எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, ஜூன் 11  மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி
தவறிவிட்டதாக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவுகான் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி, அவற்றை நிறைவேற்றவில்லை. மத்திய பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நசிந்துள்ளன. விவசாயத் தொழில் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 3300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் போது பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாகவும், விளை பொருள்கள் மீது குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதாகவும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்தப் போவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், இதுவரை எந்தவித வாக்குறுதியும் அவர் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கப் போவதாக அறிவித்துள்ளது எப்படி என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த உற்பத்திப் பொருள் விகிதம் (ஜிடிபி) வீழ்ச்சி அடையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேபோல நாட்டின் மொத்த உற்பத்திப் பொருள் விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை. பண மதிப்பிழப்பு மூலம் எவ்வளவு பழைய செலாவணிகள் சேகரிக்கப்பட்டன எத்தனை புதிய செவாவணிகள் அச்சடிக்கப் பட்டன என்பதை தெரிவிக்க மத்திய அரசு தயங்குகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலையை கொய்து வீசிவிட்டு சென்றுள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் உடல் நலனை விசாரித்திருக்கிறார் பிரதமர் மோடி. மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை நமதுநாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடுகளின் நம்பிக்கையைப் பெறுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. நீண்ட காலமாக நல்லுறவு பேணிவரும் அண்டை நாடுகள்கூட இந்திய வெளிநாட்டுக் கொள்கை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

வெளிநாட்டு விவகாரங்களை பிரதமர் மோடியே கவனித்து வருவதால் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வேலையில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் நிலை திருப்திகரமாக இல்லை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner