எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல்

பெங்களூரு, மே 16 கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் 78 இடங்களிலும் தேவெ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ், கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஓர் இடத்தில் வென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, மஜதவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு உள்ளது. மஜத மாநிலத் தலைவர் குமார சாமி முதல்வராக, காங்கிரஸ் நிபந்தனை யற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, தேர்தலில் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை காங்கிரஸ் முன்னெடுத்தது. இதனை, மஜதவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டணி உருவானது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகள் நீங்கலாக 222 தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாயின. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக 115 இடங்களில் முன்னணியில் இருந்தது.  பகல் 12 மணி அளவில் பாஜக முன்னிலை வகிக்கும் இடங்கள் 110 ஆக குறைந்தது.  அதன்பிறகு, 2 மணி அளவில் நிலைமை மாறியது. அதுவரை 60 முதல் 65 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ், 78 இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் 104 ஆகக் குறைந்தன. தொடக்கத்தில் 50 இடங்களில் முன்னிலை வகித்த மஜதவின் எண்ணிக்கை படிப்படி யாகக் குறைந்து 37 ஆனது. மஜத ஆட்சி அமைக்க ஆதரவு

இதனிடையே, பெங்களூருவில் முகா மிட்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சித்தராமையாவுடன் ஆலோ சனை நடத்தினர். பாஜகவை ஆட்சி அமைக்காமல் தடுக்கும் வகையில் கட்சி மேலிடத்தின் ஒப்புதலின்பேரில், மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இதை பகிரங்கமாக காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், முதல்வர் பதவியை மஜதவுக்கு விட்டுக் கொடுக்கவும் காங்கிரஸ் முன் வந்தது.

மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகவுடாவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேசினார். இதையடுத்து, எச்.டி.குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

பதவி விலகல்: கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகினார்.

ஆட்சியமைக்க உரிமை கோரும் எடியூரப்பா, குமாரசாமி

கருநாடக பாஜக தலைவர்களும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள பிரதிநிதிகளும் தனித்தனியே மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஆளுநர் மாளிகையின் முடிவுக்காக கருநாடகம் மட்டுமின்றி நாடே காத்திருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner