எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.20 கவிஞர் வைரமுத்து நிறுவன தலைவராக உள்ள வெற்றி தமிழர் பேரவை சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், இந்து குழும தலைவர் என்.ராம்,  ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு கலைஞருக்கு புகழ் மரியாதை செலுத்தினர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:- பள்ளிப் பருவத்தில் திருவாரூர் கமலாலயத்தின் நீண்ட பெருங்குளத்தை நீந்திக்கடப்பதென்று கலைஞரும் அவர் நண்பரும் நீந்துகிறார்கள். பாதி தூரம் கடந்ததும் களைத்துப்போன நண்பர் நீந்தமுடியாது கரைக்கே திரும்பிப்போகலாம் என்கிறார். கடந்து வந்த தூரம் பாதி; கடக்க வேண்டிய தூரம் மீதி. எனவே திரும்பிச்சென்று தோல்வி காண்பதைவிட மறுகரையை தொட்டு வெற்றிபெறலாம் என்று கலைஞர் தொடர்ந்து நீந்தி வெற்றிபெற்றார். நண்பரையும் வெற்றிபெற வைத்தார்.

கலைஞரின் இந்த விடாமுயற்சி தான் தானும் வென்று தமிழ் நாட்டையும் வெற்றிபெற வைத்தது. கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இந்த போர்க் குணம் தான்.

மாற்றி யோசியுங்கள்- கலைஞர் சொல்லும் இரண்டாம் பாடம் இது. அந்தக்கால திரைப்பட வசனத்தில் சமஸ்கிருதத்துக்கு மத்தியில் கொஞ்சம் தமிழும் கிடந்தது. சத்திரிய பாத்திரங்களும் பார்ப்பன மொழியே பேசிக்கொண்டிருந்தன. கலைஞர் மாற்றி யோசித்தார். திரைப்பட கொட்டகைக்குள் தேன்மழை பொழிந்தது.

அறிவை பொதுவுடைமை செய் - கலைஞர் சொல்லிச்செல்லும் அடுத்த பாடம் இது. தான்பெற்ற அறிவை பாமரர்களுக்கு அள்ளித் தெளித்து அவர்களை ஆளாக்கியது கலைஞரின் கைவண்ணம்.

3 கோடி மக்களும் வெறும் 19 விழுக்காடு கல்வி அறிவும் கொண்ட அன்றைய தமிழ்நாட்டை கலைவழியே கல்விக்கூடமாக மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.

பதவி என்பது மகுடம் அல்ல; அது அன்றாடங்காய்ச்சிகளுக்கான அமுதசுரபி இது கலைஞரின் அடுத்த பாடம். சமூகநீதி, குடிசைமாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு நில ஒதுக்கீடு, இலவச கல்வி, தமிழுக்கு செம்மொழி பெருமை இவையனைத்தும் அவர் பெய்த பெருமழையில் சில துளிகள் என்று சொல்லலாம்.

துன்பங்களை உரமாய் போடு கலைஞர் வாழ்க்கை பேசிப்போகும் இன்னொரு பாடம் இது. இந்தி எதிர்ப்பு போராட்டம், பாளையங்கோட்டை சிறைச்சாலை, எம்.ஜி.ஆர். பிரிவு, நெருக்கடி நிலையின் சவுக்கடி,

13 ஆண்டுகள் ஆட்சி இல்லாத ஒரு கட்சி என்று எல்லா துயரங்களையும் தன் எதிர்காலத்திற்கான எரிபொருளாக்கிக் கொண்டார் கலைஞர்.

கலைஞரின் நினைவை போற்ற வேண்டும். திருவாரூரில் இயங்கும் மத்திய பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரைச் சூட்டுவது பொருத்த மாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner