எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக.12 பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பகிரங்கமாக வாக்களித்ததற்காக, அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் இம்ரான்கான் தேர்தல் ஆணையத்திடம் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டார்.

இந்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்க பெரும்பான்மை தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், இம்ரானின் மன்னிப்பை ஏற்க 3 உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டதாகவும், ஒரு உறுப்பினர் மன்னிப்பை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்தது.

இம்ரானின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இசுலாமாபாதின் என்.ஏ.53 தொகுதியில் அவர் வெற்றி பெற்றதற்கான அறிவிக்கையை வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதையடுத்து, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சியில் அந்தக் கட்சி இறங்கியுள்ளது.

தேர்தலின்போது, வாக்களிப்பதற்கான மறைவிடத்துக்குச் செல்லாமல் ஊடகங்களின் முன்னிலையில் பகிரங்கமாக இம்ரான் வாக்களித்ததாகவும், இதன் மூலம், ரகசிய வாக்களிப்புக்கான விதிமுறையை அவர் மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், பகிரங்கமாக வாக்களித்தது குறித்து எழுத்து மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இம்ரானுக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் தொடர்ந்தே அவர் தனது மன்னிப்புக் கடிதத்தை ஆணையத்திடம் வழங்கினார். இம்ரான் மீதான விதிமீறல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவரது வாக்கு செல்லாததாக்கப்படுவதுடன், அவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக. 18-இல் பதவியேற்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்று அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner