எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.7 காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காட்டி நடவடிக்கையை தாமதப்படுத்த முயற்சிப்பதா? என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அதிருப்தியுடன் தனது குரலை உரக்கமாக எழுப்பினார்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது திருச்சி சிவா, “காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என்று மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அப்படியென்றால், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியத்தையும் நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைப் பதில் மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதில் வருமாறு: காவிரி விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வரவில்லை. இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் முடிவை நடுவர்மன்றம் ஏற்றுக் கொண்டால், அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிக்கும்‘ என்றார் பியூஸ் கோயல்.

ஆனால், அவரது பதிலில் திருப்தியடையாத திருச்சி சிவா உரத்த குரலில், “காவிரி விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு உள்ளேயும் நாடாளுமன்றதுக்கு உள்ளேயும் மத்திய அரசு கூறுகிறது. பிரச்னையை திசை திருப்பும் வகையில் கருத்துகளை அமைச்சர் மழுப்பலாக வெளியிடுகிறார்.

அவரது பதில் திருப்தியளிக்கவில்லை; ஏற்புடை யதாக இல்லை. குறைந்தபட்சம் பதில் அளிக்கும் நடைமுறையைக் கூட அமைச்சர் பின்பற்றாமல் தவறாக வழிநடத்துகிறார்’ என்றார்.

இதனால் அவையில் சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது. முன்னதாக, இதே விவகாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா எழுப்பினார். அவருக்கும் மேற்கண்ட பதிலையே பியூஷ் கோயல் அளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner