எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.28 இன்று (28.8.2018) அண்ணா அறிவா லயத்தில் கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் வருமாறு:

(ஒன்று முதல் 8 வரை இரங்கல் தீர்மானங்கள்)

பன்முக ஆளுமை - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கி

மத்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும்!

போட்டியிட்ட 13 முறையும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றும், இருமுறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தும் மொத்தம் 60 ஆண்டுகள் உறுப்பினராக, தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாக்காத சரித்திரத்தைப் படைத்தவர் தலைவர் கலைஞர். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், பிறகு அய்ந்து முறை, தமிழகத்தின் எந்த முதல்வரும் பதவி வகித்திடாத அளவுக்கு மொத்தம் 19 ஆண்டுகள் - நீண்ட காலம் தமிழ்நாடு முதலமைச் சராகவும் இருந்து அரும்பணி ஆற்றியவர் தலைவர் கலைஞர். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் யாராலும் தவிர்த்திட இயலாத தலைவராகவும், திராவிடப் பேரியக்கத்தின் கொள்கை களை, எள்ளளவும் குறைந்து விடாமல், இறுதி வரை  இதயத்தில் ஏந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள இந்தியத் தமிழர்களுக்காக மட்டுமின்றி, உலகெங்கும் பரவியிருக்கும் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், அவர்தம் உன்னதமான நலனுக்காகவும், ஆட்சி அதிகாரத்தையும் சீரிய செல்வாக்கையும் பயன்படுத்தி, சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத் தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் தலைசிறந்த நிர்வாகியாக - முதலமைச்சராக இருந்த போது உருவாக்கிய குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், நமக்கு நாமே - அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நாட்டுக்கே முற்போக்கான முன்னோடித் திட்டங்களாகும். விவசாயிகள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என்ற மும்முனை வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர். தொழில் வளர்ச்சிக்கும், கணினிக் கல்விக்கும் அரும்பாடு பட்டவர் தலைவர் கலைஞர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தனிமனித வருவாய் உயர்வுக்கும் வித்திட்டவர். சாதி மத வேறுபாடுகளை ஒழித்துச் சமூக நல்லிணக்கம் காண ஓயாது உழைத்தவர். விளிம்பு நிலைப் பிரிவினரான அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோரது நல்வாழ்விலும் - முன்னேற்றத்திலும் சீரிய கவனம் செலுத் தியவர். மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சியிலும், முழுமையான முன்னேற்றத்திலும் ஈடுபாடு காட்டியவர் தலைவர் கலைஞர்.

பண்டித நேரு முதல் இந்தியத் திருநாட்டின் அனைத்துப் பிரதமர்களுடனும் நயத்தக்க நாகரிகமான நட்பையும், மாற்றுக் கருத்துகள் கொண்டிருந்தாலும் அரசியல் மேன்மை யையும் பண்பாட்டையும் என்றென்றும் போற்றி வளர்த்த தலைவர் கலைஞருக்கு இணையான இன்னொரு தலைவர் இனிவரும் எந்த நூற்றாண்டிலும் கிடைப்பது அரிது என்று சொல்லுமளவுக்கு, அழிக்க முடியாத ஆழமான முத்திரை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

குடியரசுத் தலைவர்களை உருவாக்குவதிலும், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைவதிலும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பேணிக் காப்பதிலும் முனைப்புடன் செயலாற் றியவர். ஆக்கப்பூர்வமானதும் வலிமையானதுமான மாற்று அணிகளை தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் உருவாக்குவதிலும், நாட்டின் ஒற்றுமையையும் - ஒருமைப் பாட்டையும் - இறையாண்மையையும் போற்றிக் காப்பதிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந் தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சட்டமன்றப் பொன்விழாவும் கண்டார், கழகத் தலை வராகவும் பொன்விழா கண்டார். சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சிலிருந்து, அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்துப் பொறுப்புகளிலும் ஆற்றிய பேருரைகள் வரை அனைத்திலும் சட்டமன்றத்தின் மாண்பு களையும், மரபுகளையும் இம்மியளவும் வழுவாமல் பேணிக் காத்த தலைவர் கலைஞர் அவர்கள், மக்களாட்சித் தத்து வத்தின் மாபெரும் சிற்பியாக விளங்கி மன்றத்தில் விவாதங் களில் எப்போதும் தென்றல் தவழ்ந்திடவும், ஒளிபரவிடவும், வெப்பம் தவிர்க்கப்படவும் உறுதுணையாக விளங்கினார்.  முதலமைச்சராக இருந்தபோது எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சி வரிசையில் வீற்றிருந்தபோது ஆளுங்கட்சியையும் அனுசரித்து அர வணைத்துச் சென்றவர் தலைவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பதிலும், ஜனநாயக மாண்பு களைப் போற்றுவதிலும், நாட்டு நலனை முன்னிலைப் படுத்து வதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஏழை எளியோர், பாட்டாளி வர்க்கத்தினர், நடுத்தரப்பிரிவினர், ஒடுக்கப்பட் டோர், உதாசீனப்படுத்தப்பட்டோர் மீதும், மகளிர் முன்னேற் றத்திலும் தனித்தன்மை வாய்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். 45 வயதிலேயே முதலமைச்சராகப் பொறுப்பேற்று நிர் வாகத்தில் விவேகம் - வேகம் காட்டியதுடன், முதிர்ந்த 82வயதிலும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று பழுத்துக் கனிந்த முதிர்ச்சியான அனுபவத்தை மாநில நிர்வாகத்திற்குத் தந்தவர். நிர்வாகத்திற்கு உயிரையும், உணர்வையும் ஊட்டியவர் தலைவர் கலைஞர். தாய்மொழி யான தமிழ் மொழியை முதன்மைப்படுத்துவதில் தணியாத ஊக்கம் கொண்டவர் தலைவர் கலைஞர்.

இணையிலா எழுத்தாளர் - ஏற்றமிகு பேச்சாளர் - நாடு போற்றும் நல்ல நிர்வாகி என்ற தனித்தன்மைகளின் தகுதிமிக்க தொகுப்பாகவும், நிறைவான மனித நேயம், நேர்த்தியான கண்ணோட்டம் போன்ற நற்குணங்கள் - ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அரிய பெட்டக மாகவும், - அடி முதல் நுனி வரை வலிவும், பொலிவும் மிக்க கட்டமைப்பினை கழகத்திற்கு உருவாக்கித் தந்த செயலூக்கம் கொண்ட தலைவராகவும் விளங்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்திட வேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமல் லாது, உலகத் தமிழர்களின் ஒருமித்த விழைவாகும் என்பதால், மத்திய அரசு அதனை நிறைவேற்றித்தர வேண்டுமென இந்தப் பொதுக்குழு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

தனித் தீர்மானம்:

அண்ணா வழியில் - கலைஞரின் பயணத்தைத்

தொடர்ந்து முன்னோக்கி நடத்திட அன்புத் தளபதியே வருக! கழகத்தின் தலைவரே வருக! வருக!

விளையும் பயிர் முளையிலேயே - என்ற முதுமொழிக் கொப்ப, 1966இல் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்று, தனது சீரிளமையில் 13ஆவது வயதிலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாலிபத் துடிப்புடன் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய  தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணா - கலைஞர் ஆகியோருக்குப் பிறகு, கழகச் சரித்திரத்தின் மூன்றாவது பாகத்தை எழுதி முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பதற் கான மின்னும் அடையாளமாகத் திகழ்ந்தார். தொடர்ந்து, 1974இல் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிறகு நிர்வாகக்குழு உறுப்பினர், இளைஞர் அணி அமைப்பாளர், செயலாளர்,துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று கழகத்தின் பல்வேறு பொறுப்புகளைப் படிப்படியாக வகித்து, தனது ஓயாத உழைப்பாலும் கொள்கை உறுதியாலும் வழிகாட்டும் ஒளிவிளக்காய் உருப்பெற்றிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் அடியொற்றி நடையாய் நடந்து நற்றமிழர் யாவரும் ஒரு முகமாக உவந்து போற்ற, கழகப் பணியாற்றி, திராவிடப் பேரியக்கக் கொள்கைகளை, ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, காலமும் - கலைஞரும் கனிந்து நமக்களித்திருக்கும் இலட் சியக் கொடை திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதையும்; தந்தை மகற்காற்றிய நன்றியினால், மகன் தந்தைக் காற்றும் பேருதவியாக, கண்ணயரா கடின உழைப்பின் மூலம் தகுதிகள் பல பெற்று,விட்ட இடத்தைத் தொட்டுத் துலங்கிடச் செய்து, கழகத்தை முற்போக்கு நோக்கில் எடுத்துச் செல்லும் முழுமையான ஆற்றலாளர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதையும்;இந்தப் பொதுக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

நெருக்கடி நிலையை எதிர்த்து 01.02.1976 அன்று கைதாகி ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஏறக்குறைய ஓராண்டுக் காலம் சிறைக் கொட்டடியில் கடும் சித்திரவதைக்குள்ளாகி செத் தொழிந்தான் இவன்  என்று எறியப்பட்டிருந்தபோது, தீரன் சிட்டிபாபு தன்னுயிரை ஈந்து காப்பாற்றியதால் நம்மிடையே இன்று உயிரோடு நடமாடும் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் - தமிழக மக்களின் நலனுக்காக - சமூகநீதியை நிலை நாட்டிட, 69 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று, 1994ல் அறிவிக்கப்பட்ட போராட்டம் உள்பட கழகம் அறிவித்த அனைத்து அறப் போராட்டங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்றுக் கைதானவர்; மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை எனும் சிந்தையினர்.

தளபதி திரு.  மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 24 வருடங்களுக்கும் மேல் சட்டமன்ற ஜனநாயகப் பணியைத் திறம்பட ஆற்றி வரும் அவர், விரைவில் சட்டமன்றப் பணியில் வெள்ளி விழா காணவிருக்கிறார்.

ஸ்டாலின் மிகவும் புத்திசாலி மற்றும் திறமையானவர்; தந்தையைப் போல் வெற்றி பெறுவார் என்று பேரறிஞர் அண்ணாவின் அன்பான வாழ்த்தைப் பெற்றவர்.

5.03.2015 அன்று நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுவில் கழகத்தின் வருங்காலமே என்று தலைவர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்; உழைப்பு,உழைப்பு, உழைப்பு என்று தலைவர் கலைஞரால் உளமுருகச் சான்றிதழ் தரப்பட்டவர். ஸ்டாலின் கழகத்திற்கு மட்டும் தளபதி அல்ல. வருங்காலத்தில் ஒட்டு மொத்த தமிழினத்தின் தளபதியாக வருவார் என்று பாராட்டிய இனமானப் பேராசிரியர் அவர்கள் 3.02.2012 அன்று நடை பெற்ற பொதுக் குழுவில், ஸ்டாலின்தான் எதிர்காலத்திலே இந்த கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவார் என்று அடையாளம் காட்டுகிறோம் என அன்புடன் சுட்டிக்காட்டப்பட்டவர்.

தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மேயராக, அமைச்சராக, தமிழகத்தின் துணை முதலமைச் சராகப் பொறுப்பு வகித்து, நிர்வாக ஏணியிலும் படிப்படியாக அளந்து அடியெடுத்து வைத்து ஆரவாரமின்றி, அமைதியாக மேலேறி, அருமையாகப் பக்குவப்பட்டிருப்பவர். உங்களுக் காக நான்; உங்களால் நான்; உங்களில் ஒருவன் என்ற இலட்சியத்துடனும், தகுதிகளால் வளர்ந்து தன்னடக் கத்துடனும் இருப்பவர்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகள், உட்கட்டமைப்புத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும், பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும், கிராமப்புற வளர்ச்சிக்கான நமக்கு நாமே திட்டத்தையும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டங் களையும், உள்ளாட்சியில் நல்லாட்சிக்கான உயர்ந்த திட்டங்களையும் குறைவற நிறைவேற்றிய தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசியல் நெடும் பயணத்தில் பொன் விழா கண்டவர்.

தமிழினத் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரால் மனநிறைவுடன் அடையாளம் காட்டப்பட்டி ருக்கும், தகுதிகள் பல பெற்று நிறைகுடமாகத் திகழும் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, இந்த பொதுக் குழுவினால் ஒருமன தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நாள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள தோழர்கள் எல்லோருக்கும் இன்ப நாளிதே; இதயம் பாடுதே என்பதற்கு இணையானதாகும். இந்த நாள், கழக வரலாற்றின் மூன்றாம் பாகத்திற்கான முகவுரையாகும். இந்த முகவுரையின் மூலவர்களான கழகப் பொதுக்குழு உறுப் பினர்கள் அனைவரும் உளப்பூர்வமான நன்றிக்குரியவர்கள்.

அரை நூற்றாண்டுக் காலம் கழகத்திற்குத் தலைமையேற்று வழிநடத்திச் சென்ற தலைவர் கலைஞர் அவர்கள், இயற்கை எய்தியிருப்பது, நமக்கு இமயம் சரிந்து, இதயம் சாய்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். அதனால், சோகமும் துயரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், திராவிட இயக் கத்தின் பாரம்பரியமான பரம வைரிகள் சரியான சமயமடா இது என்று  ஒரு சில ஊடகங்களின் மூலம் சூதுவலை பின்னுவது, புதியதல்ல; நம்மை ஆதிகாலம் தொட்டு ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து வரும் சூழ்ச்சியை சுக்குநூறாக்கி,மேலெழுந்து முன்னேற்றப் பாதையில் முனைப்போடு நடைபோட்டு வருகிறோம்.

கோடி சூரியப் பிரகாசம் குறைந்து விட்டாலும், இதோ நானிருக்கிறேன்! என்று உதய சூரியனாய் ஒளிக்கதிர்களைப் பரப்பி, கழகத்தைக் கட்டிக்காத்து, கழக உடன்பிறப்புகளையும், தமிழகத்தையும் வழி நடத்தவும், வாழ்விக்கவும் வந்தமைந்திருக் கிறார் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.  அவரே நமக்குக் கதி; இனி வருங்காலம் முழுதும் அவரே நமது வீட்டுக்கு விளக்கு; நாட்டுக்கு நல்லதம்பி! எனவே, கழகத்தின் ஒரு கோடி உடன்பிறப்புகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் தளபதியே வருக! தலைவரே வருக! வருக! கழகத்திற்குப் புத்தொளி தருக! அண்ணா காட்டிய பாதையில், கலைஞர் வகுத்த பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள, எமக்குத் துணிவையும் - கனிவையும், ஆக்கத்தையும் - ஊக்கத்தையும் தருக! தருக! உம்மை வாய் மணக்க வரவேற்று, வணக்கம் பல கூறி, மனம் கனிந்து வாழ்த்துரைக்கிறோம்! என விண்ணதிர முழங்கிடுவோம்.

ஒரு தாய் மக்களான நாமனைவரும், அர்ஜுனனின் கூரிய குவிமய்ய நோக்குடன் பயணிப்போம்;  கவனம் சிதையாது, காரியம் சாதிப்போம்; அராஜக அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப் படுத்துவோம்; தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை முதல் வராக அரியணையில் அமர்த்து வோம்;  தமிழகத்தை முன் னேற்றப் பாதையில் மீண்டும் செலுத்துவோம்;  இன - மொழி பெருமையைப் பேணுவோம்;  அதுவரை  மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது அயராதுழைப்போம்;  அதற்கான சூளுரையை இன்றே இப்போதே மேற்கொள்வோம், வாரீர், வாரீர்!!”” என இப்பொதுக்குழு அன்புடன் அறைகூவி அழைக்கிறது!

இவ்வாறு திமுக பொதுக்குழு தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner