எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொழும்பு, மார்ச் 2 இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மாயமானவர்கள் பற்றிய விவரங்களை திரட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலகத்துக்கான உறுப்பினர்களை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த சிறப்பு அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்படும். அந்தச் சட்டத்தின்படி, மாயமானவர்கள் தகவல் தொடர்பு அலுவலகத்துக்கு 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், சட்ட நிபுணர் சலியா பெரிஸ் தலைமையின் கீழ் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக நீடிப்பார்கள். இவர்களைத் தவிர, தமிழ் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 2 பேரும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அலுவலகம், உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். மேலும், போரின்போது காணாமல் போன உயிர் பிழைத்தவர்களை, அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், அரசுப் படையினர் 5 ஆயிரம் பேர் உள்பட சுமார் 25 ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை இலங்கை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு நியமித்தது. மேலும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, காணாமல் போனோர் தகவல் தொடர்பு அலுவலகத்தை இலங்கை அரசு அமைத்தது. அந்த அலுவலகத்தின் உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப் பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner