எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தொகுப்பு: மின்சாரம்

“திக்கெட்டும் பாய்வோம்!  திராவிடத்தைக் காப்போம்!” என்ற சீரிய முழக்கத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இளைஞர் எழுச்சி மாநாடு கிடுகிடுக்க வைக்கும் வகையில் பட்டுக்கோட்டை என்னும் திராவிடர் கழகத்தின் பாரம்பரிய கொள்கைக் கோட்டத்தில் நேற்று (29.5.2018) மாலை நடைபெற்றது.

மாநாட்டையொட்டி தஞ்சைக் கழக மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கழக மாவட்டங்களைச் சேர்ந்த அத்தனை ஊர்களிலும் மாநாட்டுச் சுவர் விளம்பரங்கள் கண்களைப் பறித்தன. ஓவியர் புகழேந் தியின் கை வண்ணத்தைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. தஞ்சை நகரமெங்கும் பளிச் பளிச் சென்று சுவர் எழுத்துகள் ஒளியுமிழ்ந்தன.

பட்டுக்கோட்டை நகரம் - அடேயப்பா - கம்பீரமாக மண மகன் - மணமகள் போல கவிதையாய் காட்சியளித்தது. கழகக் கொடிக் காடுகள் என்பதா, கழகக் கொடிகளாய் வேயப்பட்ட பந்தல் என்பதா? விவரிக்க வார்த்தையில்லை. இவ்வளவு அடர்த்தியாகக் கொடிகள் பறந்த காட்சி பட்டுக்கோட்டை மாநாட்டுக்குத் தனித்த முத்திரையாகவே அமைந்துவிட்டது.

இது ஒரு மண்டல மாநாடுதான் என்றாலும் குமரி மாவட்டம், நாகை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், குடந்தை மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், இலால்குடி மாவட்டம் பகுதிகளில் இருந்தெல்லாம் தனி வாகனங்களில் வந்து குவிந்தனர். புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள் குறிப்பிடத்தக்க வகையில் வருகை தந்தனர்.

எழுச்சியூட்டும் பேரணி

திராவிடர் கழக மாநாடு என்றாலே அதன் பேரணி தனித்தன்மையானது. மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை அண்ணா அரங்கின் அருகில் இருபால் தோழர்களும் இரா ணுவ மிடுக்குடன் அணிதிரண்டு நின்றனர்.

அண்ணா அரங்கில் தொடங்கிய பேரணிக்கு பட்டுக்கோட் டைக் கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கா.தென்னவன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை ஒன்றிய கழகத் தலைவர் வை.சேகர் தொடங்கி வைத்தார். இவர்க ளுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கைத்தறி ஆடைகளைப் போர்த்தினார்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கழகக் கொடியை ஊர்வலத் தலைவரிடம் கொடுக்க, பேரணி கொள்கை முழக்கத்துடன் புறப்பட்டது! புறப்பட்டது!!

தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.விஜய க்குமார், குடந்தை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.லெனின் பாஸ்கர், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரெ.சுப்பிரமணியன், குடந்தை மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் ந.பெரியார் தினேஷ், பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.ராஜ்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.இராஜ்கிரண், பட்டுக்கோட்டை நகர இளைஞரணி செயலாளர் கா.தென்னரசு, பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளர் வி.பாலையன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி துணை செயாளர் தொ.சமரன் வெற்றிமாறன், பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் டேனியல், பட்டுக்கோட்டை நகர இளைஞரணி துணை செயலாளர் சே.விடுதலைவேந்தன், பட்டுக்கோட்டை நகர இளைஞரணி சே.இங்கர்சால் ஆகியோர் பேரணிக்கு முன்னிலை வகித்தனர்.

அண்ணா அரங்கம் மணிக்கூண்டு, நீதிமன்றம் வழியாக அதிராமபட்டினம் சாலை, பழனியப்பன் தெரு, தலையாரி தெரு, காளியம்மன் கோயில் தெரு, அறந்தாங்கி சாலை, அண்ணா சாலை, பெரிய கடைத் தெரு வழியாக அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலையருகில் மாநாடு மேடையருகே இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.

பெரியார் பிஞ்சுகள் மகளிரணி, இளைஞரணி, கழகத் தோழர்கள் என்று இருவர் இருவராக அணி வகுத்துச் சென்ற காட்சி - கழகக் கட்டுப்பாட்டின் நேர்த்திக்கு இலக்கணமாக இருந்தது.

இனவுணர்வு, பகுத்தறிவு, சமூகநீதி, தமிழ் மாநில உரிமை கள், மதச் சார்பின்மையை வலியுறுத்தி அச்சிட்டுக் கொடுக்கப் பட்ட முழக்கங்களை வீதியெங்கும் முழங்கி வந்தனர்!

கழகக் கொள்கைகளைப் பறைசாற்றுவது போல அம் முழக்கங்கள் அமைந்திருந்தன. பெருமக்களை வெகுவாகக் கவர்ந்தன.

பெண்கள் கைகளில் தீச்சட்டிகள்

கழக மகளிர் அணியினர் அனாசியமாக தீச்சட்டிகளை ஏந்தி வந்த காட்சி பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

“தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே? தீச்சட்டி இங்கே - காளியாத்தாள் எங்கே?” என்று தீச்சட்டிகளை ஏந்திய கழக மகளிர் அணியினர் எழுப்பிய முழக்கங்கள் பெண்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

தெய்வ சக்தியால்தான் தீச்சட்டி ஏந்த முடியும் என்ற மூட நம்பிக்கையின் முதுகெலும்பை இக்காட்சி முறித்து வெற்றிப் புன்னகையை உமிழ்ந்தது.

மகளிரணி தோழர்கள் திரிபுரசுந்தரி, அல்லிராணி, பாக்கி யம், அஞ்சுகம், துரை.அல்போனியா, மாங்காடு இராசலட்சுமி, விடுதலை அரசி, முல்லை, திருவாரூர் மரகதம் கணேசன், பருத்தியூர் மதனிசா, மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, பருத்தியூர் வேம்பு, சதானா ஆகிய மகளிரணி தோழர்கள் தீச்சட்டிகளை ஏந்தி வந்தனர்.

அலகுக்குத்தி கார் இழுத்தல்

கோயில்களில் சிறு சப்பரங்களை அலகு குத்தி இழுத்து வந்து, இதுதான் கடவுள் சக்தி என்று பூச்சாண்டி காட்டு வார்கள்அல்லவா?

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு இதோ பாருங்கள் முதுகில் அலகுக் குத்தி அம்பாசிடர் காரையே இழுத்துக் காட்டுகிறோம் என்பதைச் செயல்படுத்திக் காட்டினர் கழகக் காளையர்கள் உரத்தநாடு நா.அன்பரசு, கோயில்வெண்ணி பொன்.பாலா ஆகியோர்.

அந்தக் காரைச் சுற்றி பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர்கள் மொய்த்துக் கொண்டே இருந்தனர். கடவுள் சக்தி என்பதெல்லாம் வெறும் புருடாதான் என்று அவர்கள் வாய்திறந்தே சொன்னதையும்  கேட்க முடிந்தது. இளைஞர்கள் கழக இளைஞர்களோடு சேர்ந்து கொண்டு கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழக்கமிட்டனர். அந்தளவுக்குப் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்திவிட்டது.

இன்னொரு காட்சியை முக்கியமாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதுதான் பளபளக்கும் சுனையுள்ள அரிவாள் மீது ஏறி நின்ற அதிசயக் காட்சியாகும்.

ஏற்கெனவே அதில் பயிற்சி பெற்றவர்கள்தான். அவ்வாறு செய்ய முடியும் என்ற நிலை மாறி பெரியார் பிஞ்சுகள் வரை அரிவாள் சுனையின் மீது ஏறி நின்று கடவுள் இல்லை என்று உரத்த முறையில் கூறிய காட்சியைக் கண்டு வியக்காதார் யாரும் இல்லை.

பெரியார் பிஞ்சுகள் திருவள்ளுவன், இனியா, வழக்கு¬ ரஞர் அண்ணாதுரை, சோம.இளங்கோவன், சோம.நீலகண் டன் ஆகியோர் அவ்வாறு அரிவாள் மீது ஏறி நின்றவர்கள் ஆவார்கள். எங்கெங்கு மக்கள் திரள் அதிகம் காணப்பட்டதோ அங்கெல்லாம் கூரிய அரிவாள் மீது ஏறி நின்று சூடத்தைக் கொளுத்தி வாயில் போட்டு, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கினார் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன்.

அலகு காவடி - செடல் காவடி

கோயில்களில் இதுபோன்ற காவடிகளையும் எடுத்து வந்து தெய்வ சக்தி என்று மக்களை நம்ப வைப்பார்கள் அல்லவா? அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கழகத் தோழர்கள் இத்தகைய காவடிகளை ஆடிப்பாடி எடுத்து வந்ததோடல்லா மல் கடவுள் மறுப்பு வாசகங்களை யும் விண்முட்ட முழங்கினர்.

செயங்கொண்டம் கணே சன், சிந்தாமணி இராமச்சந் திரன் ஆகியோர் அலகு காவடியையும் மணத்திடல் மகேந்திரன், சிரமேல்குடி சமரன், கோவில்வெண்ணி வீரமணி, மணத்திடல் மணி கண்டன் ஆகியோர் செடல் காவடியையும் எடுத்து வந்த னர்.

சிலம்பாட்டம்

பேரணியின் முகப்பில் திராவிடர்களின் வீரவிளை யாட்டுகள் அரங்கேறின. கறம்பைக்குடி முத்து இடையில் விபத்துக்கு ஆளாகி கால் முறிவு ஏற்பட்டு நலம் பெற்ற நிலையில் வழக்கம் போலவே சிலம்பம் சுற்றி வந்தார். மாநில அளவில் சிலம்பாட்டத்தில் பல பரிசுகளைத் தட்டிப் பறித்தவர்.

கழகத் தோழர்களும் சிறுவர்களும் சிலம்பம் சுற்றி ஆடிப் பாடி வந்தனர். க.சிந்தனை அரசு, மேலவாசல் குணசேகரன் ஆகியோர் சிலம்பாட்டம் செய்து வந்தனர்.

கழகச் சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் ஒலி பெருக்கி மூலம் கழகப் பேரணிக்குப் பராக்குக் கூறிச் சென்று கொண்டிருந்தவர் பேரணியினி நோக்கம் என்ன என்பது பற்றிய கருத்து விளக்கமாக ஒலித்தது அவரது வெண்கலக் குரல்!

சிலைகளுக்கு மாலை

பேரணியின் வழியில் இருந்த தந்தை பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலை, அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலைகளுக்குக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தொலிகளுக்கிடையே மாலை கள் அணிவித்தனர்.

மலையின் அருவி போல் தோன்றி நகரின் முக்கிய வீதிகள், சாலைகள் வழியாக பேராறு போல் பெருக்கெடுத்த பேரணி பட்டுக்கோட்டை நகரை உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிட்டது என்றே சொல்லவேண்டும். மாலை 5 மணிக்குப் புறப்பட்ட இப்பேரணி இரவு 7 மணிக்கு மாநாடு மேடையருகில் நிறைவுற்றது. பேரணியை பொதுமக்களும், இளைஞர்களும், வியாபாரப் பெருங்குடி மக்களும் ஆயிரக் கணக்கில் சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று பார்த்துக் கையசைத்து ஆதரவையும் தந்தனர்.

மாநாட்டு மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

நமது மாநாடு என்றால் சுயமரியாதைத் திருமணம் என்பது, தனி முத்திரை, அந்த வகையில் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.மணியம் அவர்களின் தொழிற்சாலையில் நீண்ட காலம் பணியாற்றிவரும் தோழர் ஜி.பிருத்திவிராஜ்-நளாயினி ஆகியோரின் செல்வன் அருண்ராஜ், எழுவேலி டி.பாலு-நீலா ஆகியோரின் மகள் பி.வானதி ஆகியோருக்கு ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை திராவிடர் கழகத் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டினார். மணமகன் சார்பில் விடுதலை சந்தாவும் மணமகள் சார்பில் உண்மை சந்தாவும் மகிழ்வோடு அளிக்கப்பட்டது.

கழகத்துக்குப் புதிய வரவு!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் கீழ்க்கண்ட தோழர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.

வீரக்குறிச்சியைச் சேர்ந்த ஏ.தாட்சாயிணி, ஏ.அந்தோணியம்மாள், எஸ்.ரதி, ஏ.தமிழரசன், எல்.ஆனந்த், அய்.சிவாஜி, எஸ்.டேனியல், எஸ்.இருதயராஜ், ஜே.அருள், வி.அந்தோணி, கி.அந்தோணி ஜெயசீலன், ஜே.ஆசிர்வாதம் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர். கழகத் தலைவர் இத்தோழர்களை பலத்த கர ஒலிக்கிடையே பாராட்டிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner