எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக.20 பாகிஸ்தானில் புதிதாக ஆட்சிய மைத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், 21 உறுப்பினர்களைக் கொண்ட தனது அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலான வர்கள், முன்னாள் அதிபர் முஷாரஃபின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, புதிய அமைச்சரவையின் பட்டியலை தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபாவத் சவுத்ரி வெளியிட்டார்.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 21 அமைச்சர்களில் 16 பேர், ஏற்கெனவே முஷாரஃப் ஆட்சிக் காலத்தின்போது முக்கிய அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் ஆவர்.

சவுத்ரி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, மூத்த தலைவர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசில் இவர்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அவர் தலைநகர் டில்லியில் இருந்தது நினைவுகூரத் தக்கது.

மற்றொரு முக்கியத்தும் வாய்ந்த இலாகாவான பாதுகாப்புத் துறை, பெர்வெய்ஸ் காட்டக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர், 2013ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை கைபர்-பாக்துன்கவா மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

இம்ரான் அரசின் நிதியமைச்சராக ஆசாத் உமர் நியமிக்கப் பட்டுள்ளார். இவர், 1971-ஆம் ஆண்டின் இந்திய - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவ உயரதிகாரி முகமது உமரின் மகன் ஆவார். இதுதவிர, முன்னாள் அதிபர் முஷாரஃபின் ஆட்சிக் காலத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த ஃபராக் நசீம், தாரிக் பஷீர் சீமா, குலாம் சார்வர் கான், ஜுபைதா ஜலால், ஃபாவத் சவுத்ரி, ஷேக் ரஷீத் அகமது, காலித் மக்பூல் சித்திக்கி, ஷாஃப்கத் மெஹ்மூத், மக்தூம் குஸ்ரோ பக்தியார், அப்துல் சராக் தாவூத், இஷ்ரத் ஹுசைன், அமீன் அஸ்லாம் ஆகியோர் இம்ரானின் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner