எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலைஞரை சந்தித்தோம் கையைக் குலுக்கினார், அடையாளம் கண்டார், புன்னகை பூத்தார்

யார் வெளியே போகவேண்டுமோ - அவர்கள் வெளியே போகாமல் இருக்கும்பொழுது நீங்கள் ஏன் வெளியே நிற்கிறீர்கள்!

சட்டமன்றத்திற்குச் சென்று நீங்கள் முழங்குங்கள்!

சட்டமன்றத்தில் பதிவு செய்கிறார்களோ இல்லையோ - மக்கள் நெஞ்சங்களில் அது பதிவாகும்!

திருவாரூர், ஜூன் 2  நீங்கள் நாளை முதல் சட்ட மன்றத்திற்குப் போகவேண்டும். அவர்கள் தூக்கிப் போடட்டும்; யார் வெளியே போகவேண்டுமோ அவர்கள் வெளியே போகாமல் இருக்கும்பொழுது - நீங்கள் ஏன் வெளியே நிற்கிறீர்கள் - மக்கள் உங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் சட்டமன்றத்திற்குப் போகவேண்டும் - நீங்கள் அங்கே முழங்கவேண்டும். உங்களுடைய உரையை அவர்கள் பதிவு செய்யட்டும்; பதிவு செய்யாமல் போகட்டும். மக்கள் நெஞ்சில் அது பதிவாகும் - அதனை நீங்கள் செய்யவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருவாரூரில் நேற்று (1 .6.2018) மாலை நடைபெற்ற தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நோயோடு போராடி, அதையும் தோற்கடித்து வெற்றி பெறக்கூடிய அளவிற்கு


மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த ஆரூர் மண்ணிலே பிறந்தவருக்கு 95 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா என்று தன்னை வர்ணித்துக் கொண்டபொழுது, மற்ற பதவிகள் எல்லாம் அவர் வகித்த பதவிகள் - அவர் தொடர்ந்து தோல்வியையே கண்டிராதவர். அதுமட்டுமல்ல, போராட்டக் களத்திலே அவர்கள் என்றைக்குமே பின்வாங்கியதில்லை. என்றைக்கும் வாழ்நாள் முழுவதும் போராட்ட வீரராகவோ, போராளியாகவே, இன்றுவரை நோயோடு போராடி, அதையும் தோற்கடித்து வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வரக்கூடிய ஒரு மாபெரும் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்கள், அவருடைய 95 ஆவது வயது தொடங்குகின்ற இந்த நாளில், மக்கள் கடல்போல் திருவாரூரில் கூடியிருக்கின்ற இந்த நேரத்தில், அவர் கோபாலபுரத்தில் அமர்ந்து இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும்பொழுது, அவர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!வென்று எல்லோரும் ஓங்கி குரல் எழுப்புங்கள்.

95 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக் கின்ற கலைஞர், கலைஞர்  என்று தமிழர் தலைவர் சொல்ல, மக்கள் திரள் அனைவரும் வாழ்க! வாழ்க! என்று விண்ணதிர ஒலி முழக்கம் எழுப்பினர்.

இந்த வாழ்த்தொலிகள் அவரைப் பேச வைக்கும். அப்படிப்பட்ட இந்த அருமையான விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கலைஞருடைய மூத்த சகோதரன், அவரை தலைவராக ஏற்றுக்கொண்டு இளைஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியிருக்கக்கூடிய எங்கள் இனமானப் பேராசிரியர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களே,

நாளைய நம்பிக்கை என்று சொல்வதைவிட...

இந்நிகழ்வில் முத்தாய்ப்பு உரையை வழங்குவதோடு மட்டுமல்ல, மிகப்பெரியதொரு விடுதலைப் பிரகடனம், அதாவது விடுதலை என்று சொன்னால், நாட்டு விடுதலை என்கிற பொருளில் அல்ல. சமுதாயத்தில் இருக்கக்கூடிய அத்துணைக் கொடுமைகள், ஜனநாய கத்தைப் பீடித்திருக்கக்கூடிய அத்துணை கொடுமை களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டக்கூடிய ஒரு விடியல் போராட்டத்தை அறிவிக்க இருக்கக்கூடிய எங்கள் தளபதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர், நாளைய நம்பிக்கை என்று சொல்வதைவிட, இன்றைக்கே அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்ட அன்பிற்குரிய சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன் வரவேற்புரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் துரைமுருகன் அவர்களே,

இறுதியில் நன்றியுரை கூறவிருக்கின்ற, மிக அற்புதமான ஒரு மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த பூண்டி கலைவாணன் அவர்கள் ஒரு சிறந்த செயல் திறமை வாய்ந்த செயலாளர் என்பதை நாட்டிற்கு அறிவித்துள்ள அன்பு சகோதரர் அவர்களே,

எனக்குமுன் உரையாற்றிய மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய மரியாதைக்குரிய அத்துணை இயக்கங்களைச் சார்ந்த, அமைப்புகளைச் சார்ந்த தலைவர் பெருமக்களே,

மேடைக்குமுன் அமர்ந்திருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேனாள் உறுப்பினர்களாக, மேனாள் அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய அன்பு சகோதரர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அருமை தமிழ்ப்பெருமக்களே, திராவிடப் பெருங்குடி மக்களே, தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞரை சந்தித்து வாழ்த்து சொன்னோம்!

துரைமுருகன் அவர்கள் வரவேற்புரையில் ஒரு தகவலை சொன்னார். ஒரு நான்கு அய்ந்து நாள்களுக்கு முன் தலைவர் கலைஞரைப் பார்க்கவேண்டும் என்று நாங்கள் அங்கே சென்றபொழுது, அப்பொழுது நம்முடைய அருமை மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் இருந்தார்கள்; நம்முடைய அன்பிற்குரிய சகோதரி செல்வி அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து, பிறந்த நாள் பரிசாக, அவர் அந்தக் காலத்தில் எழுதி வெளியிட்ட, அண்மையில் வெளிவராத  பதிப்பை நாங்கள் வெளியிட்டோம்.

முன்பு ராஜகோபாலாச்சாரியார் ‘‘சக்கரவர்த்தி திருமகன்'' இராமாயணத்தை எழுதினார். அவர் ஒவ்வொரு வாரமும் ‘கல்கி'யில் எழுதிக்கொண்டிருக்கும் பொழுதே,  அதற்குப் பதிலை சுடச்சுட வாரப் பத்திரியாக வெளிவந்த ‘முரசொலி'யில் 'மூக்காஜி' என்ற பெயரில் பதில் எழுதினார்  நம்முடைய  கலைஞர் அவர்கள். அதற்குத் தலைப்பு என்னவென்றால், இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். ‘‘சக்கரவர்த்தியின் திருமகன்'' என்ற தலைப்பில் எழுதினார்.

அந்தப் புத்தகத்தை மறுபதிப்பு செய்தோம் திராவிடர் கழகத்தின் சார்பில். ‘பூந்தோட்டம்' என்ற தலைப்பில், கல்லூரியில் அவர் ஆற்றிய உரை - அதையும் மறுபதிப்பு செய்து, கலைஞரிடம் கொடுத்தோம்.

திருவாரூரில் ஜூன் 1 ஆம் தேதி  உங்கள் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகளை பிரமாதமாக நடத்தவிருக்கிறார்கள். திருவா ரூருக்குப் போகலாமா? என்று அவர் காதிலே மெதுவாக சொன்னேன். அவர் கையைக் குலுக்கினார், அடையாளம் கண்டார். புன்னகை பூத்தார்.

கலைஞர் அவர்கள் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார்...

என்னுடைய கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு, சிரித்தார், தலையாட்டினார். ஒலி வரவில்லை, மவுனம் நிலவியது. எங்களால் வார்த்தைகளால் அந்த உணர்ச்சியை வர்ணிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு உணர்வு.

அவர் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார் என்பதிலே  எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், மருத்துவம் அவ்வளவு வளர்ந்திருக்கின்ற காலம் இது. இது ஒன்றும் மூடநம்பிக்கையல்ல - மருத்துவம் வளர்ந்திருக் கின்ற காலம்கட்டம்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதற்குமுன் இன எதிரிகளுக்கு ஒன்றை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். கலைஞர் இவ்வளவு நாள் பேசினார்; ஆனால், இனிமேல் அவருடைய மவுனமே காரியத்தை சாதிக்கப் போகிறது. அவருடைய மவுனமே விடை காண விருக்கிறது. இன எதிரிகளே நீங்கள் ஆட்டம் போடாதீர்கள்; அதைப் புரிந்துகொள்ளுங்கள். வாட்டத்தைப் போக்கும்.

இதே திருவாரூரில் 73 ஆண்டுகளுக்குமுன், அவர் எப்படியெல்லாம் உழைத்து, உழைத்து, உழைத்து படிப்படியாக வளர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு. நேரமில்லாத காரணத்தினால் அவற்றைப்பற்றி பேச முடியாத நிலை.

கொள்கை வெற்றி பெறும்; நோய் தோற்றுப்போகும்!

1945 ஆம் ஆண்டில், அவர் மாநாடு ஒன்றை நடத்தினார். தென்மண்டல திராவிடர் கழக மாநாடு; கடலூர் இளம்வழுதி அவர்களும், நானும், என்னுடைய ஆசிரியர் திராவிட மணி அவர்களும் பங்கேற்றோம். எங்களை வரவேற்றார் அவர். அவரே தலைப்பு கொடுத்து பேச வைத்தார். அவருடைய உழைப்பு எப்படிப்பட்டது - இன்றைக்கும் ‘‘நோயும் - கொள்கையும்'' என்று சொன்னால், அவரிடத்தில் கொள்கைதான் வெற்றி பெறுமே தவிர, நோய் தோற்றுப்போகும். அதற்கு அடையாளமாக நிறைய செய்திகள் இருந்தாலும், ஒரே  ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

தஞ்சை மாவட்ட மூன்றாவது திராவிட மாணவர் மாநாடு

6.1.1946 இல்  திருத்துறைப்பூண்டியில், தஞ்சை மாவட்ட மூன்றாவது திராவிட மாணவர் மாநாடு. 72 ஆண்டுகளுக்குமுன் - காலை 8 மணிமுதல் முற்பகல் வரை. தஞ்சை மாவட்ட மூன்றாவது திராவிட மாணவர் மாநாடு. 2 மணிமுதல் இரவு 10 மணிவரை தஞ்சை மாவட்ட முதலாவது கருப்புச் சட்டைப் படை மாநாடு.

அந்த மாநாட்டிற்கு தோழர் கருணானந்தம், வரவேற்புக் குழுத் தலைவர் அரங்கண்ணல் என்று இப்படி வரிசையாகப் பட்டியல் உண்டு.

அந்த மாநாட்டிற்கு நாங்களும் அங்கே சென்றிருக்கிறோம். இடைவேளைக்குப் பின்னர் தோழர் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில், கருப்புச் சட்டைப் படை அணிவகுப்பு நடைபெற்றது. சுமார் 600 தொண்டர்கள் வந்திருந்தனர். கடலூர் திராவிடமணி அவர்கள் விளக்கமாகப் பேசி கருப்புக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

அன்று எல்லோரும் கருப்புடையில்தான் இருந்தோம். அன்றுதான் முதல் முறையாக கருப்புடை அணிந்து வந்து, முதல் கருப்புச் சட்டை படை மாநாடு.

அதில் முக்கியமான செய்தி என்னவென்றால்,

நாங்கள் கருப்புச் சட்டையில்தான் இருந்தோம். திருவாரூரில் இருந்த வந்த ரயில் வண்டியில், திருவாரூர் மு.கருணாநிதி அவர்கள் நீண்ட கருப்பு ஷெர்வானி, சிவப்புப் பொத்தான்களுடன் புதிதாகத் தைக்கப்பட்ட உடையை அணிந்து வந்தார். அவருக்கு அம்மைக் கொப்பளங்கள் உடம்பெங்கும். அவர் மாநாட்டைத் திறந்து வைக்கவேண்டும். ஆனால், அவருக்கு அம்மை போடப்பட்டு, உடலெங்கும் கொப்புளங்கள். அந்தக் கொப்பளங்களைப்பற்றிக் கவலைப்படாமல், திருவாரூரில் ரயிலேறி, நேரிடையாக மாநாடு தொடங்குவதற்கு முன்பே வந்தார். நாங்கள் எல்லாம் ரயில் நிலையத்திற்குச் சென்று வரவேற்றோம். நாங்கள் எல்லோரும் அவரது உடல் அம்மைக் கொப்பளங்களைக் கண்ட நிலையில், அவர் கடமையாற்றிய கட்டுப்பாட்டைக் கண்டு வியந்தோம் - வியந்தார்கள். அவர்கள் என்னை மற்ற இடங்களில் பேச சொன்னார்.

எதை செய்தால், கலைஞர் வாழ்வாரோ

அதை செய்தாகவேண்டும்

எதற்காக இதை சொல்கிறோம் என்றால், அன்றைக்கு அவர் நோயோடு போராடிய காலத்தில்கூட, அவர் தன்னுடைய கொள்கை முழக்கத்தை விட்டதே கிடையாது - கொள்கைப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டதே கிடையாது என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு இங்கே அவரைப்பற்றிய நிறைய செய்திகளை சொன்னார்கள். அவை எல்லாவற்றையும்விட, இவ்வளவு பெரிய அரங்கம், இவ்வளவு பெரிய கூட்டம் - கூட்டம் முடிந்து நாம் கலைந்து செல்கிறபொழுது, கலைஞர் வாழ்க என்று நினைத்துக் கொண்டு போனால் மட்டும் போதாது. எதை செய்தால், கலைஞர் வாழ்வாரோ அதை செய்தாக வேண்டும். நம் லட்சியங்கள் வாழ்வதற்கு அதைச் செய்ய வேண்டும்.

திராவிடத்தை சில கொம்பர்கள் ஏதோ அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் - எந்தக் கொம்பனாலும் திராவிடத்தை வீழ்த்திவிட முடியாது. இன்றைக்கு நம்முடைய கடமைகள் அதிகமாக இருக்கிறது.

என்னுடைய ஆட்சி போனால், பரவாயில்லை...

தந்தை பெரியாருக்குக் கலைஞர் அவர்கள் இறுதி மரியாதை கொடுக்கிறார். எப்படி? அரசு மரியாதை என்று ஆணை போடுகிறார். இது எல்லோரும் அறிந்த செய்திதான். அதிகாரிகள் தயங்குகிறார்கள்; தலைமைச் செயலாளர் முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘அரசு மரியாதை பெரியாருக்குக் கொடுத்தால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம்'' என்கிறார்.

ஆனால், கலைஞரின் பதில் என்ன தெரியுமா? ‘‘இதனால், என்னுடைய ஆட்சி போனால், அதைவிட பெரிய வாய்ப்பு எனக்கு வேறு கிடையாது. என்னுடைய தலைவனுக்கு, எனக்கு வழிகாட்டிய அறிவாசானுக்கு மரியாதை கொடுத்து, அதனால் என்னுடைய ஆட்சி போனால், பரவாயில்லை'' என்று சொன்னார்.

அந்த அரசு மரியாதைக்குப்பிறகுகூட என்ன சொன்னார் தெரியுமா? ‘‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுக்க முடிந்தது; ஆனால், அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடு வைத்துப் புதைத்தேனே?'' என்றார்.

அந்த நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றியாகவேண்டும் என்பதற்காகத்தான், அய்யாவிற்குப் பிறகு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற கொள்கையைப் பின்பற்றினார். இன்றைக்கு அது எப்படிப்பட்ட அளவிற்குத் தேவைப்படுகிறது - பெரியார் மண் என்ற இந்த மண்ணுக்கு என்ன சிறப்பு என்றால், அண்ணாவால், கலைஞரால், திராவிட இயக்கத்தால், அடுத்து தொடர் சரித்திரமாக தளபதி போன்றவர்களால் எழுதப்படவிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தை நீங்கள் நன்றாக உணரவேண்டும்.

முன்பே விட இப்பொழுது தேவைகளும், ஆபத்து களும் நிறைய வந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

குருகுலக் கல்வி என்கிற ஆபத்து!

இங்கே நடக்கின்ற ஆட்சியைப்பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது, நீட் தேர்வு  மற்ற மற்ற பிரச்சினைகளில். அடுத்து இன்னொரு ஒரு பெரிய ஆபத்து வரவிருக்கிறது. அதுதான் குருகுலக் கல்வி - குலக்கல்வித் திட்டத்தையே தோற்கடித்து, அதனை சிறியதாக்கிவிடக்கூடிய சிறிய கோடாக ஆக்கிவிடக்கூடிய அளவிற்கு, சமஸ்கிருதம், வேதம் இதைப் படித்தால் போதும் - உடனடியாக பத்தாவது வகுப்பிற்கு சேர அவனே சான்றிதழ் கொடுத்துக் கொண்டால் போதும்.

பார்ப்பனியத்தினுடைய கொடுங்கரம் - மோடி ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். உத்தரவு போடுகிறது - அதை செய்யவிருக்கிறது என்கிற மிகப்பெரிய ஆபத்து -நம்முடைய சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அடிப்படை கல்வியிலேயே குருகுலக் கல்வி என்கிற ஆபத்து வரவிருக்கிறது.

கலைஞர் வாழ்க என்று சொல்வதின் பொருள்!

இதையெல்லாம் போக்கவேண்டுமானால், நமக்கு ஒரே வழி - இப்பொழுது மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சி என்ற வித்தை ஆட்சியை - காவி ஆட்சியை அகற்றி யாகவேண்டும். கலைஞரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் முடிந்து நீங்கள் திரும்பிப் போகின்ற நேரத்தில், நீங்கள் உறுதியெடுத்துக்கொண்டு, 10 பேருக்காவது நீங்கள் பிரச்சாரம் செய்தாகவேண்டும். போராட்டக் களத்திற்குச் செல்லவேண்டும். கலைஞர் வாழ்க என்று சொல்வதின் பொருள் என்ன என்று சொன்னால், வீழ்த்தியாக வேண்டியவர்களை வீழ்த்தியாகவேண்டும்.

மத்தியில் காவி ஆட்சி - அதன்மூலம் நம் கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல, இன்றைக்கு ஒரு செய்தி - நம்முடைய நாட்டு ஊடகங்கள் பெரிதும் மறைத்துவிட்ட ஒரு செய்தியை இன்றைய ‘விடுதலை'யில் வெளியிட்டிருக்கிறோம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்

குடியரசுத் தலைவருக்கு நேர்ந்த கொடுமை!

மோடி வித்தை இருக்கிறதே, அந்த மோடி வித்தைகளில் ஒரு விசித்திரமான மோடி வித்தை என்னவென்று சொன்னால், நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை, தலித் சமுதாயத்தை சார்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டேன் என்றெல்லாம் பிரச்சார யுக்தியைக் காட்டி, அவர்களை ஏமாற்றலாம் என்பதற்காக அதனைப் பயன்படுத்தினார்களே! ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தார்களே!  அந்தக் குடியரசுத் தலைவர் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குப் போகிறார். அங்கே அவர் தடுத்து நிறுத்தப்படுகிறார். தனது துணைவியாருடன் சென்ற அவர் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்.

தமிழ் மண், பெரியார் மண், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் நிறைவேற்றி வெற்றி பெற்றுள்ள ஒரு மண். அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்கள்; அங்கேயும் நமக்கு சாதகமான தீர்ப்பு. கலைஞர் கொண்டு வந்த இரண்டு சட்டங்களும் செல்லும் என்று மிகத் தெளிவாக, ஒருமுறையல்ல, இரண்டு முறை அந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை எண்ணிப் பாருங்கள்,

நாளைக்கு தளபதி அவர்கள் முதலமைச்சராக வந்தால்...

அர்ச்சகர் பயிற்சி கொடுத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு மோசமான ஆட்சி- காட்சியாக இருக்கின்ற ஒரு ஆட்சி - டில்லிக்கு எடுபிடியாக இருக்கிற ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடியவர்கள் தயாராக இருந்தும்கூட, இன்னும் பணியமர்த்தாமல், கலைஞருடைய சட்டம் வெளியே நிறுத்தப்பட்டு இருக்கிறது. நாளைக்கு தளபதி அவர்கள் முதலமைச்சராக வந்தால், அடுத்த நாளே அந்தக் கருவறை திறக்கும்; ஜாதி ஒழிப்புக்கு, தீண்டாமை ஒழிப்புக்கு வாய்ப்பு ஏற்படும்.

ஆனால், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத் தலைவரை உள்ளே விடவில்லை. குடியரசுத் தலைவர் என்பவர் முப்படைக்கும் தளபதி ஆவார். ஆனால், முப்புரி நூல் படைக்குமுன் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படிக்கட்டில் அமர்ந்து சாமிதரிசனம் செய்து வந்தாராம்.

இந்தச் செய்தியை மறைப்பதற்காக, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்தியை வெளியிடுகிறார்கள். ‘‘குடியரசுத் தலைவரின் துணைவியாருக்கு மூட்டு வலி என்பதால், படியிலேயே பூஜை செய்து வந்தார்கள்'' என்று. சரி, அவருடைய துணைவியாருக்குத்தான் மூட்டு வலி, ஆனால், குடியரசுத் தலைவர் உள்ளே சென்றிருக்கலாம் அல்லவா! எவ்வளவு பெரிய பித்தலாட்டத்தை செய்கிறார்கள் பாருங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே இருக்கிறார்கள், மற்ற நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள். இதற்கு என்ன விடியல்? இதற்கெல்லாம் விடியல் என்பது அதுதான் திராவிடத்தின் ஆட்சி - அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான ஆட்சி என்பது.

காட்சிக்காக ஆட்சியல்ல - காட்சியாக இருக்கின்ற ஆட்சிகளை வெளியே அனுப்பவேண்டும். இனத்தின் மீட்சி வரவேண்டும். அதுதான் இன்றைக்கு நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும்.

மத்தியில் காவி ஆட்சி- இங்கே ஆவி ஆட்சி!

எனவே, அதனை உருவாக்குங்கள். அதனை உருவாக்குவதுதான் நம்முடைய கடமையாகும். மத்தியில் காவி ஆட்சி- இங்கே ஆவி ஆட்சி. காவி ஆட்சியும் ஒழிக்கப்படவேண்டும், காவிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்கின்ற இந்த ஆவி ஆட்சியும் ஒழிக்கப்படவேண்டும்.

அதற்கு சூளுரை எடுக்கவேண்டிய நாள் - கலைஞருடைய பிறந்த நாள். அதற்குரிய திட்டம் -நீங்கள் இங்கே இருந்து போகும்பொழுது தெளிவாக, அந்த உறுதியோடு செல்லவேண்டும்.

இன்னொரு செய்தி, சகோதரர் தோழர் முத்தரசன் அவர்கள் இங்கே முன்மொழிந்தார்கள். நம்முடைய திருநாவுக்கரசர் அவர்கள்கூட அந்தக் கருத்தை எடுத்து சொன்னார்கள்.

சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் - அவருடைய ஆலோசனையின் பேரில் தோழமைக் கட்சிகள் - இங்கேகூட துரைமுருகன் அவர்கள் சொன்னார்கள்,

சட்டமன்றத்தில் எங்களைப் பேசவே விடமாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது என்று.

அவர்கள் பேசவிடாவிட்டாலும்கூட, நான் மக்கள் கருத்தை எடுத்து தெளிவாக சொல்வது மட்டுமல்ல, தாய்க்கழகத்தின் உரிமை படைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், தோழர் முத்தரசன் சொன்னதை, திருநாவுக் கரசர் சொன்னதை திராவிடர் கழகம் வழிமொழிகிறது.

நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும்..

நீங்கள் நாளை முதல் சட்டமன்றத்திற்குப் போகவேண்டும். அவர்கள் தூக்கிப் போடட்டும்; எவர் வெளியே போகவேண்டுமோ அவர்கள் வெளியே போகாமல் இருக்கும்பொழுது - நீங்கள் ஏன் வெளியே நிற்கிறீர்கள் - மக்கள் உங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் சட்ட மன்றத்திற்குப் போகவேண்டும் - நீங்கள் அங்கே முழங்கவேண்டும்.

உங்களுடைய உரையை அவர்கள் பதிவு செய்யட்டும்; பதிவு செய்யாமல் போகட்டும். மக்கள் நெஞ்சில் அது பதிவாகும் - அதனை நீங்கள் செய்யவேண்டும்.

எனவேதான், இந்த திருவாரூர் அதற்கும் ஒரு திருப்பம் தந்தது என்கிற முடிவை நீங்கள் துணிச்சலாக எடுங்கள். நீங்கள் சட்டமன்றத்திற்குச் சென்று பேசவேண்டும். உங்களை குண்டுக் கட்டாகத் தூக்கிப் போட்டாலும், அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

கலைஞர் அவர்கள் சொன்னாரே, ‘‘நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகத்தான் நான் வருவேன்; உங்களுக்குத் தொண்டாற்றுவேன்'' என்பதை உங்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

மக்கள் விரோதிகள் என்று மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு...

எனவே, கட்டுமரமாக வாழுங்கள்; இன்னும் சில நாள்களில் அவர்களுடைய ஆட்சி வெளியே தூக்கி எறியப்படக்கூடிய ஆட்சியாகும். தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகமாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற சில அனாமதேயங்களானாலும், விஷமக் கிருமிகளானாலும், போராடக் கூடிய மக்களை சமூக விரோதி என்று சொல்லக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மக்கள் விரோதிகள் என்று மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு அந்த உணர்வுகளைப் பெறவேண்டும்.

எனவேதான், உரிமையோடு சொல்கிறோம், முடிவெடுங்கள் - நீங்கள் நாளைக்குக் கூடி முடிவெடுங்கள்.

நடைபெறுகின்ற சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும் நீங்கள் செல்லுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நம்முடைய கவிஞர் கனிமொழி போன்றவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு  என்ன தெரியுமா? அதனால்தான் மோடி இங்கே இல்லாமல், வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு மைனாரிட்டிகள் ஒன்றுக்கு ஒன்று சேர்ந்திருக்கின்றன

அவருடைய ஆட்சி நாளுக்கு நாள் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இடைத்தேர்தல்கள் நடைபெற்ற 11 இடங்களில், ஒன்றே ஒன்றை தவிர அத்தனை இடங்களிலும் தோல்வி பெற்றுள்ளனர். இப்பொழுது அறுதிப் பெரும்பான்மை பா.ஜ.க.விற்கு நாடாளுமன்றத்தில் கிடையாது. இங்கேயும் மைனாரிட்டி - அங்கேயும் மைனாரிட்டி! இரண்டு மைனாரிட்டிகள் ஒன்றுக்கு ஒன்று சேர்ந்திருக்கின்றன என்று சொல்லக்கூடிய அந்த நிலையில் இருக்கிறது.

மத்தியில் உள்ள காவி ஆட்சி - இங்குள்ள ஆவி ஆட்சி ஆகிய மைனாரிட்டி ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பினால்தான், திராவிடம் உண்மையிலேயே சமூக விடுதலை பெற முடியும்.

என்றைக்கும் இந்தக் கரங்கள் உங்களைத் தூக்கிப் பிடிக்கும்!

எனவேதான், இந்தக் கூட்டம் வெறும் கூடி கலைந்த கூட்டமாக இருக்கக்கூடாது. தெளிவான போராட்டக் களத்திற்குச் செல்லுவோம். துப்பாக்கி துரைத்தனங்கள் என்றைக்கும் நீடித்ததாக வரலாறு கிடையாது.  அல்லது எத்தனை பேர் இந்தப் பக்கத்தில் வந்தாலும், அதைப்பற்றி கவலையில்லை. சிறைச்சாலைகளை நெருக்கடி காலத்திலேயே பார்த்தவர்கள். அதிலும், சகோதரர் ஸ்டாலின் அவர்கள், அன்றைக்கு நடைபெற்ற சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - ஜனவரி 1976 - அடிபட்ட ஒருவர் ரத்தத்தோடு வந்து விழுந்தார் - அந்த நேரத்தில், தூக்கிப் பிடித்த கரம் இதோ இருக்கிறது - அன்றைக்கு மட்டுமல்ல - என்றைக்கும் இந்தக் கரங்கள் உங்களைத் தூக்கிப் பிடிக்கும். நல்ல வாய்ப்பாக வைகோ அவர்களும் வந்திருக்கிறார் - அது இன்னும் சிறப்பானது.

எனவேதான்,

எங்கள் எதிரிகள் எங்கோ மறைந்தார் -

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற அந்த உணர்வோடு கலைஞர் வாழ்க! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வருக! வருக! என்று கூறி, என்னுரையை முடிக்கிறேன்!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner