எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*தலா ரூ.15 இலட்சம் - ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதிகள் என்னாயிற்று?

* ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை 30 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்தது ஏன்?

* பெண்கள் - தாழ்த்தப்பட்டோர் - சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்.டி.ஏ. - உங்கள் ஆட்சியில்

புதுடில்லி, ஜூலை 21- மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. பிரதமர் அச்சத்துடன் காணப்படுகிறார். அந்த அச்சமே நாட்டின்மீது கோபமாக மாறுகிறது என்றார் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி.

மக்களவையில் நேற்று (20.7.2018) நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்மீது சரமாரியாகக் குற்றஞ்சாட்டி அவர் உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்குவதாகக் கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன், பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதை மக்களவைத் தலைவர் ஏற்கவில்லை. ஆனால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சீனிவாஸ் அளித்த நம்பிக்கையில்லாத் தீர்மான மனுவை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வெள்ளி காலை முதல் அவையில் நடைபெற்றது.இதில் காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பாஜக எம்.பி. காலா பேசிய பின், காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி பேச மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதித்தார். ராகுல் காந்தி பேச துவங்கியவுடன், பாஜக உறுப்பினர்கள் அமளியிலும், ரகளையிலும் ஈடுபட் டனர். அவையில் பிரதமர் இருந்தார். தமதுகட்சியினரின் ரகளையை அவர் ரசித்தார். தொடர் ரகளையால் அவை ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அப்போது ராகுல் கடுமையான முறையில் மோடி அரசை சாடி பேசினார்.

ஜூம்லா ஸ்டிரைக்

ராகுல் காந்தி பேசியதாவது: தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லாவின் உரையை கவனித்தேன். அவரது பேச்சில் இருந்து உங்களைப் பீடித்துள்ள (மோடியைப் பார்த்து) ஒருவிதமான அச்சத்தையும், வேதனையையும் நான் உணர் கிறேன். 21 ஆ-ம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்துக்குப் பலியானவர் நீங்கள்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தஅரசியல் ஆயுதத்துக்குப் பெயர் வெற்றுப் பேச்சு தாக்குதல் (ஜும்லா ஸ்டிரைக்). உங்களின் (மோடி) வெற்றுப் பேச்சுக்கு இலக்கானவர்கள் விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் மற்றும் இந்தத் தேசத்து பெண்கள்தான். இதற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

வாக்குறுதிகள் என்னாயிற்று?

வெளிநாட்டில் இந்தியர்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கூறினீர்கள். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினீர்கள். ஆனால், வெறும் 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள அரசோ 24 மணி நேரத்தில் 400 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங் குகிறது. படித்த பட்டதாரி இளைஞர்களைப் பக்கோடோ விற்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். 2016- ஆம் ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி இரவு 8 மணிக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நீங்கள் கொண்டு வந்தீர்கள்.

நீங்கள் ஏழைகளைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் பணத்தைமட்டுமே வைத்து செலவு செய்கிறார்கள், டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ அவர்களிடம் இல்லை என்பதை உணரவில்லை. இன்று நாட்டில் வேலையின்மை அளவு அதிகரித்து இருக்கிறது. பிரதமர் மோடி பேசியவார்த்தைகள் என்ன ஆனது? நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டி வரியைக் கடுமையாக எதிர்த்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் 5 வகையான ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்துள்ளீர்கள். சிறுவியாபாரிகளை நசுக்கும் வகையில் வருமான வரித் துறையை ஏவிவிடுகிறீர்கள்.

கார்ப்பரேட்டுகளின் கூட்டாளி

பிரதமர் மோடி எப்போதும், வசதி படைத்தவர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் ஆதர வாகத்தான் பேசுகிறார், சிறு வணிகர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஏழை மக்களிடம் இருந்தும், சிறு வர்த்த கர்களிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு. பிரதமரின் முகம் ஜியோ விளம்பரத்தில் வந்தபோதே, அவர் பணக் காரர்கள் குறித்துத்தான் அக்கறை கொள்வார் எனப் புரிந்து கொண்டேன். இந்த நாட்டின் காவல்காரர் என்று பிரதமர் கூறி வருகிறார். உண்மையில் பிரதமர் மோடி மக்களின் காவல்காரர் அல்ல, பெருநிறு வனங்களின், பணக் காரர்களின் பங்குதாரர். ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதமர் மோடி இருவரும் உண்மையை இந்தத் தேசத்திடம் இருந்து மறைக்கிறார்கள். ஆனால், பிரான்சு குடியரசுத் தலைவரை  நான் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுகையில், ரபேல் போர் விமானம் குறித்த எந்தவிதமான ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று என்னிடம் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு குறிப்பிட்ட சில பெரும் பணக் காரர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்பு இருக்கிறது.

அந்த தொடர்பால்தான் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கி இருக்கிறார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. பாது காப்புத் துறைக்கான அமைச்சரவை இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கியதா என்பது குறித்து பிரதமர் மோடி இந்த அவையில் விளக்கம் அளிக்கவேண்டும். இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்திடமும், கருநாடக இளைஞர்களிட மும் தர வேண்டிய ஒப்பந்தத்தை எடுத்து ரூ.30 ஆயிரம் கோடி கடன் உள்ள தொழிலதிபருக்கு கொடுத்து விட்டார் பிரதமர்.

அச்சமே கோபமாக மாறுகிறது

என் கண்களைப் பார்த்து மோடியால் பேச முடியாது. என்னைப் பார்ப்பதற்கு ஒருவிதமான அச்சம் இருப்பதால், என் கண்களைப் பார்த்து பேசாமல் செல்கிறார். இதில் இருந்து பிரதமர் மோடி உண்மையானவர் இல்லை என் பதைப் புரிந்து கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது; நீங்கள் பயப்படுகிறீர்கள். பிரதமர் மோடி விவசாயிகளின் பயிர்க் கடன்தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். ஆனால், நிதி அமைச்சரோ பயிர்க் கடன் தள்ளுபடி இல்லை என்கிறார். உலக நாடுகளில் பெட்ரோல் விலை சரிந்து வருகிறது. ஆனால், நம்நாட்டில் நிலையே வேறு. இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மோடி தனது நண்பர்களின் பைகளில் பணத்தைச் சேமிக்க விலையை உயர்த்தி உதவி வருகிறார். நாட்டின் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்களின் பாது காப்பு நிலை சரிந்துள்ளது. இது நாட்டின் தோற்றத்தை உலக அளவில் மாற்றி இருக்கிறது.அப்பாவி மக்களைத் தாக்கி கொலை செய்தவர்களுக்கு பாஜக அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறந்து கருத்து கூறவில்லை. தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, டாக்டர் அம்பேத்கர் மீதான தாக்குதலாகும். பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றியையும், தோல்வியையும் சமமாகவே பார்ப்போம்.ஆனால், இவர்களோ தங்களிடம் இருந்துஅதிகாரம் இழப்பதை எளிதாக விட்டுவிட மாட் டார்கள். அவர்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அந்த அச்சம்தான் நாட்டின் மீது கோபமாக மாறுகிறது. என்னைப் பார்த்து நீங்கள் சிறுபிள்ளை(பப்பு) என்று அழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்பும் இல்லை.  இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

முகமது சலீம்

தனது வார்த்தைகளை நிறைவு செய்த வுடன், ராகுல் காந்தி பிரதமர் மோடி அமர்ந் திருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பதிலுக்கு பிரதமர் மோடி அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ராகுல்காந்தி தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாதுகாப்பு அமைச்சர்நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட் டோர் ஆளுங்கட்சி தரப்பில் பேசினர். எதிர்க்கட்சிகளின் தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் முகமது சலீம் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

ரபேல் விமானம் : நாடாளுமன்றத்தில்

நிர்மலா சீத்தாராமன் கூறியது சரியா?

புதுடில்லி, ஜூலை 21   ஒரு பொய்யை மறைக்க மற் றொரு பொய்யைச் சொல்லி உண்மையை மூடிமறைக்க பாஜக அரசு தொடர்ந்து முயன்றுவருகிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரகவிமானம் வாங்கிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி சரியான நேரத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரபேல் விமானம் தொடர்பாக காங்கிரசு ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது உண்மைதான், ஆனால் துஸ்லார் விமான நிறுவனம் உதிரி பாகங்கள் தொடர்பான விவகாரத் தில் முரண்டு பிடித்ததால் விமானம் வாங்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2008-ஆம் ஆண்டில் போர் விமானம் வாங்க மன்மோகன் சிங் தலைமை யிலான அரசு வழங்கிய ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்து விட்டார். அதாவது ஒப்பந்தம், விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்துமே முழுமையாக முடிவிற்கு வந்து விட்டது. இதை மோடி அரசின் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மக்களவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரபேல் ஊழல் தொடர்பாக ராகுல் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது நிர்மலா சீத்தா ராமன் காட்டிய சான்று ஆவணங்கள் அனைத்தும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட அதாவது ஆங்கிலத்தில் (டெர்மினேட்) செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் காகிதங் களாகும். 2016-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுடன் செய்த ஒப்பந்தம் குறித்து விவரம் கேட்டால் 2008-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு போட்ட ஒப்பந்த காகிதங்களை எடுத்துவந்து காண் பித்தார்.

2015-ஆம் ஆண்டு மோடி அரசு செய்த சில பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் நடந்துள்ளதாக 4 வழக்குகளை சி.பி.அய் பதிவு செய்துள்ளது. இதில் ரபேல் போர் விமான ஒப்பந்தம், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, அதில் மறைக்கப்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவரங்கள் குறித்து சி.ஏ.ஜி ஆய்வு செய்து வருகிறது. இதை பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். தனது அனுமதி யில்லாமல் ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதற்காக இவரை அமைச்சர் பதவியில் இருந்து மோடி நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரபேல் உள்ளிட்ட மோடி தலைமையில் செய்யப்பட்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் நடந்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிந்த பிறகு, ரத்து செய்து காலாவதியாகிப்போன காகிதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது கையில் எடுத்துக் கொண்டு உண்மையை மறைத்து  நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner