எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பத்ரக், ஏப்.10 வகுப்புக் கலவரம் ஏற்பட்டதையடுத்து ஒடிசாவின் கடலோர நகரமான பத்ரக்கில் பதற்றம் நீடிக்கிறது. இதையடுத்து நகர மக்களின் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காவல் துறை சார்பில் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. எனினும், அந்த நகரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஒடிசா அரசு தெரிவித்திருக்கிறது.

முகநூல் பக்கத்தில் ராமர், சீதை குறித்து அவதூறான கருத்துகளை சிலர் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, பத்ரக் நகரில் வெள்ளிக்கிழமை வகுப்பு மோதல் வெடித்தது. நகரில் ஆங்காங்கே வன்முறை நிகழ்ந்ததால் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை 5-அய் ஒட்டியிருக்கும் நகரின் முக்கிய சந்தை சனிக்கிழமை வெறிச்சோடிக் கிடந்தது. ஆங்காங்கே கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டதால் புகை வெளியேறிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. கடந்த இரு தினங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக இரு வகுப்பினரைச் சேர்ந்த சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“முன்னெச்சரிக்கையுடன் மாவட்ட நிர்வாகம் செயல்படாத காரணத்தால்தான் நிலைமை மோசமானதற்குக் காரணம். முன்னர் இருந்த ஆட்சியர் கடந்த 31ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆட்சியரை இன்னும் நியமிக்கவில்லை’ என்று நகர மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், உள்ளுர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பத்ரக் நகரில் நிலைமையைச் சமாளிக்க மேலும் இரு மத்திய துணை ராணுவப் படைப் பிரிவுகளை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஒடிசாவைச் சேர்ந்தவரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாநில காவல்துறை டிஜிபி கே.பி.சிங் கூறுகையில், “கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தல், சூறையாடல் என ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் பெரிய அளவில் வன்முறையோ உயிர்ப் பலியோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. எனினும் நகரில் ஒட்டுமொத்த சூழ்நிலை கட்டுக்குள் இருக்கிறது’ என்று

தெரிவித்தார். பத்ரக் நகரில் முகாமிட்டிருக்கும் மாநில உள்துறைச் செயலர் ஆசித் திரிபாடியுடன் கே.பி.சிங்கும் உடன் இருக்கிறார். “சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பதிவிடப்படும் செய்திகள், வதந்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அமைதி திரும்ப மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நகர மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கே.பி.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner