எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனிவா உலக சுகாதார மய்யத்தில்
மருத்துவர் மோகன் காமேசுவரன் ஆய்வுரை

ஜெனிவா, மார்ச் 6 2050ஆம் ஆண்டில் 900 மில்லியன் மக்களுக்கு மேல் கேட்கும் திறன் குறைபாட்டுடன் பிறக்கும் அபாயம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியதுடன் தமிழ்நாட்டை பொறுத்தவரை மூன்றில் இரு பங்கு காதுக் கேளாமை, உறவுமுறைத் திருமணங்களால் நிகழ்கின்றன என்று பிரபல காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) நிபுணர் மருத்துவர் மோகன் காமேசுவரன் கூறினார்.

சென்னை காது, மூக்கு, தொண்டை நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவப் பேராசிரியர் உயர்திரு மோகன் காமேசுவரன் அவர்கள் உலக சுகாதார மய்யத்தின் (கீலீஷீ) அழைப்பின் பேரில் மார்ச் 2ஆம் தேதியன்று ஜெனிவா - வில் உரையாற்றினார். இது மார்ச் 3-ஆம் தேதி வரும் உலக காது கேளாமை தினத்தை முன்னிட்டு நிகழ்ந்தது.

அவரது உரை "காது மற்றும் கேட்கும் திறன் பற்றிய செயல்பாட்டுக் கொள்கைகள்" என்பதாகும். இதில் அவர் நாடு முழுவதும் காது கேளாமையை எதிர்த்துப் போரிட்ட தனது பரந்த அனுபவத்தை எடுத்துரைத்தார். மேலும் உலக நாடுகளான இலங்கை, வங்காள தேசம், நேபாளம் மற்றும் நைஜீரியாவில் இந்த காக்ளியர் இம்ப்ளாண்ட் திட்டத்தை துவங்கி வைத்த தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். உரை வருமாறு:

"நுணுங்கிய கேள்வியரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது"

நுட்பமான சொற்களை கேட்டறியாதவர்கள் நல்ல பேசும் திறன் உடையவராக இருக்க முடியாது என்னும் வள்ளுவர் வாக்கில் உள்ள அறிவியல் உண்மையையும், கேட்கும் திறனின் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்த மருத்துவர் காமேசுவரன் அவர்கள் தனது உரையில் காதுகேளாமையே உலகில் வேகமாக வளர்ந்து வரும் பிறவி குறைபாடென சுட்டிக் காட்டினார். (உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை முழு செவிட்டுத் தன்மையுடன் பிறக்கிறது). இது உலக மக்களைப் பாதிக்கும் 2ஆவது முக்கிய குறைபாடாகும். (466 மில்லியனுக்கு மேலும் வளர்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது)

2050-ஆம் ஆண்டில் 900 மில்லியனுக்கு மேல் மக்கள் கேட்கும் திறன் குறைபாட்டுடன் இருப்பர் என உலக சுகாதார மய்யம் மதிப்பிட்டுள்ளது. அதில் வளரும் நாடுகளுக்கே பெருஞ்சுமையாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இதை சீர் செய்ய உலக அளவிலான வருடாந்திர செலவு மட்டும் 750 - 790 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கார்மேகமூட்டத்தின் ஒரு விடிவெள்ளி வெளிச்சக்கோடு, காதுகேளாமை முற்றிலுமாக சீர் செய்ய கூடிய ஒரு குறைபாடு என்பதேயாகும்.

உலகின் பல இடங்களில் நடந்த செலவுக்கு ஏற்ற பயன்பாடு குறித்த ஆய்வுகள் இன்றைய நிலையில் ஹியரிங் எய்ட் மற்றும் காக்ளியர் இம்ப்ளாண்ட் போன்ற காது கேளாமையை சரிசெய்யும் கருவிகளே மிகச்சிறந்தது என குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு பிறவி காது கேளாமை உறவுமுறை திருமணங்களால் நிகழ்கிறது. ஆகவே இது தடுக்கக் கூடிய ஒன்றாகும். மேலும் அவர் காது கேளாமையை சீர் செய்ய மற்றும் ஒழிக்க பாதை வகுத்த தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அதற்கு முன்னோடியான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி எடுத்துரைத்தார். இத்திட்டம் மூலமாக முற்றிலும் இலவசமாக 3000க்கும் மேற்பட்ட காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை தமிழகத்தில் நடந்துள்ளது. உலக சுகாதார மையத்தின் பிற உறுப்பு நாடுகளால் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டது என்று பேசினார்.

நம் தமிழகத்தின் தனித்துவமாக நாம் உருவாக்கிய "ஒரு மய்யப் புள்ளியில் இருந்து பன்முனை பயன்தரும்"  பேச்சு பயிற்சி முறை பெரும் பாராட்டினையும் வரவேற்பினையும் பெற்றது. இது வளரும் நாடுகள் பின்பற்ற தகுந்த ஒரு சிறந்த முன்மாதிரியாக ஏற்கப் பட்டது.

மேலும் அவர் தேசிய காது கேளாமை தடுப்பு திட்டம் மற்றும் மத்திய அரசின் தேசிய காப்பீட்டு திட்டத்தின் முக்கிய பங்கினை பற்றியும் சுட்டிக் காட்டினார்.

2025ஆம் ஆண்டில் காதுகேளாண்மை அற்ற தமிழகத்தை உருவாக்க ஒரு பாதை வகுத்து அது பிற வளரும் நாடுகளுக்கும் ஏற்றது எனத் தெளிவுபடுத்தி தனது உரையை நிறைவு செய்தார் மருத்துவர் மோகன் காமேசுவரன் அவர்கள்.