எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தியாகதுருகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அழைப்பு

 

தியாகதுருகம், மே 22- பெரியாரை எதிர்த்து அழிக்க முடியவில்லை. பெரியாரை அணைத்து அழிக்கலாம் என்பதுதான் அவர்களுடைய திட்டம்; அதனை எதிர்த்து செயல்படவேண்டும். இதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்தப் பொதுக்கூட்டம் பயன்படுகிறது. உங்களுக்கு இதை மேலும் விளக்குவதற்கு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கல்லக்குறிச்சியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

19.5.2018 அன்று தியாகதுருகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

நேற்று (18.5.2018) வந்த ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்த செய்தியை படிக்கிறேன்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.....

சென்னை, அம்பத்தூரில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான மாநாடு நடந்தது. இந்த மாநாட் டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பை அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர்? இவர்களுக்கு எந்தமாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது?

பதில்:- சென்னையில் நடைபெறும் 20 நாள் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட 310 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு இந்திய வரலாறு, நம்முடைய கலாச்சாரம், பண்பாடுகள், பாரம்பரிய இந்து தர்மம், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர பழனி, கள்ளக்குறிச்சி, திருப்பூரில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- இதுபோன்ற முகாம்கள் நடத்தி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கால் ஊன்ற பார்க்கிறதா?

பதில்:- தமிழ்நாட்டில் திராவிடத்தின் நிலையால் இருந்த தடங்கல்களை பெரிய அளவில் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது. பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதுடன், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும் என்றும் நம்புகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் எவ்வளவு கிளைகளுடன் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது?

பதில்:- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முடியாது என்று பலர் பேசுகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கால் மட்டுமல்ல, ஆழமாக வேரூன்றி வெகு காலமாகிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில், தாலுகா அளவில் 1,788 கிளைகளை தொடங்கி சமுதாயப்பணி ஆற்றி வருகிறது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

கேள்வி:- இளைஞர்கள் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் உள்ளனர்?

பதில்:- ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரியாரை அணைத்து அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள்

இங்கு பெரியாரை எதிர்த்து அழிக்க முடியவில்லை. பெரியாரை அணைத்து அழிக்கலாம் என்பதுதான் அவர்களுடைய திட்டம். புத்த மதத்தை அப்படித்தான் அழித்தார்கள். அம்பேத்கர் அவர்களை எதிர்த்து அழிக்க முடியாததை, ஊடுருவி அணைத்து ஆரியம் அழிக்கப் பார்க்கும். அதுதான் ஆரியத்தினுடைய முறை.

கல்லக்குறிச்சியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு!

மனுதர்மம், வருணதரும தர்மம் என்ன சொல்கிறது - நம்மை சூத்திரன், பஞ்சமன், இழிஜாதி என்று சொல்பவை. அப்பேர்ப்பட்ட அவைகளை நாம் இன்றைக்கு எதிர்கொள்ளவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆபத்து. இப்பொழுதுதான் அரசியல் சூழ்ச்சி, வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும், தமிழகத்தில் அவர்களுடைய கணக்கைத் திறக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவ்வளவு இளைஞர்கள் இங்கே வந்திருப்பதைப் பாராட்டுகிறேன். இந்தக் காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒன்று திரளவேண்டும். மதச்சார்பின்மை சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும். தேர்தலானாலும், தேர்தலுக்கு அப்பாற்பட்டும், சமூகத்தில் நல்லிணக்கம் இருக்கவேண்டும். எல்லோரும் அண்ணன், தம்பிகளாக இருக்கவேண்டும். சமத்துவமும், சகோதரத்துவமும் இருக்கவேண்டும். ஜாதி ஒழியவேண்டும்; மூடநம்பிக்கை ஒழிய வேண்டும், பெண்ணடிமை நீங்க வேண்டும் என்று சொன்னால், ஆர்.எஸ்.எஸ். கொள்கை இதற்கு நேர் விரோதமானது. ஆகவே, அதனை எதிர்த்து செயல்படவேண்டும். இதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்தப் பொதுக்கூட்டம் பயன்படுகிறது. உங்களுக்கு இதை மேலும் விளக்குவதற்கு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கல்லக்குறிச்சியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாநாட்டிற்கு நீங்கள் எல்லோரும் வரவேண்டும்.

ஏற்கெனவே அவர்கள் முயற்சித்தார்கள்;

திராவிடர் கழகம்தான் தடுத்தது!

ஏனென்றால், கல்லக்குறிச்சி போன்ற பகுதிகளில், நீண்ட நாள்களுக்கு முன்பு மதக்கலவரம், ஜாதிக்கலவரத்தை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்தபொழுது, திராவிடர் கழகம் தலையிட்டுதான் அதனை ஒன்றுமில்லாமல் செய்தது.

இங்கே எல்லோரும் நாம் அண்ணன், தம்பிகளாக வாழ்கிறோம். ஆனால், ஆர்.எஸ்.எஸ். உள்ளே நுழைவது, பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் நுழைவது போன்றது. இப்பொழுது அவர்களுக்கு வந்திருப்பது பதவிக்காய்ச்சல்.

இதையெல்லாம் நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எனவே, இக்கூட்டத்திற்கு வந்திருக்கின்ற நண்பர்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்.

எச்சரிக்கை செய்வது எங்களுடைய வேலை!

நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்; எங்களுடைய வேலையே முன்னாலே எச்சரிக்கை செய்வதுதான். ஆபத்து, ஆபத்து, ஆபத்து வரப்போகிறது என்று சொல்வதுதான் எங்களுடைய வேலை.

ஆகவே, இவ்வளவு சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!

பழம்பெரும் தோழர்கள் கலைச்செல்வம், பெரியார் நேசன், கவிஞர் சீதா, நம்முடைய பொன்.இராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டு போன்று, பழைய தோழர்களை இந்த ஊரில் நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்றோம்.

எனவே, உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டு, மீண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லக்குறிச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

(முழு உரை பின்னர் வெளிவரும்)

பங்கேற்றோர்

கல்லக்குறிச்சியை அடுத்துள்ள தியாகதுருகத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் கோ.சாமிதுரை, மு.கண்ணன், அ.கூத்தன் நினைவு விழா மேடையில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் மிக எழுச்சியுடன் 19.5.2018 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். தியாகதுருகத்தின் தந்தை, திமுகவின் முன்னோடி மிசா பொன்இராமகிருட்டிணன், விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு, பனப்பாக்கம் புலவர் கு.சீத்தா, திமுக மாநில மருத்துவரணி மருத்துவர்

கோ.சா.குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சு.அருணாசலம், தலைமை கழக சொற்பொழிவாளர் பிராட்லா, மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, நைனார்பாளையம் கழகத் தலைவர் புலவர் கு.அண்டிரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் புலவர் பெ. ஜெயராமன், கல்லக்குறிச்சி ஒன்றிய கழக தலைவர் புலவர் பெரியார் நேசன், தியாகதுருகம், ஒன்றிய கழக தலைவர் மொ.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக தலைவர் ம.சுப்பராயன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நிறைவாக சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மேனாள் மண்டல செயலாளர் சுயமரியாதை சுடரொளி மு.கண்ணன் அவர்களின் இல்லம் சென்று அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு அமுதா கண்ணன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் தியாகதுருகம் பகுதியிலிருந்து முனியன், (திராவிட மாணவரணி அமைப்பாளர்) தலைமை யில் 25 தோழர்கள் கழகத்தில் மகிழ்வோடு இணைந்தனர். ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் அரசண்முகம் தலை மையில் தோழர் பெரியசாமி உட்பட 10 தோழர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். தமிழர் தலைவர், கழகத்தில் இணைந்த 35 தோழர்கட்கும் பயனாடை அணிவித்து,  நூல்களை வழங்கினார்.

கூட்டத்தில் திராவிடர் கழக வளர்ச்சிக்காக மருத்துவர் இராஜ்மோகன் கண்ணன் ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கினார்.

கல்லக்குறிச்சி ஒன்றிய கழக தலைவர் புலவர் பெரியார்நேசன், திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு ரூபாய் 25,000 நன்கொடை வழங்கினார். இக்கூட்டத்தில் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில இ.அணி செயலாளர் த.சீ.இளந்திரையன், ரிஷிவந்தியம் திமுக தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் ம.விஜய் ஆனந்த், தியாகதுருகம் மேனாள் ஒன்றிய செயலாளர் சதா மகாலிங்கம்,  திமுக மாவட்ட பிரதிநிதி கோ.விசயகுமார், மாவட்ட கழக மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், ஓவிய இமயம் மு.கலைச்செழியன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சே.வ.கோபண்ணா, திருவண்ணமாலை மாவட்ட வழக்குரைஞரணி ராம்குமார், விருத்தாசலம் மாவட்ட செயலாளர் முத்து கதிரவன்,. உளுந்தூர்பேட்டை ஒன்றிய கழக தலைவர் செல்வ சக்திவேல், செயலாளர் அரங்க பரணீதரன், அமைப்பாளர் இராவணன், சங்கராபுரம் ஒன்றிய கழக தலைவர் பெ.பாலசண்முகம், திருக்கோவிலூர் ஒன்றிய கழக தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம், முகையூர் ஒன்றிய கழக தலைவர் இரா.சித்தார்த்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், செயலாளர் இராதா கிருட்டிணன், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.கரிகலான், செயலாளர் பகவான்தாஸ், அமைப்பாளர் நா.பெரியார், மேலூர் கிளைக்கழகத் தலைவர்கள் ஆ.பழனிமுத்து, மு.சேகர் வடகரைத் தாழனூர், ம.சு.தினேஷ், கூட்டேரி கல்லக்குறிச்சி ஆகியோரும் சங்கராபுரம் நகர ப.க. தலைவர் ஆ.இலட்சுமிபதி, செயலாளர் இரா.நாராயணன், க.அலம்பலம், ப.க. தலைவர் சி.சாமிதுரை, மேலூர் கே.முத்துவேல் ஆகியோரும், கலைஞர் பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்த தி.இரா.நெடுஞ்செழியன், முரு.சங்கர், தியகதுருகம் தொ.மு.ச.வைச் சேர்ந்த கே.ராஜா, காமராஜ், வீர. சக்திவேல், ஜெகன்னாதன், வீரப்பன் ஆகியோரும், அறுகளத்தூர் சம்பத், கூத்தக்குடி மதிப்புறு முனைவர் கொளஞ்சி, பொரசக்குறிச்சியைச் சேர்ந்த வீரமுத்து, பாலகிருஷ்ணன், வடதொரசலூர் மா.பாலு, புக்களம் நடேசன், உதயமாம்பட்டு கொளஞ்சி, மு.பரசுராமன், ரவி, கணேசன், காந்தி நகர் கோபால், கஸ்தூரிபாய் நகர் அன்பழகன், தியாக தாமோதரன், வேங்கைவாடி வி.முத்துசாமி, மூங்கில்துரைப்பட்டு திமுக, வழக்குரைஞர் மு.அசோக், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், முத்தமிழ்ச் சங்கத்தலைவர் நல்லாசிரியர் பெ.நாகராசன், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க செம்பியன், அரசம்பட்டி திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத் தலைவர் வெ.சவுந்திரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் கல்லக்குறிச்சி நகர கழக தலைவர் ச.சுந்தரராசன் நன்றி கூறினார்.

நான் அன்றைக்குக் கொடுக்கவேண்டிய  வழிச் செலவை

69 ஆண்டுகளுக்குப் பின் தமிழர் தலைவருக்கு கொடுக்கிறேன்

பெரியார் பெருந்தொண்டர் இராமகிருஷ்ணனின் (வயது 92) உணர்வுபூர்வமான உரை

தியாகதுருகம், மே 22-  ஆசிரியர் அவர்கள், அவ ருக்காக வாழவில்லை. மக்களுக்காகத்தான் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். நான் அன்றைக்குக் கொடுக்கவேண்டிய வழிச்செலவை 69 ஆண்டுகளுக்குப் பின் தமிழர் தலைவர் அவர்களிடம் கொடுக்கத்தான் இங்கே வந்தேன் என்றார் பெரியார் பெருந்தொண்டர் இராமகிருஷ்ணன்.

19.5.2018 அன்று தியாகதுருகத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பெரியார் பெருந் தொண்டர் இராமகிருஷ்ணன் அவர்கள்  உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

இந்த முட்டாளுக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுத்த உங்களுக்கு நன்றி!

அன்பார்ந்த ஆசிரியர் அவர்களின் அறிவுரையைக் கேட்பதற்கு, ஆலோசனைகளைக் கேட்பதற்கு, வாழ்க் கையில் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளைக் கேட் பதற்கு, இன்றைக்கு அவர் பக்கத்தில் நான் அமர்ந்து கொண்டு, உங்கள் முன்னாள் அவருக்கு சரிசமமாக அமர்ந்திருக்கிறேன். அவர் தமிழுக்கு ஆசிரியர், தமிழ்நாட்டிற்கு ஆசிரியர், தமிழக மக்களுக்கு ஆசிரியர். நான் கடைகோடியில் இருக்கிறவன். தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், ‘‘எனக்கு முட்டாள்கள் வேண்டும் என்று’’ அப்பொழுது நான் கல்லக்குறிச்சியில், தந்தை பெரியாரின் காலடியில் அமர்ந்தேன். இன்றைக்கு அதை நான் நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு ஆசிரி யருக்கு பக்கத்தில் அமருவதற்கு இந்த 'முட்டாளுக்கு' ஒரு வாய்ப்பினைக் கொடுத்த உங்களுக்கு, தமிழ் நாட் டிற்கு, தமிழ்நாடு மட்டுமல்ல, இங்கே மேடைக்கு எதிரே இருக்கிற திப்புசுல்தான் கோட்டைக்கு, அந்தக் கோட் டையைப் பார்த்துக்கொண்டு, மலைக்கோட்டையாக இருக்கின்ற எங்களுடைய ஆசிரியர் அவர்களை வணங்கிக் கொள்கிறேன்.

அவரிடம் நான் பேசவில்லை. எங்களுடைய நினை வலைகளை மனதில் ஓடவிட்டேன்.

4.4.1949 அன்று என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தபொழுது, ஒன்றை சொன்னார், என்றைக்கும், எப்பொழுதும் பெரியாரை நினைத்துக்கொள்; பெரியார் கொள்கையைப் பின்பற்றவேண்டும். நான் இன்றைக்கு உங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறேன். வாழ்க, வளர்க என்று சொல்லி சென்றார்கள்.

அன்றைக்கு என்னுடைய திருமணத்தை அவர் நடத்தி வைத்தபொழுது அவருக்கு வழிச்செலவுக்கு நான் பணம் கொடுக்கவில்லை.

தாயை நினைப்பதுபோல்,

தந்தையை நினைப்பதுபோல்...

அதற்குப் பிறகு இன்றைக்கு நான் அவருடைய பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன். ஏறத்தாழ 69 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை நான் பின்பற்றியதுதான். இந்த ஊரில் பெரியார் அவர்கள் நடந்து சென்றபொழுது, அவருக்கு முன்னால் நான் நடந்தே சென்றதுதான் என்னுடைய வாழ்நாளில், தாயை நினைப்பதுபோல், தந்தையை நினைப்பதுபோல் அந்த நிகழ்ச்சியை நினைத் துக்கொண்டு, நான் உங்களைவிட்டுப் பிரியவில்லை. உங்களுடைய உள்ளத்தில் எப்பொழுதும் இருப்பேன் என்று என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித் துக்கொண்டு,

அன்றைக்கு என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தபொழுதுகூட அவருக்கு வழிச் செலவுக்குப் பணம் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்க்கவில்லை. சென்னை பெரியார் திடலுக்குச் சென்ற பொழுதுகூட, தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்துவிட்டு வந்துவிடுவேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பேறாகும்.

நான் தந்தை பெரியாரின், அறிஞர் அண்ணாவின், காமராஜரின், கலைஞரின் பொதுக்கூட்ட உரைகளை யெல்லாம் கேட்டிருக்கிறேன்.

மக்களுக்காகத்தான்

அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார்

இந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆசிரியர் அவர்கள், அவருக் காக வாழவில்லை. மக்களுக்காகத்தான் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு மிகப்பெரிய மன நிம்மதி என்னவென்றால், அவருடைய அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறேனே இதுதான். எனக்கு வயது 92.

நான் இன்றைய வரையில் என் நினைவில் கொள்வது முதலில் என்னுடைய தாய் - தந்தை. அடுத்ததாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அவர்களுக்கு அடுத்ததாக, என்னை ஆளாக்கிய, இல்லற வாழ்க்கையில் இணைத்து வைத்த ஆசிரியர் அவர்கள்தான்.

அன்றைக்கு நான் கொடுக்கவேண்டிய அவருடைய வழிச்செலவை, இன்றைக்கு நான் கொடுக்கத்தான் இந்த மேடைக்கு வந்தேன். அவரோடு சமமாக அமருவதற்கு எனக்குத் தகுதியில்லை. காரணம் என்னவென்றால், அவர் தமிழுக்கு ஆசிரியர், தமிழ் குலத்திற்கு ஆசிரியர், தமிழக மக்களுக்கு ஆசிரியர், தமிழாசிரியர்களுக்கு ஆசிரியர் அவருக்கு அருகில், என்னைப் போன்ற சாதாரணமான ஒரு உருவம் அமருவது என்பது என்னுடைய வாழ்க் கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

ஆசிரியர் அவர்களின் முகத்தில், தந்தை பெரியார் உருவத்தைப் பார்க்கலாம்; அறிஞர் அண்ணா,  உருவத்தைப் பார்க்கலாம்; கலைஞர் உருவத்தைப் பார்க்கலாம்; தளபதி உருவத்தைப் பார்க்கலாம்.

அதுதான் நாங்கள் பெற்ற மிகப்பெரிய பாக்கியமாகும். தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம், மன்னிக்க வேண்டும்.

என்னுடைய மணவிழாவினை நீங்கள்தான் நடத்தி வைத்தீர்கள்.

நான், அன்றைக்குக் கொடுக்கவேண்டிய வழிச்செலவை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு

வைதீகர்கள் கோவிலுக்குப் போனால் காணிக்கை கொடுப்பார்கள்; திருப்பதிக்குப் போனால் காணிக்கை கொடுப்பார்கள்; திருத்தணிக்குப் போனால் காணிக்கை கொடுப்பார்கள்; சிறீரங்கத்திற்குப் போனால் காணிக்கை கொடுப்பார்கள். அதுபோல் எங்களுக்கு நீங்கள்தான் கோவில். நீங்கள்தான் அறிவுரை சொல்பவர். எனவே அந்த வகையில், இந்த ஆயிரம் ரூபாயை நான், அன்றைக்குக் கொடுக்கவேண்டிய வழிச்செலவை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்து, இந்தக் காணிக்கையை செலுத்துகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பெரியார் பெருந்தொண்டர் இராம கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner