எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.21  பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 74,601 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்கள் சேர்க்கை இன்றி 97,980 இடங்கள் காலியாக உள்ளன. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த சேர்க்கையாகும்.

தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,72,581அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்துகிறது. 2018-2019 கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வை நடத்தியது.

இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில் மொத்தம் 1,953 பேர் இடங்களைத் தேர்வு செய்து, இறுதி ஒதுக்கீட்டையும் பெற்றனர்.

அதன் பிறகு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான 5 சுற்றுகளைக் கொண்ட ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமை வரை நடத்தப்பட்டது. இதில் 72,648 மாணவ, மாணவிகள் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, இறுதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.

97,980 காலி இடங்கள்: அதன்படி, சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவடந்த நிலையில் ஒட்டு மொத்தமாக 74,601 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்தாய்வு மூலம் பி.இ. படிப்புகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத் துறைகளில் 1 இடம், உறுப்புக் கல்லூரிகளில் 1,820 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 459 இடங்கள் மற்றும் சுயநிதி

பொறியியல் கல்லூரிகளில் 95,700 இடங்கள் என மொத்தம் 97,980 பி.இ. இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.

இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த மாணவர் சேர்க்கையாகும். கடந்த 2017-2018 கல்வியாண்டில் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 86,355 மாணவ, மாணவிகள் பி.இ. படிப்புகளில் சேர்க்கை பெற்றனர். 2016-2017 கல்வியாண்டில் 84,352 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றனர். 2015-2016 கல்வியாண்டில் 1,01,620 பேர் சேர்க்கை பெற்றனர்.

2014-2015 கல்வியாண்டில் 1,09,079 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு வெறும் 74,601 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner