எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 7- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

குரூப்-4இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ஆம் தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மய்யங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.

தற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 பேர் விடுவிப்பு குறித்து

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு

சட்டத் துறை அமைச்சர் தகவல்

சென்னை, செப். 7- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள அவ்வையார்குப்பத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். அதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பமும், கொள்கையுமாக இருந்தது. இதற்காகவே, அப்போது சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதன் பிறகே, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தடை ஆணை பெற்றது.

இந்த விவகாரத்தில் சில உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதை முழுமையாக ஆராய்ந்து, அதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை, செப். 7- வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்துள்ளதை அடுத்து வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையில் இருந்தும், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்தும் பலமான காற்று வீசக்கூடும். வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது வியாழக்கிழமை வலுவடைந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு நோக்கி நகர்கிறது. இந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வடக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப். 7- தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் 2-ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், கலந்தாய்வில் பொதுமாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்வது அவசியம், தரம் உயர்த்தப்பட்ட 95 மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல 9 முதுநிலை பணியிடங்கள் வழங்கி கிராமப்புற மாணவர்களின் நலன் காத்திட வேண்டும், நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயிற்சியளிக்க நிர்ப்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கல்வி மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஜாண் இக்னேசியஸ், நாகராஜன், பிரபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஆசிரியைகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner