எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.14  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவரின் விண்ணப்பத்தில் தவறு உள்ளதாகக் கூறி பணி நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற ரிசர்வ் வங்கி ஊழியரான மனோஜ் குமார், தான் அரசுப்பணியாளர் இல்லை என தேர்வுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததால், அவருக்கு பணி நியமனம் வழங்க டிஎன்பிஎஸ்சி மறுத்து விட்டது.

டிஎன்பிஎஸ்சியின் இந்த உத்தரவை எதிர்த்து மனோஜ் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவு சரியானது தான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, மனோஜ்குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் , பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட  அமர்வில்  அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ரிசர்வ் வங்கிப்பணி அரசுப்பணி அல்ல. அங்கு பணி புரிபவர்களை அரசுப் பணியாளர்களாகக் கருத முடியாது. எனவே மனுதாரர் தான் அரசு ஊழியர் இல்லை என விண் ணப்பத்தில் சரியான தகவலைத் தான் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர் ஏற்கெனவே நேரமுகத்தேர்வில் பங்கேற்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென விண்ணப்பத்தில் தவறு உள்ளதாக கூறி அவருக்கு பணி நியமனம் வழங்கப் படவில்லை. எனவே மனுதாரருக்கு ஒரு வார காலத்துக்குள் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விளையாட்டு உதவித் தொகை பெற

மே 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.14 கால்பந்து,  கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டலப் பிரிவு சார்பில் வழங்கப்படும்

உதவித் தொகை பெற மே 3  -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இளம்  விளையாட்டு வீரர்,  வீராங்கனைகள் மற்றும் விளை யாட்டுத் துறையில் திறமை மிக்கவர்களை, குறிப்பாக பிற் படுத்தப்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களை  ஊக்குவித்து, அவர்களது விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் விதமாக, இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டலப் பிரிவு உதவித் தொகை வழங்க உள்ளது.

அதன்படி, 2019- 2020 ஆம் ஆண்டுக்கு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத் தீவுகள் மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களும், 18 முதல் 24 வயது வரை உள்ள கிராமப்புற, நகர்ப்புற மாணவர்,  மாணவர் அல்லாதோரும்  விண்ணப்பிக்கலாம்.

கால்பந்து (ஆண்கள்), ஆக்கி (ஆண்கள்),  கிரிக்கெட் (ஆண்கள்),  டேபிள் டென்னிஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்),  பேட்மிண்டன் (ஆண்கள் மற்றும் பெண்கள்),   பளு தூக்குதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்),  தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப்  பிரிவுகளில் திறமை மிக்கவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3 ஆகும். மேலும்,  விவரங்களுக்கு இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner