எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை - பெரியார் திடலில் அறிவியல் விளக்கக் குடும்ப விழா

இந்த நூற்றாண்டின் முழு சந்திரகிரகணம் 2018 ஜூலை 27 இரவு 11.44 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் ஜூலை 28 அதிகாலை 1 மணி வரை நிகழவிருக்கிறது. பொதுவாக சந்திர கிரகணங்கள் பல நிகழ்வது வாடிக்கையானதுதான். 2018ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சந்திர கிரகணம் பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி என்ன முக்கியத்துவம்  இந்த சந்திர கிரகணத்திற்கு உள்ளது. ஆம்! பல சிறப்புகள் நிகழவிருக்கின்ற சந்திரகிரகணத்திற்கு உண்டு.

21ஆம் நூற்றாண்டின் அரிய சந்திர கிரகணம்

* 2018இல் நிகழும் சந்திர கிரகணம் ஒரு முழுமையான கிரகணம் ஆகும்.

* முழுகிரகணம் நிகழும் மொத்த நேரம் 1 மணி 43 நிமிடங்கள்

* இப்படிப்பட்ட சந்திர கிரகணம் 21ஆம் நூற்றாண்டில் நிகழுவது இதுவே முதல் முறை.

* இத்தகைய முழுமையான, நீண்டநேரம் நிகழக்கூடிய சந்திர கிரகணம் 152 ஆண்டுகளுக்கு முன்புதான் நடைபெற்றது. விளக்கமாகச் சொன்னால் இந்த மாதிரி முழு சந்திரகிரகணத்தைப் இதற்கு முன் பார்த்தோர் எவரும் இப்பொழுது உயிருடன் இல்லை. இப்பொழுது பூமியில் வாழும் அனைவரும் பார்க்கக்கூடிய முழுமை யான நீண்ட நேரம்  நிகழக்கூடிய சந்திரகிரகணம் இதுதான்! * இதுபோன்ற முழு சந்திரகிரகணம் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்  (2028 இல்) பின்னர் தான் நிகழும்.

உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் (வட அமெரிக்காவைத் தவிர்த்து) அனைவரும் நேரடி யாகப் பார்க்கக்கூடிய சந்திரகிரகணம் இது. (அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வடஅமெரிக் காவில் வசிக்கும் மக்களும் தொலைக்காட்சி, யு டியூப் மூலம் 2018 சந்திர கிரகணத்தைப் பார்த்து வியக்க முடியும்; மகிழவும் முடியும்)

ஆன்மிகக் கருத்தை  தூள் தூளாக்கிய அறிவியல் விளக்கம், பின்னணி:

உலகில் நடைபெற்று வந்த, மனிதரை வியப்படைய வைத்த நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்வதை விடுத்து அதற்கு வெறும் நம்பிக்கை சார்ந்த கருத்துகளை உருவாக்கி வருவதை அன்று முதல் இன்று வரை ஆன்மிக உலகம்  தொடர்ந்து செய்து வருகிறது. இயற்கையாக நிகழும் கோள்களின் இடைவிடா  நகர்வால் நடைபெறும் கிரகணங்களுக்கு - ராகு, கேது எனும் பாம்புகள் கோள்களை விழுங்குவதாக பொய்யை புனைந்து விட்டு, வியப்படைய வைத்திடும் இயல்பு நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆன்மிகம். அதோடு  மட்டுமல்லாமல் பொய்யை, மூலதனமாக வைத்து கிரகணதோசம், கிரகண நேரத்தில் உணவு உண் ணக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என  ஆதிக்கம் சார்ந்த மேன்மையை நிலைநாட்டி, பெரும் பான்மை மக்களை அறியாமையில் வைத்து விட்டது ஆன்மிகம். மூடநம்பிக்கைகளின் மொத்த வடிவம்தான் ஆன்மிகம். இதற்கு முற்றிலும் மாறாக இயற்கை, வானவியல் நிகழ்வுகள். ஏன் நிகழ்கின்றன? எப்படி நிகழ்கின்றன? இதனால் மனிதருக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பதை ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் அனைவருக்கும் புரியும் வகையில்- உண்மை நிலையினை விளக்கும் வகையில் தகுந்த ஆதாரங்களுடன் தெரிய வைத்து வருகிறது அறிவியல் உலகம்! ஆன்மிகப் பொய்மையினை தோலுரித்துக் காட்டுவதில் அறிவியல் உலகம் மானுட மேம்பாட்டுப் பணியினை அமைதியாகச் செய்து கொண்டு வருகிறது.

கிரகண நிகழ்வுகளுக்கு அறிவியல் கூறும் உண்மை

சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்களில் பூமியும் ஒன்று. பூமியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமி தானாகச் சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. இந்த பூமியைச் சுற்றிவரும் கோளான சந்திரன் தானாகவும் சுழன்று வருகிறது - இந்த அடிப்படை அறிவியல் உண்மையினை எடுத்துச் சொன்னால் இதில் என்ன வியப்பு? என இன்றைய தலைமுறையினர் நினைத்திடுவர். இந்த அடிப்படை உண்மையினை பொதுவெளியில் கூறுவதற்கு தடைவிதிக்கப்பட்டு, உண்மையினைக் கூறியவர்கள் தண்டனைக்குள்ளான கால கட்டமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை இன்றைய தலைமுறையினர் குறிப்பாக இளைய தலைமுறையினர் வியப்பாகக் கருதிட வேண்டும்.

சுழற்சியின் அடிப்படையில் உள்ள வானவெளிப் படிமங்களான  சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது கிரகண நிகழ்வு நடைபெறுகிறது. சூரியனின் ஒளிக்கதிர் சந்திரன் மீது படாமல் பூமி தடுத்து விடும் பொழுது அது சந்திர கிரகண நிகழ்வாகிறது. சூரியனின் ஒளிக்கதிர் பூமியின் மீது படாமல் சந்திரன் தடுத்து விடும் பொழுது அது சூரிய கிரகண நிகழ்வாகிறது. சந்திர கிரகண நிகழ்வு முழுநிலவு (பவுர் ணமி) நாளன்று நடைபெறும் சூரிய கிரகணம் மறை நிலா  (அமாவாசை) நாளன்று நடைபெறும். சூரியனின் ஒளிக்கதிர் பூமியின் மீதோ, சந்திரன் மீதோ படர்வது முழுமையாகவோ, பகுதியாகவோ மறைக்கப்படலாம். மறைக்கப்படும் அளவை வைத்து முழுக்கிரகணம், பகுதிக் கிரகணம் என அழைக்கப்படுகின்றன.

முழுநிலவினை பால் நிலா (Milky Moon)  என்று  கூறுவார்கள். சந்திர கிரகணத்தில் சூரியனின் ஒளிக்கதிர் சந்திரன் மீது படர்வது முற்றிலும் மறைக்கப்படும் நேரத்தில் மறைக்கப்பட்ட சந்திரனின் விளிம்புகள் தகதக என ஒளிர்வதால் முழுசந்திர கிரகணம் செந்நிலா (Blood Moon) எனவும், வருணனை  செய்யப்படுகிறது. கிரகணம் நிகழும் நேரங்களில் சூரியனிடமிருந்து வெளிக் கிளம்பும் - மறைக்கப்படும் கோள்களிலிருந்து பிரதிபலிக்கப்படும் ஒளிக்கதிர் மனிதர் உடல்களில் படுவதால் விரும்பத்தகாத - உடல் நலனுக்கு கேடு விளைவித்திடும் எனும் கருத்தினை அறிவியல் உலகம் இதுவரை ஏற்கவில்லை; காரணம் ஆதாரம், அடிப்படை இல்லாத ஆன்மிகக் கருத்துகள் அவை. மூடநம்பிக்கையினை வளர்த்து விடும் போக்கை உள்ளடக்கியது  இந்த ஆன்மிகக் கருத்துகள். அடிக்கடி நிகழும் நடப்புகள் மீதான ஆர்வம் குறைவாக இருப்பது இயல்பு; அரிதாக நடக்கும் இயற்கை நிகழ்வுகளை  - அதன் பின்னணியினை உணர்ந்தால் அதனைப் பார்த்து இன்புறும் செயல் எழுவது மிக மிக இயல்பு. என்னதான் அறிவியலை - குறிப்பாக வானவியலை பாடமாகப் படித்துத் தேறியவர் களும் மிக மிக இயல்பான கிரகண நிகழ்வுகளை அச்சத் துடன் கருதுகின்ற வகையில் ஆன்மிகம் அவர்களது அறிவினை முழுமையாக மழுங்கடித்துள்ளது. அச்சத்தின் விகிதம் மனிதருக்கு மனிதர் வேறுபட்டாலும், ஆன் மிகத்தின் முழு வீச்சினை புனிதமாகக் கருதி கிரகண நிகழ்வுகளுக்கு புராண பின்புலத்தை பலமாகத் தூக்கிப் பிடிப்பவை இந்துத்துவ -  பார்ப்பனீயம்தான். கிரகணம் பற்றிய மூடநம்பிக்கைகள்தான் இந்துத்துவ - பார்ப் பனீயத்தின் அடிப்படைப் பலமாகும். மூடநம்பிக்கையினை முறியடிக்கும் பிரச்சாரப் பணிகளை பெரியார் தம் இயக்கமாகிய பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு, அறிவியல் அமைப்புகள் கடந்த காலங்களில் - ஒவ்வொரு கிரகண நிகழ்வின் பொழுதும் செய்து காட்டி வருகின்றன.

அறிவியல் வளர்ந்த சூழலிலும் ஆன்மிகத்திற்கு வக்காலத்து வாங்கும் கல்வியாளர்களும் உள்ளனர். ஏன்? 1969ஆம் ஆண்டு நிலவில் தடம் பதித்த மனிதச் செயல் களை பொய் எனக் கூறி வரும் வீணர்களும் மேற்கத்திய நாடுகளில் அமெரிக்காவிலேயே இருந்து வருகின்றனர். மானுட மேம்பாடு மற்றும் மகிழ்ச்சி கலந்த மன நிறைவுக்கு ஆதாரமாக இருப்பது மனிதரிடம் உள்ள ஆற்றல் ஆகும். மனித ஆற்றலை முடக்குகின்ற எதுவும் தகர்க்கப்பட வேண்டியவையே.

சென்னை -பெரியார் திடலில் அறிவியல் விளக்கம்

அந்த அடிப்படையில் பெரியார் இயக்கத்தின் செயல் தளங்களுள் ஒன்றாகிய பகுத்தறிவாளர் கழகம், சந்திரகிரகணம் 2018 பற்றிய ஒரு புரிதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை -பெரியார் திடலில் நாளை ஜூலை 27 அன்று பூமி - நிலா சுற்றுவதை பார்க்கலாம் வாங்க எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடத்துகிறது. மாலை தொடங்கி முழு சந்திரகிரகணம் நிறைவு பெறும் அடுத்த நாள் அதிகாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறார்கள் பங்கேற்கும் அறிவியல் விளையாட்டுகள், அறிவியலாளர் படத்திறப்பு மற்றும் உரை வீச்சு, அறிவியல் பாடப் புகட்டலுக்கு பங்களித்து வரும் அறிவியல் ஆர்வலர்களுக்குப் பாராட்டு, அறிவியல் குறித்த இசை நிகழ்ச்சி, விண்வெளி அறிவியல் - நிலவில் தடம் பதித்த நிகழ்வு திரையிடல், கிரகண நேரத்தில் உணவு உண்ணக் கூடாது எனும் மூடநம்பிக்கையினை முறிடியடிக்கின்ற வகையில் அனைவரும் பங்கேற்கும் நிலாச் சோறு,  நிறைவாக தொலைநோக்கி மூலம் பூமியின் நிழல் நிலவில் படர்ந்து விலகுவதையும் மற்றும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களைக் காணும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

வயது வேறுபாடு இல்லாமல் பெரியவர் முதல் சிறார்-  குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் வெளிவரக்கூடாது எனும் மூடநம்பிக்கையினைத் தகர்த்திடும் வகையில் மகளிரும் பெரும் அளவில் பங்கேற்றிட உள்ளனர். இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று அறிவியல் விளக்கம் பெற்று - மென்மேலும் பெற்று அறிவார்ந்த, அறிவியல் மனப்பான் மையுடன் வாழ்ந்திடுவோம், குடிமக்கள் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமை உணர்ந்து, இணைந்து பணியாற்றி பங்களிப்போம். வாரீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner