எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், ஏப்.15, சேலம் & சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப் படும் என, சேலத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சேலம் -சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 277 கி.மீ. தூரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்களை கையகப் படுத்தும் பணி நடந்தது. விவசாயிகள் தற்கொலை முயற்சி, நிலத்தில் படுத்து போராட்டம் என பல கட்ட போராட் டத்தையும் கண்டுகொள்ளாமல் காவல் துறை பாதுகாப்புடன் விளைநிலங்களில் நடுகல் நடப்பட்டது. இதற்கிடையே இந்த திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இருந்தபோதிலும் தடையை மீறி காவல் துறை பாதுகாப்புடன் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் முயற்சி நடந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர். இந்நிலையில் உயர்நீதிமன்றம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு அடியோடு தடை விதித்து கைப்பற்ற நிலங்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும்படி கடந்த 7ஆம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.  இதனால் மகிழ்ச்சிஅடைந்த 5 மாவட்டங் களை சேர்ந்த விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களில் மண்ணைத் தொட்டு கும்பிட்டும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

பாமகதான் வழக்கு தொடர்ந்தது. எனவே அரசு மேல் முறையீடு செய்யாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் தர்மபுரி தொகுதி வேட்பாளருமான அன்புமணி உறுதி கூறினார். ஆனால் இதை விவசாயிகள் நம்பவில்லை. அதி முக, பாமக, பாஜ கூட்டணி வேட்பாளர் களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். பல இடங்களில் அதிமுக கூட்டணி வேட் பாளர்கள் நுழைய விடாமல் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனி சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னி லையிலேயே சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி என்றும், முதல்வர் எடப்பாடி இதில் ஆர்வமாக இருக்கிறார் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தது விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள் ளாக்கியது. சேலம் பிரச்சார கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சேலம் -சென்னை 8 வழி பசுமைச்சாலை மிக முக்கியமான திட்டம். தற்போது, இந்த திட்டம் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி வளர்ச்சிக்கு, இத்திட்டம் முக்கியமான ஒன்றாகும். சந்தை மதிப்பை விட கூடுதலான இழப்பீட்டை விவசாயிகளுக்கு தருவோம்.

இதுதொடர்பாக முதல்வரும் அக் கறையுடன் தொடர்ந்து கேட்டுக் கொண் டிருக்கிறார். விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். மேடையில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாமக நிறுவனர் ராமதாசும் அமைதியாக இருந்தனர்.

இதுகுறித்து 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு போராட்ட குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், நிதின்கட்கரி அறிவிப்புக்கு மேடையிலேயே தங்கள் எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் தெரிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ராமதாசாவது மேடையில் இருந்து வெளிநடப்பு செய் வார் என்று எதிர்பார்த்தோம், அதை செய் யாமல் அமைதியாக இருந்ததன் மூலம் எட்டு வழி சாலை திட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததாகவே கருதுகிறோம். எனவே அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்றார்.

விவசாயிகள் எதிர்ப்பால்

பலத்த பாதுகாப்பு

8 வழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, நேற்று பிரச்சாரத்திற்காக சேலம் வந்தபோது  அவருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டலாம் என கருதி பலத்த காவல்  போடப்பட்டிருந்தது. வழிநெடுகிலும், 10 அடிக்கு ஒரு காவலர் வீதம் சுமார் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர். 8 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால், பிரதமர், குடியரசுத் தலைவ ருக்கு வழங்கும்  அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்து தனி விமானத்தில் அவர் பெங்களூரு புறப் படும் வரை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

கருப்புக் கொடியுடன்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் அதிமுக கூட்டணி சார்பில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத் தில் நேற்று, சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி திரண்டனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத் திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். விவசாயி களின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துண்டுபிரசுரம் வினியோகம்: சென்னை- சேலம் வரையிலான 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று, செங்கம் டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வரும் தேர்தலில் பாஜ- அதிமுக கூட்டணியை புறக்கணிப்பது என தீர்மானித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner