எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7 பேருக்கு தண்டனை நிறைவேற்றம்

டோக்கியோ, ஜூலை 8 ஜப்பானில் கடந்த 1995இல் நடத்தப்பட்ட சுரங்க ரயில் நச்சுத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஓம் ஷின்ரிக்யோ' மத அமைப்பின் தலைவர் ஷாகோ அஸஹாரா மற்றும் அவரது 6 சீடர்கள் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.

இதுகுறித்து அந்த நாட்டு நீதித் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ஜப்பான் சுரங்க ரயில்கள் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதல் தொடர்பாக, ஓம் ஷின்ரிக்யோ அமைப்பின் 7 உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது' என்று தெரிவித்தனர்.

13 பேரது உயிர்களை பலி கொண்ட அந்தத் தாக்குதல் நடந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதல் முறையாக அதில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில், ரயில் பயணிகளைக் குறிவைத்து கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி நச்சுத் தக்குதல் நடத்தப்பட்டது. ஓடும் ரயில் பெட்டிகளுக்குள் அதி பயங்கரமான சாரின்' ரசாயனப் பொருள் திரவ வடிவில் வீசப்பட்டதில், 13 பயணிகள் உயிரிழந்தனர்; சுமார் 50 பேருக்கு நிரந்தர உடல்நல பாதிப்பு ஏற்பட்டது; 900-க்கும் மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குற்றங்கள் அதிகம் நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என்று பெயர் பெற்றிருந்த ஜப்பானில், பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தகைய கொடூரத் தாக்குதல் உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அந்தத் தாக்குதலை, ஷாகோ அஸஹாரா தலைமையிலான ஓம் ஷின்ரிக்யோ மத அமைப்பினர் நடத்தியது, விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு எதிராக போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஓம் ஷின்ரிக்யோ பொறுப்பேற்காவிட்டாலும், டோக்கியோ சுரங்க ரயில் தாக்குதலிலும், அதற்கு முன்னரே நடைபெற்றிருந்த சிறிய அளவிலான தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், 189 ஓம் ஷின்ரிக்யோ அமைப்பினர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவர்களில், அமைப்பின் தலைவர் ஷாகோ அஸஹாரா உள்ளிட்ட 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 7 பேர் தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளதை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner