்முழுவதும் போராடிய போராளி, கலைஞர் இறப்புக்குப்பின்னரும் போராடி வென் றவர் என்று உணர்ச்சி மிகுதியுடன் முழக்கமிட்டனர்.

முப்படையினர் மரியாதை

அண்ணா சதுக்கம் வந்த கலைஞரின் உடலை ராணுவ வீரர்கள் வாகனத்தில் இருந்து இறக்கினர். பின்னர் முப்படை வீரர்கள் அணிவகுப்பு மற்றும் வாத்திய இசையுடன் கலைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்துக்கு  முழு அரசு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டது. கலைஞர் உடல் மீது இருந்த கண்ணாடி பேழையின் மேல்பகுதியை ராணுவ வீரர்கள் எடுத்தனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தியதும் விமானப்படை, கப்பல்  படை, தரைப்படை தளபதிகள் கலைஞர் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கண்ணீர் மல்க இறுதி மரியாதை

அதைத்தொடர்ந்து காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேனாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு  நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம்  வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கியை தலைகீழாக பிடித்து சல்யூட் அடித்து ராணுவ இசை முழங்க மரியாதை செலுத்தினர். பின்னர் முப்படை வீரர்களும், அங்கிருந்த ராணுவ  அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்து, இசை முழங்க மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக அய்.ஏ.எஸ். அதிகாரி அமுதா, கலைஞரின் உடல் அருகே அழைத்து சென்றார். அப்போது அங்கு தயாராக இருந்த ராணுவ வீரர்கள் கலைஞர் உடல்மீது போர்த்தப்பட்டு இருந்த  தேசியக்கொடியை முறைப்படி அகற்றி மடித்து தளபதி மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அவர் அதை கண்கலங்கியபடி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திமுக குடும்பத்தினர் கலைஞர் உடல்மீது பூக்களை தூவி கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.

பேராசிரியர் மரியாதை

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை, மு.க.ஸ்டா லின் கலைஞரின் உடல் அருகே அழைத்து வந்தார்.  அவரும் கலைஞரின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் கண்ணாடி பேழையில் இருந்த கலைஞரின் உடலை அருகில் இருந்த சந்தன பேழையில் வைத்தனர். அப்போது அவரது உடலில் திமுகவின் கறுப்பு, சிவப்பு கொடி போர்த்தப்பட்டு இருந்தது.  கலைஞரின் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழையை மூடும் முன், இறுதியாக அவரது முகத்தை மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், முரசொலி செல்வம், மல்லிகாமாறன், அமிர்தம்  உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பார்த்து கண்கலங்கி கதறி அழுதனர்.

கலைஞர் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழையை ராணுவ வீரர்கள் மாலை 6.58 மணிக்கு மூடினர். தொடர்ந்து கலைஞர் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழை சரியாக 7 மணிக்கு தயாராக இருந்த குழியில்  இறக்கப்பட்டது. அப்போது ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க கலைஞர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மேனாள் பிரதமர் தேவேகவுடா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ராம்தாஸ் அத்வாலே, மேனாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், ஆறுமுக தொண்டைமான், தி.மு.க. பொதுச்செயலாளர்  பேராசிரியர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி,  திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் எம்.எல்.ஏ., கவிஞர் வைரமுத்து, ஜெகத்ரட்சகன்,  ஓய்வுபெற்ற அய்.ஜி.க்கள் சந்திரசேகர், சிவனாண்டி மற்றும் பலர் இறுதி மரியாதை செலுத்தினர்.

அண்ணா அணிவித்த மோதிரம்

திமுக தலைவர் கலைஞர் விரும்பி அணியும் கண்ணாடி, மஞ்சள் துண்டு, திமுக கரை வேட்டி, கர்சிப், அண்ணா அணிவித்த மோதிரம், இங்க் பேனா என்று அவர் வழக்கமாக அணியும் பொருட்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

கலைஞர் மறைவால் தமிழகமே நிலைகுலைந்தது. பேருந்து, லாரி, ஆட்டோ உள்ளிட்ட பயணிகள் வண்டிகள், சரக்கு வண்டிகள் என யாவும் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் தவிர்த்து உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகம் முழுவதும் கிராமங்களிலும், நகரங்களிலும் திமுக தலைவர் கலைஞர் உருவப்படத்துடன் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை இராஜாஜி அரங்கிலிருந்து அண்ணா நினைவிடம் வரை சென்ற கலைஞர் அவர்களின் இறுதிப்பயணம் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகள், செய்தி அலைவரிசைகளின் சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து, அந்த நேரலைக்காட்சிகளை  டிஜிட்டல் திரை அமைத்து நகரின் மய்யப்பகுதிகளில் ஆங்காங்கே ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து மக்கள்  கூடி கண்டு கண்கலங்கினார்கள். கலைஞரின் உருவப்படங்கள் அமைத்து தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.

சென்னை அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பங்கு கொண்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner