எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சர்வாதிகார மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசையும், மாநில அரசையும் கண்டித்து தமிழகத்தில் காங்கிரசு  தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்று தீர்மானம்

திராவிடர் கழகமும் பங்கேற்றது

சென்னை, செப்.9 வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையினால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியினை எதிர்த்து நடத்தப்படும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு காங்கிரசு நேற்று (8.9.2018) கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் திராவிடர் கழகம் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கி நடத்தினார். திராவிடர் கழகத்தின் சார்பாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு வணிக அமைப்புகள் சார்பாக தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அனைவரது கருத்துக்களும் கேட்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 10ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தினை வெற்றிகரமாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.

பொதுச் செயலாளர் உரை

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசும்பொழுது குறிப்பிட்டதாவது: சாதாரண மக்களை அன்றாடம் பாதிக்கக் கூடிய இந்துத்துவா - பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் கொள்கை முடிவினால் விளைந்த - பெட்ரோல், டீசல் விலை களின் கடுமையான உயர்வினை - நாளொரு ஏற்றம் காணும் விலை உயர்வினை எதிர்த்து - நாடு தழுவிய வேலை நிறுத்தத் திற்கு ஆதரவுகோரி அனைத்துக் கட்சி கூட்டத்தினை தமிழ்நாடு காங்கிரசு கட்சி நடத்துகிறது.

மக்களுக்கு நல்ல ஆட்சியினை அளித்து, மக்களின் நல வாழ்க்கைக்கும், மேம்பாட்டுக்கும் பணிபுரிவது என்பது ஆளும் அரசியல் கட்சியின் அடிப்படைப் பணியாகும். ஆனால் மக்களை எந்த அளவிற்கு அல்லல்படுத்தி, உருப் படியான வசதி வாய்ப்பினை அவர்களுக்கு எப்படியெல்லாம் வழங்கக்கூடாது என திட்டமிட்டு ஆட்சி நடத்துவதுதான் இந்துத்துவா - பாரதிய ஜனதா கட்சியின் தனித்துவம். ஆட்சி யில் இருப்பவர் பொருளாதார அறிஞர்களாக இருக்க வேண் டும் என்பதல்ல. குறைந்தபட்சம் அரசியல் அறிவாளுமை ஷிணீமீனீணீஸீலீவீஜீ உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் எந்த வித பலனு மின்றி - பொதுமக்களை வங்கிக் கிளைகளின் முன் நாள் முழுவதும் காக்க வைத்து - ஏறக்குறைய 100 பேரை பலி கொடுத்து - எந்த வித பலனுமில்லை என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வந்ததை, இன்று நாட்டின் ஒட்டுமொத்த பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்திடும் ரிசர்வ் வங்கியானது - பலன் ஏதுமில்லை என பறைசாற்றி இருக்கிறது. பண மதிப்பு நீக்கப்பட்ட பழைய கரன்சிநோட்டுகளுக்குப் பதிலாக - புதிய கரன்சி நோட்டுகளை கோடிக் கணக்கில் செலவு செய்து அந்தவகை நோட்டிலும் கருப்புப் பணத்தை அதிகரிக்க வைத்துதான் பா.ஜ.க.வின் பொருளாதார மேம்பாட்டுச் சாதனை - பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பெரும் சாதனை.

பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளால் ஒரு சில வெற்றி கண்டால் தாம்தான் காரணம் - தோல்விகளுக்கு புறச்சூழலை, வெளிநாட்டுப் பொருளாதாரச் சூழலைக்காட்டி பழிபோடுவது பா.ஜ.க.வுக்கு பழக்கமாகி விட்டது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் பற்றிய புரிதல் ஏதுமில்லாமல் - புரிந்து கொள்ள வேண்டிய வெளிப்படையான முனைப்பு கூடக்காட்டாமல் பா.ஜ.க. ஆட்சியில் - பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத உச்சங்களை எட்டிப் பார்த்து நிற்கிறது. பெட்ரோல், டீசல் உயர்வுக்கு வெளிநாட்டு கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலை உயர்வைக் காரணம் காட்டிடும் ஆளும் காவிக்கட்சியினர் - கச்சா எண் ணெய் விலை குறைந்த காலங்களில் உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலையினை குறைக்கவில்லை என்பது தான் பா.ஜ.க.வின் பொருளாதார நாணயமற்ற ஆளும் தன்மைக்கு சான்றாகும்.

2014இல் கச்சா எண்ணெய் விலை 145 அமெரிக்க டாலராக இருந்த பொழுது பெட்ரோலின் விலை லிட்டருக்கு 60 ரூபாய் அளவில் இருந்தது. இன்று 2018 உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலராக குறைந்த நிலையில் பெட்ரோலின் விலை இன்று லிட்டருக்கு 83.60, டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 76.64, சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 400 லிருந்து ரூ. 800 ஆக இரு மடங்கான விலை உயர்வால் நடுத்தர, அடுத்த நிலை ஏழை மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது.

நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் (GDP) குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்தகால காங்கிரசு தலைமையிலான UPI ஆட்சியின் GDPயை விட அதிகமாக தங்களது ஆட்சியில் இருக்க வேண்டும் என GDP கணக்கிடும் முறையையே பா.ஜ.க. ஆட்சி மாற்றியது. அடிப்படைக் கணக்கீட்டு ஆண்டை மாற்றி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டிற்கு GDP, 8.2 விழுக்காடு என வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியே 7.5 விழுக்காடுதான் இருக்கும் என கணித்த நிலையில், பன்னாட்டு நிதியம் 7.2 விழுக்காடு என மதிப்பீடு செய்த கட்டத்தில், உள்நாட்டு தொழிற் உற்பத்தியும் மந்தமான நிலையில், 8.2 விழுக்காடு GDP என்பது நம்ப முடியாதது. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழுவின் உறுப்பினரும் இதனை விமர்சித்து கருத்து கூறியிருக்கிறார். பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்த அளவில் ஒரு புதிராக உள்ள பா.ஜ.க. எடுக்கும் முடிவுகள் - முந்தியதை பிந்தியது மறுதலிக்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் inconsistency in economic policy decision making thy name is Hindutva - BJP  என சொல்லும் நிலையில்தான் மத்தியில் ஆளும் ஆட்சி உள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்பொழுது பெட்ரோல் முதலான பொருட்களுக்கு விலையினை குறைக்க வேண்டும் என்ற நினைப்பு இல்லாத பிடிவாதமான Selective Amnesia வில் பா.ஜ.கட்சி, ஆட்சியிலிருந்து இறங்கும் காலம் நெருங்கி வருகிறது. நாட்டின்  ஒட்டு மொத்த மக்களையும் ஆளும் நாணயத் தன்மையற்ற பா.ஜ.ஆட்சியின் மீது திருப்பிட காங்கிரசு கட்சி நடத்திட உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் முழுமையாக வெற்றியடைய வேண்டும். திராவிடர் கழகத்தின் ஆதரவு, பங்கேற்பு  நாட்டு நலன்காத்திடும் இந்த வேலை நிறுத்தத்திற்கு முழுமையாக உண்டு.

இவ்வாறு வீ.அன்புராஜ் தமதுரையில் குறிப்பிட்டார்.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

பெட்ரோலியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 10.9.2018 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் "பாரத் பந்த்" போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் :

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து நான்கு வருடங் களாகியும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றியதில்லை. ஆனால் பெட்ரோலியப் பொருட் களின் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்கள் மீது சுமையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக மத்திய பா.ஜ.க. அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிய போது கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை ரூபாய் 71. டீசல் விலை ரூபாய் 55. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 73 டாலராக இருக்கிற போது பெட்ரோல் விலை ரூபாய் 84 ஆகவும், டீசல் விலை ரூபாய் 76 ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் முழு பொறுப்பாகும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோது, அந்த சுமையை மக்கள் மீது ஏற்றக் கூடாது என்கிற காரணத்திற்காக அன்றைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மானியங்களை வழங்கியது. ஆனால் நரேந்திர மோடி அரசு மானியங்களை முழுமையாக ரத்து செய்து விட்டது. இதற்கு மாறாக கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 9.20 ஆக இருந்ததை ரூபாய் 19.48 ஆக உயர்த்தியிருக்கிறது. அதேபோல, டீசல் மீது கலால் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது தற்போது ரூபாய் 15.33 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோலை பொறுத்தவரை 211 சதவீதமும், டீசலைப் பொறுத்தவரை 443 சதவீதமும் கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கலால் வரி உயர்வின் மூலமாக மக்கள் மீது வரலாறு காணாத சுமையை ஏற்றி ரூபாய் 11 லட்சம் கோடியை வருமானமாக அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையான ரூபாய் 83.22 இல் மத்திய - மாநில அரசுகள் வரியாக மொத்தம் 37 ரூபாயும், டீசல் விலையான ரூபாய் 76.26 இல் ரூபாய் 26 ரூபாயும் வரியாக விதித்து மக்கள் மீது கடும் சுமையை ஏற்றி வருகிறது. இந்த வரி உயர்வை மத்திய - மாநில அரசுகள் குறைத்து பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். மத்திய அரசு குறைக்க வேண்டுமென்று மாநில அரசு கோருவதும், மாநில அரசு குறைக்க வேண்டுமென்று மத்திய அரசு கோரி கண்ணாமூச்சு விளையாடுவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண் ணெய் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங் களுக்கு தந்துள்ளதை ரத்து செய்து அரசே முடிவெடுக்க வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களின் ஆலோசனையின்படி வருகிற 10.9.2018 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் நடைபெறவுள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறச் செய்கிற வகையில் இந்த கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று  (8.9.2018) நடைபெற்றது.

சர்வாதிகார மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசையும், மாநில அரசையும் கண்டித்து மக்கள் நலன் காக்க தமிழகத்தில் பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்து ழைப்பை வழங்கிட அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள், வியாபார சங்க அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள், ஓட்டல் சங்கங்கள், பேருந்து, லாரிகள், ஆட்டோ சங்கங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு பிரிவினர் ஆதரவை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த போராட்டத்தை மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங் களில் விரிவுபடுத்தி நடத்துவதென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பாரத் பந்த் மூலம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்தி வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

இரா.கிரிராஜன், பேராசிரியர் கான்ஸ்ட ன்டைன் (திராவிட முன்னேற்றக் கழகம்), வீ.அன்புராஜ், வீ. குமரேசன் (திராவிடர் கழகம்), ஆறுமுக நயினார், உதயகுமார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),    கே.எம். நிஜாமுதீன், எஸ்.ஏ. இப்ராகிம் மக்கி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மல்லை சி.இ. சத்யா (மறுமலர்ச்சி தி.மு.க.), வன்னிஅரசு, எஸ்.எஸ். பாலாஜி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), எம்.எச். ஜவாஹிருல்லா, பி.எஸ். ஹமீது (மனிதநேய மக்கள் கட்சி),  ஈ.ஆர். ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி),   ஏ. தர்மராஜ் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), பி.வி. கதிரவன் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்), நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.அய். கட்சி (தமிழ்நாடு), தி. வேல்முருகன்  (தமிழக வாழ்வுரிமைக் கட்சி),   துரை மாதேஸ் (ஆதி தமிழர் பேரவை),  எம்.கண்ணன் (சமத்துவ மக்கள் கழகம்), ஏ.ஷேக் முகைதீன் (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner