எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோய்களிலேயே மிகவும் மோசமானது ஆர்.எஸ்.எஸ். மதவெறி நோயே!

இந்தியாவுக்கே வழிகாட்டும் இந்தப் பெரியார் மண்

இந்த நோயை வீழ்த்துவதிலும் கண்டிப்பாக வழிகாட்டும்!

பட்டுக்கோட்டை, ஜூன் 2- நோய்களிலே மிகவும் மோசமான ஆர்.எஸ்.எஸ். மதவெறி நோயை வீழ்த்துவதிலேயும் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் வழிகாட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிட இளைஞர் எழுச்சி மண்டல மாநாடு

29.5.2018 அன்று மாலை பட்டுக்கோட்டையில்  நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிட இளைஞர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்கள் அல்ல;

அழைப்பை ஏற்று வந்திருக்கிறவர்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பட்டுக்கோட்டை என்ற சுயமரியாதைக் கோட்டை மீண்டும் பழைய கோட்டையாக - சுயமரியாதைக் கோட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நம் எதிரிகளுக்குக் குறிப்பாக இன எதிரிகளுக்கு உணர்த்தக்கூடிய ஒரு அருமையான இந்த மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்து, கடந்த ஒரு மாதமாக பம்பரம் போல் சுற்றித் திரிந்து, சுவரெழுத்துக்களாக இருந்தாலும், தெருமுனைக் கூட்டங்களாக ஆனாலும், வசூலானாலும், மக்கள் மத்தியில் பிரச்சாரமானாலும், இவை அத்தனையையும் வெற்றிகரமாக செய்து, சிறப்பாக இங்கே தானே வரக்கூடிய மக்கள் - இவர்கள் அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்கள் அல்ல - அழைப்பை ஏற்று வந்திருக்கிறவர்கள் என்பதுதான் மிக முக்கியம்.

பெயரில் மட்டுமல்ல,

செயலிலும் வெற்றிக்குமார்!

அப்படிப்பட்ட ஒரு அற்புதமான இந்த இளைஞரணி மாநாட்டில், வரலாறு காணாத அளவிற்கு, மூடநம்பிக்கை ஒழிப்பு - கொள்கைப் பிரச்சாரத்தை உள்ளடக்கிய ஒரு மாபெரும் பேரணி - அதேபோல, மூடநம்பிக்கை ஒழிப்புக்கு ஆதாரமாக இருக்கின்ற அந்தப் பேரணி மட்டுமல்ல, பகுத்தறிவு கொள்கையின் வெற்றிக்கு அடையாளமாக - உழைத்த நம்முடைய பெரியவர்கள், வயதானவர்கள், முதியவர்களை எல்லாம் அழைத்து சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் - பல துறைகளில் இருக்கக்கூடியவர்கள் - அந்த வேர்கள் எல்லாம் இன்னமும் பலத்தோடு இருக்கின்றன என்பதை விழுதுகள் பாராட்டக்கூடிய அந்த நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாக நடத்தி, சுயமரியாதைத் திருமணத்தையும் மிக அருமையாக, ஜாதி மறுப்புத் திருமணத்தை, தாலி இல்லாத திருமணத்தை, இந்த மேடையில் சிக்கனமாக நடக்கக்கூடிய எளிமையான திருமணத்தை நடத்தக்கூடிய வாய்ப்பும் ஆகிய அத்தனை கொள்கை வெற்றிகளையும்  ஒருங்கிணைத்து நடத்தக்கூடிய இந்த வெற்றிகரமான மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கின்ற உண்மையிலேயே பெயரில் மட்டுமல்ல, செயலிலும் வெற்றிக் குமார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தி யிருக்கிற மாநாட்டுத் தலைவர் வெற்றிக்குமார் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் செயல்வீரர் சோம.நீலகண்டன் அவர்களே,

கொடியேற்றிய பெரியார் பிஞ்சு திருவள்ளுவன் அவர்களே,

தொடக்கவுரையாற்றிய மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் இளந்திரையன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, ஜெயக்குமார் அவர்களே,

மாநில அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே,

பெரியார் சுயமரியாதை நிறுவன துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா இராசகிரி கோ.தங்கராசு அவர்களே,

மற்றும் பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் அன்பிற்குரிய அருமை நண்பர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களே,

பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் செயல்வீரர் வீரையன் அவர்களே,

உடல் தளர்ந்திருந்தாலும், உள்ளம் தளரவில்லை என்ற உணர்வோடு...

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக இருந்து, உடல் தளர்ந்திருந்தாலும், உள்ளம் தளரவில்லை என்ற உணர்வோடு நீண்ட காலமாக இந்தப் பட்டுக்கோட்டையில், முதியவர்கள் விட்டுப் போன பணிகளையெல்லாம் தொடர்ந்து செய்வதற்கு ஒரு கிரியா ஊக்கியாக இருக்கக்கூடிய மாவட்டத் துணைத் தலைவர் மானமிகு அய்யா பெரியவர் சின்னக்கண்ணு அவர்களே,

பட்டுக்கோட்டை நகர செயலாளர் தோழர் அண்ணாதுரை அவர்களே,

பட்டுக்கோட்டை நகர தலைவர் தோழர் காளிதாசன் அவர்களே,

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவரும், கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவருமான அழகிரிசாமி அவர்களே,

தஞ்சை மண்டல தலைவர், செயலாளர், திருவாரூர் மாவட்டத் தலைவர், குடந்தை மாவட்டத் தலைவர், தஞ்சை மாவட்டச் செயலாளர், குடந்தை மாவட்டச் செயலாளர், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மற்றும் மாநில பகுத்தறிவு இயக்கத் துணைத் தலைவர் ஆகிய அருமைத் தோழர்களே,

இறுதியில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய நகர இளைஞரணி தலைவர் மாதவன் அவர்களே,

வெள்ளம்போல் திரண்டு வந்திருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களிலிருந்து அருகில் இருக்கின்ற மாவட்டம் மட்டு மல்ல, குமரி மாவட்டத்திலிருந்துகூட இங்கே வந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, தோழர்களே, இளைஞர்களே!

இந்த இயக்கத்தில் புதிதாக தங்களை இணைத்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேளிக்கை, வேடிக்கை பேச்சுகள் என்பதெல்லாம் இருக்காது

என்னுடைய உரை என்பது ஒரு 40 நிமிடங் கள் இருக்கும். அதற்குள்ளாக ஏராளமான செய்திகளை சொல்லவேண்டும்; உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய மாநாடுகள் என்று சொன்னால், ஏதோ கேளிக்கை, வேடிக்கை பேச்சுகள் என்பதெல்லாம் இருக்காது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் அருமையான தீர்மானங்களாகும். அத்தனையும் தேவையான, இந்த நாட்டினுடைய நிலையைப் பிரதிபலிக்கக்கூடிய தீர்மானங்கள்.''

தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கக் கூடிய ஆபத்துகளை விளக்கக்கூடியவை!

ஊடகங்கள்,செய்தியாளர்களாகவந்திருக்கின்றநண்பர் கள், எங்களுடைய உரைகளை நீங்கள் வெளியிடு கிறீர் களோ இல்லையோ! இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களையாவது மக்கள் மத்தியில் விளம்பரப் படுத்தவேண்டும். ஏனென்றால், இந்தத் தீர்மானங்கள் எல்லாம் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கக் கூடிய ஆபத்தான நிலைகளை விளக்கக்கூடியவை!

ஆக, அத்தனை பேருக்கும் வணக்கத்தினை சொல்லி, ஊடக நண்பர்கள் உள்பட அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அத்துணை பேருக்கும் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள். வியப்பாக இருக்கிறது. காலையில்கூட மணவிழா ஒன்றில் உரையாற்றும்பொழுது நான் தெளிவாக சொன்னேன், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 45 ஆண்டுகாலத்திற்கு முன் என்ன சொன்னார்கள், பெரியாருடைய கட்சியில் ஊருக்கு நான்கு வயதானவர்கள் இருப்பார்கள்; அவர்களோடு போய்விடும் இந்த இயக்கம் என்றுதான் பலர் கணக்குப் போட்டார்கள். மத்தியில் இருக்கக் கூடிய அரசு கூட இப்படி ஒரு கணக்குப் போட்டது. வருமான வரித்துறையால், பெரியாருடைய அறக்கட்டளையை ஒழித்து விடலாம் என்று திட்டமிட்ட பார்ப்பனர்கள் அந்த முயற்சியில் (மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஒருவரும்கூட அதில் அடக்கம்) ஈடுபட்டனர்.

வெளிப்படையாகவே மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் சொன்னார், பெரியார் மிக வேகமாக பேசுகிறார்; இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறார்; அவர் வயதானவர். அவர் போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதுவரையில் கொஞ்சம் பொறுத்திருங்கள்; பிறகு நம்முடைய ராஜ்ஜியம்தான் என்று சொன்னார்கள்.

என்னுடைய இயக்கத்திற்கோ, என்னுடைய கொள்கைக்கோ வயதாகவில்லை

பெரியார் அவர்கள் பங்கேற்ற கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மேற்கண்ட செய்தியை அய்யா அவர்கள் முன்னிலையில் உரையாற்றினேன். இதைக் கேட்டுவிட்டு, அடுத்ததாக உரையாற்றிய அய்யா அவர்கள், மத்திய அமைச்சர் சொன்னதாக ஒரு செய்தியை ஆசிரியர் இங்கே படித்தார். பெரியார் வயதானவர், அவர் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறார் என்று. அவர் சொல்லியது உண்மை. நான் உலகம் உள்ளவரை இருப்பேன் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் மகானல்ல. இன்றைக்கோ, நாளைக்கோ கூட என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடும். இவ்வளவு நாள் நான் இருப்பதே போனஸ் வாழ்க்கை என்று நான் கருதியிருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு,

அந்த மத்திய அமைச்சருக்கு நான் ஒன்றை சொல்கிறேன், எனக்கு வயதாகிவிட்டதே தவிர, என்னுடைய இயக்கத்திற்கோ, என்னுடைய கொள்கைக்கோ வயதாகவில்லை என்றார்.

இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது. இன்னுங்கேட்டால், எப்படி மருத்துவம் எப்போதும் தேவையோ - ஏனென்றால், திடீர் திடீரென்று ஒவ்வொரு நோய், ஒவ்வொரு வகையில் தோன்றும். அதனை ஒழிப்பதற்கு மருத்துவம் எப்போதும் தேவைப்படும்.

நோய்களிலேயே மிகவும் ஆபத்தான நோய் ஆர்.எஸ்.எஸ். நோய்

வைரஸ்மூலம் ஏற்படும் நோய்களைவிட, மிகவும் ஆபத்தான நோய் என்னவென்றால், அதுதான் ஆர்.எஸ்.எஸ். நோய். அதுதான் மதவெறியை உருவாக்கக்கூடிய நோய். வடக்கே இருந்து வரக்கூடிய நோய்.

என்றைக்கு சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பட்டதோ, அன்றைக்கே அந்த இயக்கமும் தொடங் கப்பட்டது. இரண்டு இயக்கங்களுக்கும் கொள்கையில் எதிரும் புதிருமானது. இருட்டும் - வெளிச்சம்போல!

ஆகவே, ஆரியம் - திராவிடம் என்றால் என்ன வென்று நிறைய பேர் கேட்கிறார்கள். இன்னும் நிறைய பேர் புதிய ஆராய்ச்சி செய்கிறார்கள். திராவிடம் என்றால் என்ன? தமிழ் என்றால் என்ன? என்று. இவர்கள் வேறு ரூபத்தில் வருகின்ற எதிரிகளுடைய கூலிகள். இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இதே பட்டுக்கோட்டையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபொழுது நாங்கள் சொன்னோம், மோடி, வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்கிறார். யாருக்கு வளர்ச்சி என்றால், அவருடைய கட்சிக்கு வளர்ச்சி, அவருக்கு வளர்ச்சியே தவிர, நாட்டிற்கு வளர்ச்சியல்ல - சமுதாயத்திற்கு வளர்ச்சியல்ல ஏமாந்துவிடாதீர்கள் என்று சொன்னோம்.

ஆனால், நம்முடைய குழாய் மாட்டிய டுவிட்டர்' இளை ஞர்கள், முகநூல்' இளைஞர்கள், வாட்ஸ் அப்' இளைஞர்கள் ஆகியோருக்கு புதிதாக வாக்குரிமை வந்தவுடன், நமக்கெல்லாம் வேலைவாய்ப்பு வந்துவிடும் என்று அவர்கள் எல்லாம் நம்பி இவர்களுக்கு வாக்களித்தார்கள்.

ஏனென்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்; ஒவ்வொரு குடி மகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போடுவோம் என்று சொன்னார்.

இதை நம்பி நம்முடைய இளைஞர்களும் அவர்களுக்கு ஆதரவாகப் பொத்தானை அழுத்தினார்கள்.

வேதக் கணிதமல்ல - அது பேதக் கணிதம்!

இப்பொழுது அவர்களுடைய சாயம் வெளுத்துக்கொண்டே வருகிறது. இதுவரையில் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும், அவர்கள் வாங்கிய முந்தைய சதவிகிதத்தை வாங்கவில்லை. 22 மாநிலங்களில் தாங்கள் ஆண்டு கொண்டிருக்கிறோம் என்று சொல்வதே மிகப்பெரிய பொய். அவர்கள் 10 மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். மீதியுள்ள மாநிலங் களில் என்ன செய்கிறார்கள் என்றால், யாராவது அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அவர்களோடு கூட்டணி சேர்ந்து, ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்களை ஆளுநராக முன்பே  அமர்த்திவிட்டதினால், அவர்களுக்கு கூட்டுக் கணக்கே தெரியவில்லை. 104 பெரிதா? 117 பெரிதா? என்று அவருக்குத் தெரியவே தெரியாது.  சரியாகக் கூட்டத் தெரியாத, அல்லது கூட்டினாலும், அவர்களுடைய வசதிக்கேற்ப - வேதக் கணிதம் என்று சொல்கிறார்களோ, அது வேதக் கணிதமல்ல - அது பேதக் கணிதம்.

பெரியாரை நாங்கள் பார்க்கவில்லை, பெரியாருடைய உரையைக் கேட்கவில்லை என்று சிலர் சொல்வார்கள். பெரியாருடைய பேச்சைக் கேட்டிருந்தால், நாடு உருப்பட்டி ருக்கும். பெரியாருடைய பேச்சை கேட்கவில்லை என்றாலும், எங்களுடைய பேச்சையாவது கேளுங்கள். ஏனென்றால், நாங்கள் தேர்தலில் நிற்கக்கூடியவர்களோ, பதவிக்குப் போகக் கூடியவர்களோ அல்ல.

எங்களுக்கே வியப்பாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே புதிதாக வந்திருக்கின்ற இளைஞர் களைப் பார்க்கின்றபொழுது வியப்பாக இருக்கிறது.  இவர்களு டைய நாக்கில் சர்க்கரை தேன் தடவப் போகிறோமோ? குறைந்தபட்சம் பஞ்சாயத்துத் தேர்தலிலாவது அவர்களை நிற்கச் சொல்லுவோமா? நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு இடம் கொடுப்போம் என்று சொல்லுவோமா? அல்லது இந்த இந்தப் பதவிகளைக் கொடுப்போம் என்றாவது சொல்லுவோமா? என்றால், கிடையாது.

போராட்டங்களுக்குத் தயார்! தயார்!

எங்களோடு வந்து சேருகின்ற இளைஞர்கள், ஏராளமான தெருமுனைக் கூட்டங்களை நடத்தி, போராட்டங்களுக்குத் தயார்! தயார்! என்று இன்றைக்கு முழங்கியிருக்கிறார்களே இந்த இளைஞர் களையெல்லாம் நாங்கள் எங்கே அழைத்துச் செல்வோம் - சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ அழைத்துச் செல்லமாட்டோம். எங்களோடு வந்தால், சிறைச்சாலைக்குத்தான் அழைத்துச் செல்வோம். நம்முடைய உரிமைகளைப் போராடிப் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தி, துப்பாக்கி முனைகள் நீட்டப்பட்டால், அதற்குமுன் நம்முடைய மார்பைக் காட்டக்கூடிய துணிச்சலோடு நிற்கவேண்டும் என்று சொல்லுவோம்.

அடுத்த தேர்தலைப்பற்றி அரசியல்வாதிகள் சிந்திக் கிறார்கள்; அடுத்த தலைமுறையைப்பற்றி சமுதாயப் புரட்சியாளர்கள் சிந்திக்கிறார்கள். இது ஒரு சமுதாய புரட்சி இயக்கம்.''

பெரியாருடைய கண்ணாடி - அது ஒரு நுண்ணாடி!

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும், போராட்டம்! போராட்டம்!! போராட்டம்!!! இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு. ஏனென்றால், இது பெரியார் மண்! பெரியாருக்கு மட்டும்தான் நுண்ணாடி உண்டு. பெரியாருடைய கண்ணாடி - அது ஒரு நுண்ணாடி. அது ஒரு மைக்ரோஸ்கோப் - கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் எல்லாம் அதில்தான் தெளிவாகத் தெரியும்.

ஜாதி வெறிக் கிருமிகள், மதவெறிக் கிருமிகள் எல்லாம் மற்றக் கிருமிகளைவிட மிகவும் ஆபத்தான கிருமிகளாகும். அவை அத்தனையும் இன்றைக்கு வந்துகொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, இன்றைக்கு ஆட்சி கையில் இருக்கிறது என்றவுடன், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய இளைஞர்கள் ஏமாந்தார்கள்

வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சி'' என்று நாக்கில் தேன் தடவியதும், நம்முடைய இளைஞர்களும் ஏமாந்தார்கள். அவர்களோடு கூட்டணி வைத்தவர்கள் என்ன சொன்னார்கள் அன்றைக்கு, தண்ணீர் வரவில்லையா? மோடிக்கு ஒரு போன் போட்டீர்கள் என்றால், உடனே தண்ணீர் வந்துவிடும் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னார்கள். நம்முடைய அப்பாவி மக்களும், உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்று சொல்வதைப்போல ஏமாந்தார்கள். அதனுடைய விளைவை இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறதே!

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய மண் -பெரியார் மண்தான்!

இந்த பெரியார் மண்தான், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய மண். என்னென்ன ஆபத்துகள் வரும் என்று முன்கூட்டியே சொல்லக்கூடிய மண் இந்த மண்தான்.

இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தால் அது நன்றாகத் தெரியும்.

இன்றைக்கு நீட் தேர்வு என்று சொல்கிறார்களே, இந்த நீட் தேர்வால், நம்முடைய மாணவர்கள் டாக்டர்களாக முடியுமா? இதற்குமுன், நம் காத்தான் மகன் கருப்பன், முத்தன் மகன் முனியன், பெண்கள், கிராமப்புற மாணவர்கள் எல்லாம் டாக்டர்களாக  வர முடிந்தது.

நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு  முன் என்ன நிலை இருந்தது. மருத்துவக் கல்லூரிக்கே மனு போடவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மனு போட முடியும்.

வேதத்தை பெண்கள் படிக்கக்கூடாது; வேதத்தை பார்ப்ப னர்கள் மட்டுமே படிக்கலாம். உயர்ஜாதிக்காரர்களுக்குப் படிக்கின்ற உரிமை உண்டு. கீழ்ஜாதிக்காரர்கள் வேதத்தைக் கேட்டால், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும். தப்பித் தவறி வேதத்தைச் சொல்லிவிட்டால், அவர்களுடைய நாக்கை அறுக்கவேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு அவர்களே, சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும்; சமஸ்கிருதத்தை திணிக்கவேண்டும் என்கிறார்கள். அன்றைக்கு என்ன சொன்னார்கள்? சூத்திரன் சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது; பார்ப்பனர் மட்டும்தான் சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள் - இது நூறு ஆண்டுக்குமுன்பு.

பெரியார் பிறந்து, இந்த இயக்கம் வளர்ந்து, இந்தக் கொள்கைகள் பிரச்சாரம் செய்யப்பட்ட பிறகுதான், அந்த நிலைமை மாறிற்று. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நம்மு டைய சமுதாய பிள்ளைகள் டாக்டர்களாக ஆனார்கள். அமெரிக்காவில் நிறைய பேர் டாக்டர்களாக உள்ளவர்கள் எல்லாம் இங்கே இருந்து சென்றவர்கள்தான்.

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததன் காரணமாக...

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கல்விப் புரட்சி, தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததன் காரணமாக, மிகப்பெரிய அளவிற்கு ஒரு திருப்பம் ஏற்பட்டு, வகுப்புவாரி உரிமை, சமூகநீதி, இட ஒதுக்கீடு இவைகளுக்காகப் போராடியதன் விளைவாக, இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில்தானே 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது.

பெரியார் மண்! பெரியார் மண்! என்று சொல்கிறார்களே, இது என்ன பெரியார் மண்! இது பெரியாழ்வார் மண் என்று சில பேர் சொல்கிறார்கள்.

பெரியாழ்வார் மண்ணாக

தமிழ்நாடு இருந்திருந்தால்...

பெரியாழ்வார் மண்ணாக தமிழ்நாடு இருந்திருந்தால், 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்காது - பெரியார் மண்ணாக இருந்ததினால்தான், 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்தது! யாருக்கு, நம்மை எதிர்த்துப் பேசுகிறாரே, காவி துண்டை போட்டுக்கொண்டு, சில வசதிகள் செய்துகொடுக்கிறார்கள் என்றவுடன், சில பேர் அங்கே போய் விட்டார்கள். ஏனென்றால், மனிதர்களில், விலைக்குத் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்கின்ற காட்சி மிகவும் சர்வ சாதாரணம். அதனால்தான் புரட்சிக்கவிஞர் ஒரு கவிதை எழுதினார்.

புரட்சிக்கவிஞர் எழுதிய

கவிதை உன்னை விற்காதே!

அந்தக் கவிதையின் தலைப்பு, உன்னை விற்காதே! என்பது.

தென்னி லங்கை யிராவணன் தன்னையும்

தீய னென்னும் துரியனையும் பிறர்

என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்

இன்று நானவர் ஏற்றதைப் பாடுவேன்;

இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்

எத்தனை துரியோ தனர் வாழினும்

அன்னவர் தமைக் கொல்ல முயன்றிடும்

அந்த கன்தனை நான்கொல்ல முந்துவேன்.

 

நெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல்

நீச மன்று; மறக்குல மாட்சியாம்!

தஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத்

தன்மை யாவது வீரன் முதற்குணம்!

நெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை

நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்

பஞ்சை யன்று. துரியன் இராவணன்

பாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே!

 

தன்கு லத்தினைத் தூக்கிடும் தாம்பெனச்

சகம் சிரிக்கப் பிறந்தவி பீஷணன்

நன்ம னத்தவன் ராமனைச் சார்ந்ததை

நல்ல தென்பது ராமன் முகத்துக்காம்!

இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை

இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்

துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே

துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறுவேன்.

 

பாரதத் திருத் தாயெனும் பேச்சிலே

பச்சை யன்பு பொழிந்திடு கின்றவர்

வீரத் தால்உள மேசெய லாயினோர்

விழி யிலாதவர் ஊமைய ராயினும்

கோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மை!

கொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்!

ஓரி போலப் பதுங்கும் படித்தவர்

ஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்!

 

இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்

ஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில்

ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்

உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்வதால்,

என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை

எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே!

அன்பி ருந்திடில் நாட்டின் சுகத்திலே

ஆயிரம் கதை ஏன்வளர்க் கின்றனர்?

அற்பமான ஒரு விலைக்கு விற்றுக்கொள்கிறாயே!

பெரியார்தான் சொன்னார், வேறு வழியில்லாமல் நீ உன்னை விற்றுக்கொள்கிறாய். அதற்காக நான் பரிதாபப்படுகிறேன். உன்னை விற்றுக்கொள்கிறாயே, ஒரு நல்ல விலைக்காவது விற்றுக்கொள்ளலாம் அல்லவா. அற்பமான ஒரு விலைக்கு விற்றுக்கொள்கிறாயே என்று பெரியார் கேட்டார்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner