எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிறீஹரிகோட்டா, ஜூன் 6 ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி1 ராக்கெட் சுமந்து சென்ற ஜிசாட் 19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக திங்கள்கிழமை (ஜூன் 5) விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 20 விநாடிகளில் ஜிசாட் 19 செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. இதன் மூலம் அதிக எடை கொண்ட செயற் கைக்கோளை முதல் முறையாக வெற்றி கரமாக விண்ணில் நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

இந்த வெற்றிகரமான திட்டத்தின் மூலம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் முதல் கட்ட வெற்றியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இஸ்ரோவிடம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி என 2 வகை ராக்கெட்டுகள் உள்ளன. இந்த ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் நிலைநிறுத்த முடியும். விண்கலத்துடன் மனிதர்களைச் சுமந்து செல்லும் திறன் கிடையாது. இதற்காக ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராட்சத ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்துள்ளது.
அதிக எடை: ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளாகும். இதன் எடை 3,136 கிலோ. இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மறறும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதி நவீன கியு பாண்ட் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை பொருத்தப் பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம் குறித்து துல்லியமான தகவல்களைத் தெரி விக்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் அதன் சுற்று வட்டப் பாதையில் குறைந்தபட்சம் 170 கி.மீ. அருகிலும், அதிகபட்சம் 35 ஆயிரத்து 975 கி.மீ. தொலைவிலும் ராக்கெட் புறப்பட்ட 16-ஆவது நிமிடம் 20 விநாடிகளில், 3 கட்டங்களாகப் பிரிந்து நிலை நிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் 19 மூலம் இந்தியா வில் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்த முடியும்.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் 3 வீரர்களை விண்வெளிக்குச் சுமந்து செல்ல முடியும். இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த படியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத் தில் இயங்கும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ராக்கெட், 4 டன் எடை வரையிலான செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது. மேலும் 10 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வட்டப் பாதையில் நிலை நிறுத்தும்.

இந்த முதல் முயற்சி வெற்றி பெற்றதால் இனி 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவ வெளிநாட்டு ராக்கெட்டை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை. வெளிநாடு களின் செயற்கைக்கோள்களையும் வர்த்தக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் முயற்சி சாத்தியப்பட்டுள்ளது என்கின் றனர் விஞ்ஞானிகள்.

இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக் கெட், இஸ்ரோவின் 12-ஆவது ஜிஎஸ் எல்வி வரிசை ராக்கெட்டாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner