எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லக்னோ, பிப்.4 உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி யிடுகிறது.  முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில், அக்கட்சி யின் தலைவர் மாயாவதி சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஹாத்ராஸ் நகரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கும். அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளும், இட ஒதுக்கீடும் பறிபோகும் சூழ்நிலை ஏற்படும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளைத்தான் பா.ஜ.க பின்பற்றிவருகிறது. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், மும்முறை தலாக், பொது சிவில் சட்டம் என சர்ச்சைக்குரிய விஷயங்களிலேயே பா.ஜ.க கவனம் செலுத்தி வருகிறது. போலி கருத்துக் கணிப்புகளை நடத்தி, தங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக நாடகமாடுகின்றனர். எதிர்க்கட்சியினரைப் பற்றி தவறான செய்திகளை ஊடகங்கள் மூலம் பரப்புகின்றனர். இவ்வாறு மாயாவதி பேசினார்.

தமிழகத்திற்கு காவிரி நீரை  திறந்துவிட இயலாதாம்:  கூறுகிறார் கர்நாடக அமைச்சர் பட்டீல்

பெங்களூரு, பிப்.4 கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பட்டீல் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாட்டிற்கு தினமும் 2 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அணைகளில் தற்போது தண்ணீர் இல்லை. எப்படி தண்ணீரை திறக்க முடியும்?. அதனால் தண்ணீரை திறந்துவிட இயலாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும். காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கர்நாடக அரசு சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கி உள்ளோம்.

எந்தெந்த அம்சங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனைக் காக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பழைய ரூபாய் நோட்டுக்கள்  மாற்றியதில் முறைகேடு 156 வங்கி ஊழியர்கள் இடைநீக்கம்

புதுடில்லி, பிப்.4 ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றியதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் இதுவரை, 156 வங்கி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவையில், நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 156 பேர் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை மற்றும் சி.பி.அய்., மூலம், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கிகளும் அறிக்கை அளித்துள்ளன.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள், 11 பேரும் இந்த முறைகேடு புகார் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் கண்ட றியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை, பிப்.4 முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்னை லயோலா கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. சாதாரண மனிதனுக் குப் பயன்படும்படி பட்ஜெட் அமையவில்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன் அடையும் பட்ஜெட்டாக இல்லை. ரூ.1,000, ரூ.500 நோட் டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பண பிரச்சினைக்கு பட்ஜெட்டில் புதிதாக எந்த திட்டமும் அறி விக்கப்படவில்லை. சிறு மற்றும் குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. பணம் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் வருமானம் எந்த விதத்திலும் உயரவில்லை. பொருளாதாரமும் வளர்ச்சி அடைய வில்லை. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சினைகள் இன்னும் 2 வருடம் வரை தொடரும்.

அரசு மக்களுக்காக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த நாடு ஜனநாயக நாடாக விளங்கும். ஆனால் இந்த அரசு மக்களுக்காக செயல்படவில்லை. நம் நாட்டில் ஏழைகள் மற்றும் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் தான் 50 சதவீதம் உள்ளனர். நாட்டின் உற்பத்தி குறித்து பட்ஜெட்டில் சொல்லும்படி இல்லை. முதலீடு மற்றும் உற்பத்தி கடந்த ஒரு ஆண்டில் குறைந்து உள்ளது. மக்களின் நேரடி வரியை மட்டுமே குறைத்துள்ளது. மறைமுகமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. விவசாயத்திற்கு ஒதுக்கிய நிதி குறைவு. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வேதனைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை - திருச்சி காலை நேர விமான சேவைகள்  

திருச்சி, பிப்.4 சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்கும், காலை நேர விமான சேவையை, பிப்., 20 முதல், 'ஏர் கார்னிவால்' நிறுவனம் துவக்குகிறது.

தினமும் காலை, 8:10 மணிக்கு, சென்னையிலிருந்து புறப்படும் ஏர் கார்னிவால் விமானம், காலை, 9:15 மணிக்கு திருச்சி வந்தடையும். மீண்டும் திருச்சியிலிருந்து, காலை, 9:45 மணிக்கு புறப்படும் விமானம், 10:40 மணிக்கு சென்னை சென்றடையும். இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner