எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமராவதி, ஜூன் 5 ஆந்திராவில் புகார் எண் 1100யை போனில் டயல் செய்து தகவல் தந்து விட்டால்போதும், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரே நேரடியாக வீட்டுக்கு வந்து, வாங்கிய பணத்தை திருப்பி தரும்படியான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், அதிக லஞ்சம் புரளும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தையும், ஆந்திரா 2வது இடத்தையும் பிடித்தது. இந்த அவப்பெயரை போக்க ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, புகார் எண் 1100யை அறிவித்தது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் இதில் புகார் தரலாம். புகார் உண்மையாக இருந்தால், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரே பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு நேரடியாக வந்து பணத்தை தருவதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சமே. அதாவது, லஞ்சப்புகாருக்கு உள்ளான ஊழியர் கடும் நடவடிக்கையில் இருந்து தப்ப, தான் வாங்கிய லஞ்சப்பணத்தை உரியவரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இதற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு நடவடிக்கைக்கு பயந்து அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘கடந்த சில நாட்களில் 12க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். முறை யான விசாரணைக்கு பின்னரே இதில் நடவடிக்கை எடுக்கப் படுகிறது’ என்றார். ரூ.500, ரூ.1000 லஞ்சத்தை திருப்பி கொடுத்த வர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் புகார் தரும் அனைவருக்கும் பணம் திரும்ப கிடைத்து விடும் என அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. 1100 புகார் மய்யத்திற்கு இதுவரை  லஞ்சம் தொடர்பாக 3000 புகார்கள் குவிந்துள்ளன. அது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அரசு ஆலோசகர் பிரபாகர் கூறி உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் மக்களவைக்கு
5 எம்.பி.க்கள் மட்டுமே 100 சதவீத வருகை

டில்லி, ஜூன் 5 கடந்த 3 ஆண்டுகளில் மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே 100 சதவீதம் வருகை புரிந்துள்ளனர்.

545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் உத்தர பிரதேச மாநிலம் பாண்டா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட பாஜக எம்.பி. பைரான் பிரசாத் மிஸ்ரா, 1,468 விவாதங்களில் பங்கேற்று, வருகைப் பதிவேட்டில் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்த இடங்களில் பிஜூ ஜனதா தள எம்.பி. குல்மானி சாமால் (ஜெகத்சிங்பூர் - ஒடிசா), பாஜக எம்.பி.க்களான கோபால் ஷெட்டி (வடக்கு மும்பை - மகாராஷ்டிரா), கிரித் சோலாங்கி (அகமதாபாத் மேற்கு - குஜராத்), ரமேஷ் சந்தர் கவுசிக் (சோனிபட் - அரியாணா) ஆகியோர் உள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வருகைப் பதிவு 59 சதவீதமாகவும், அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியின் வருகை 54 சதவீதமாகவும் உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கேயின் வருகை முறையே 91 சதவீதம் மற்றும் 92 சதவீதமாகவும், அக்கட்சி எம்.பி.க்களான ஜோதிராதித்ய சிந்தியா, ராஜீவ் சதாவ் ஆகியோர் முறையே 80 சதவீதம் மற்றும் 81 சதவீதமாக வருகைப் பதிவு உள்ளது. இதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாம் சிங் யாதவ் (79 சதவீதம்), தருமபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் (45 சதவீதம்), உத்தரப்பிரதேச முதல்வரும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் (72 சதவீதம்) ஆகியோரின் வருகை உள்ளது.

பாஜக எம்.பி. ஜியான் சிங் (மத்திய பிரதேசம்), திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், நடிகருமான தீபக் அதிகாரி (மேற்கு வங்கம்) ஆகியோர் முறையே 8 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என மிகவும் குறைந்த வருகை பதிவு எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளனர்.

எம்.பி.க்களில் 22 பேர், பாதி அல்லது அதற்கும் குறைவான முறையே மக்களவைக்கு வருகை புரிந்துள்ளனர். மக்களவையின் வருகைப் பதிவேட்டில் பிரதமர், சில அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கையெழுத்துப் போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அசாமில் வெள்ளம்: 13,000 பேர் பாதிப்பு

பிஸ்வநாத், ஜூன் 5 அசாமில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமின் பிஸ்வநாத், ஜோர்கத், லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரண மாக அங்குள்ள 28 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேபோல், மலைப் பகுதிகள் நிறைந்த திமாஹசோ-வில் ஏற்பட்ட நிலச்சரிவு காரண மாக பராக் பள்ளத்தாக்கு பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை சில்சாருக்கும் லும்டிங்-க்கும் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப் பட்டது. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் வெள்ள மீட்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner