எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.5 நெட் தேர்வுக் கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வை இதுவரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வந்த நிலையில், இப்போது இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.) மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி, டிசம்பர் மாத நெட்’ தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வானது டிசம்பர் 9 முதல் 23 வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு அக்டோபர் 21-ஆம் தேதி என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.

செப்.30 கடைசி: இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணம் செலுத்த அக்டோபர் 1 கடைசி தேதியாகும்.

முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியு டையவர்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணித் தகுதிக்காக நெட்’ தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. எந்த வயதினரும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (ஜே.ஆர்.எஃப்.) பெறுவதற்காக இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்கள், 2018 டிசம்பர் 1 ஆம் தேதியன்று 30 வயதை மிகாதவர்களாக இருக்கவேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் கூடுதல் சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது இந்தப் பிரிவினர் 35 வயதை மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

‘நெட்’ தேர்வுக்கான கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.800. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (என்.சி.எல்.) ரூ. 400, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ. 200 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் பெறலாம்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner