அமெரிக்கா வாழ் தமிழரும், தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்து வருபவருமான முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் 21.7.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சென்னை - அடையாறு இல்லத்திற்கு வந்து சந்தித்து உரையாடினர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தற்சமயம் அமெரிக்காவில், விவசாயிகளுக்கு அவர்களது விளை பொருளை விற்பனை செய்து அவர்களுக்கு உரிய நியாயமான பங்கினை அளித்து வரும் ரபோ பன்னாட்டு வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெர்க்லி பல்கலைக் கழகத்தில் 'இளங்கோ வென்ற தமிழ்'; 'கம்பன் கொன்ற தமிழ்' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்க பல்கலைக் கழகங்களின் தமிழ் மொழி ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டும் வருகை தரும் பேராசிரியராகவும் கல்விச் சேவை ஆற்றி வருகிறார்.
தமிழ் மொழிபற்றி தாம் மேற்கொண்ட ஆய்வினை "அறியப்படாத தமிழ்மொழி" எனும் தலைப்பில் புத்தக மாக எழுதியுள்ளார். தமிழ்மொழியின் சிறப்பினை இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது அந்தப் புத்தகத்தின் சிறப்புகளுள் ஒனறாகும். தாம் எழுதி வெளிவந்துள்ள அந்தப் புத்தகத்தை தமிழர் தலைவரிடம் அளித்து மகிழ்ந்தார். மேலும் 2019இல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்க வேண்டும் எனும் தமது ஆவலை வேண்டுகோளாக வைத்தார். தமிழர் தலைவர் ஆய்வு நூலாக தாம் எழுதிய பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ள 'கீதையின் மறுபக்கம்' நூலினை முனைவர் கண்ணபிரானிடம் வழங்கினார்.