எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.20 இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார் என்று வைகோ புகழாராம் சூட்டியுள்ளார்.

மதிமுக சார்பில் கலைஞருக்கு நினை வேந்தல் செலுத்தும் வகையில் நேற்று மாலை 4 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ தலைமையில் 300க்கும் மேற் பட்ட மதிமுகவினர் சேப்பாக்கம், வாலாஜா சாலையில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் எதிரில் உள்ள  அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து அமைதி ஊர்வலமாக சென்று சென்னை மெரினா கடற்கரை கலைஞர் நினைவிடத் தில் வைகோ இரங்கல் செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் இதயத்தின் நீங்காத இடம் பிடித்தவரும், தமிழர்கள் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் திமுக தலைவரும், திராவிட இயக்க போர்வாளுமான  கலைஞர் இன்றைக்கு கடலோர பகுதியிலேயே துயில் கொண்டிருக்கிறார். அண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை கொடுத்து  விட்டு அவருக்கு அருகே  இளைப்பாறி கொண்டிருக்கிறார். அவருடைய உடல் அழியலாம். அவரது புகழுக்கு என்றும் அழிவு கிடையாது. பெரியாரின் சீடராய், சமூக நீதி காவலனாய் திராவிட  இயக்கத் தின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் விளங்கினார்.

சமூக நீதிக்கான கலங்கரை விளக்கமாக இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அரசியல்  சக்தியாக திகழ்ந்து, முக்கியமாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார். தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் கண் துஞ்சாது சேவை செய்த மாபெரும்  தலைவன் மெரீனாவில் துயில் கொண்டிருக்கிறார். திராவிட இயக்கத்திற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் நானும், மதிமுக வும் எதிர் நின்று போர் தொடுத்து அந்த  சதியை முறியடிப்போம் என்று கலைஞர் உறங்கும் நினைவிடத்தில் உறுதியை ஏற்பேன். கலைஞர் புகழ் ஓங்குக. இவ் வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner