எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலை, செப்.1 நடப்பு கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேர்வு மய்யங்களை அமைக்க தேவையான அறிக்கையை வரும் 17ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கல்வி அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் டி.வசுந்தராதேவி அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மய்யங்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

எனவே, மாணவர்களின் வசதிக்கு தகுந்தபடி தேர்வு மய்யங்கள் அமைப்பது அவசியம் என கருதப்படும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

அதன் பரிந்துரை அறிக்கையை, முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று, அனுப்பி வைக்க வேண்டும்.  சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்தபின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி பரிந்துரைப்பது அவசியம்.

மேலும், அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை, தேர்வு மய்யமாக அமைக்க பரிந்துரை செய்யும் கல்வி அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.அதன்படி, 10 கி.மீ தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மய்யங்களுக்குச் செல்லும் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மய்யங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள தேர்வு மய்யங்களில், ஏதேனும் ரத்து செய்ய வேண்டிய மய்யம் இருந்தால், அதற்கான காரணங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும்.  அங்கீகாரம் இல்லாமல் நீதிமன்ற ஆணையின் மூலம் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வெழுதி வரும் பள்ளிகளின் பட்டியலையும் அனுப்ப வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் தேர்வு மய்யம் அமைக்கக் கூடாது. நடப்பு கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் அனைத்தும், மார்ச் மாதமே நடக்க இருப்பதால், அதற்கான முகப்புத் தாள்கள் முன்கூட்டியே அச்சிட வேண்டிய சூழல் உள்ளது.  எனவே, காலம் தாழ்த்தாமல் புதிய தேர்வு மய்யம் தொடர்பான அறிக்கையை கல்வி அதிகாரிகள் அளிக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner