எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*மின்சாரம்

வெய்யிலின் சூட்டுக்கோலால் கொப்புளமான சென்னை வாழ் மக்கள் நேற்று மாலை முதல் இதமான மழையால் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.

இத்தனை நாள் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்த இந்த வானம், போயும் போயும் இன்று மாலைதானா பெய்து தொலைய வேண்டுமா என்ற பொறுமல் திராவிடர் கழகத் தோழர்களுக்கு.

காரணம் சென்னை - புரசை, தாணா தெருவில் நேற்று மாலை திராவிடர் கழகம் ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் புரட்சிப் புயல் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் முதலியவர்கள் பேசுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்திருந்தன. இடையில் குறுகிய நாள்களே இருந்தமையால் வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்  தோழர்கள் அரும்பாடுபட்டு இந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டி யிருந்தது; குருவித் தலையில் பனங்காய் வைத்தது போல தொடக்கத்தில் தெரிந்தது.

எதுவும் தொடக்கத்தில் அப்படித் தான் இருக்கும் மண்டைக் குடைச்சலாகவும், தலைச் சுற்றலாகவும் இருக்கத்தான் செய்யும். களத்தில் இறங்கினால், வீதியிலே வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினால் துண்டேந்தினால் முதலில் ஏற இறங்கப் பார்த்து விட்டு ""ஓ, திராவிடர் கழகமா? உங்களுக்குத் தாராளமாக நிதி கொடுக்கலாம்!"" என்று கொடுப்பவர்கள்  ஏராளம்.

ஏன்? திருவாளர் பொது மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும் ""இது சாமியில்லை என்று சொல்லுகிற கட்சி  ஆனால் இவர்கள் இல்லை என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு படிப்பாவது - மண்ணாங்கட்டியாவது கல்வி, உத்தியோக உரிமை, நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக  தி.க.காரர்கள் சதா பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள் - பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள் - போராடிக் கொண்டே இருக்கிறார்கள் - அதற்காக சிறைச் சாலைகளுக்கெல்லாம் செல்லக் கூடியவர்கள் அவர்கள் - பிறர் நலம் பேணக் கூடியவர்கள் என்ற மதிப்பு மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்திற்கு இருக்கவே செய்கிறது - உண்மைதானே. எதை எதிர்பார்த்து இந்தப் பொதுச் சேவைகளை திராவிடர் கழகம் செய்து கொண்டு இருக்கிறது"" என்பது நம் நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரிகிறது.

அதனால்தான் நிதி என்று சென்றால் கிள்ளிக் கொடுப் பவர்கள்கூட   ஏராளமாய் அள்ளிக் கொடுக்கிறார்கள்.

மிகப் பிரம்மாண்டமான வகையில் சென்னை - புரசை வாக்கம், தாணா தெருவில் சிறப்புக் கூட்டம், தலைப்போ மிக மிக முக்கியமானது. ""குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக் கல்வித் திட்டமா?"" என்பதாகும்.

ஓ, அன்று 1952இல் ஆச்சாரியார் கொண்டு வந்தாரே அந்தக் குலக் கல்வித் திட்டத்தின் மறுபெயரில் இப்படி ஓர் அறிமுகமா? மறுபடியும் மனுதர்ம சித்தாந்தமா? அப்பன் தொழிலைச் செய்வதற்குப் போக வேண்டியதுதானா?

இந்தக் கொடிய திட்டியின்விடமான இந்தக் கொலைக்கார குருகுலக் கல்வியின் சூற்பையை நுட்பமாக கண்டறிந்தவர் திராவிடர் கழகத் தலைவர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற (22.5.2018) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் முதல் முதலாக இந்தக் குள்ள நரித்தன குல்லுகபட்டர்களின் குருகுல கல்வியைப் பற்றி எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர்.

தலைவர்கள் குமுறினார்கள் தர்ப்பைப் புல் கூட்டம் தொடை தட்டிக் கிளம்பிவிட்ட கீழறுப்பு வேலையை விளங்கிக் கொண்டனர். கழகத் தலைவர் மானமிகு

கி. வீரமணி அவர்கள் கொடுத்த குருகுலக் கல்வி எதிர்ப்புத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழ்ச்சி நிறைந்த குருகுலக் கல்வியின் கபாலத்தைக் கழற்றி மக்கள் மத்தியில் காட்ட வேண்டும் என்ற கரு அந்தக் கூட்டத்தில் உருவானதுதான். அதன்படி திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டம்தான் நேற்று மாலை சென்னை - புரசை, தாணா தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பொதுக் கூட்டம்.

வானம் கருத்து மழை கொட்டியதால் இன்று அவ் வளவுதான்; கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான் என்று கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், 'இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் - பிறகு முடிவு செய்ய லாம்' என்று கழகத் தலைவர் கூறிய யோசனைக்கு நல்ல பலன் கிடைத்தே விட்டது.

மழை மேகம் தன் சேட்டையை அமுக்கி கொண்டது - வாலை சுருட்டிக் கொண்டது. கூட்டம் உண்டு  என்று தலைவர்களுக்கெல்லாம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டன.

சூத்திர பஞ்சம மக்களின் கழுத்தைச் சுற்றும் பாம்பா யிற்றே - பார்ப்பனக் கருவில் உதித்த கரு நாகமாயிற்றே குருகுலக்கல்வி!

தந்தை பெரியாரால், நீதிக்கட்சி ஆட்சியால் கர்மவீரர் காமராசரால், திராவிட இயக்க ஆட்சியால் தட்டுத் தடுமாறி  பள்ளிக்கூடப் படிக்கட்டுகளை மிதித்து, முதல் தலை முறையாக நாலு எழுத்துக் கற்று, அடுத்த தலைமுறையில் கல்லூரிக் கதவைத் திறந்து சென்று, அதற்கடுத்து வக்கீ லாகவும், டாக்டராகவும் பொறியாளராகவும் தலையெடுக்க ஆரம்பித்ததுதான் தாமதம்.

அந்தக் கால கட்டத்திலே ஆரிய விரியன் பாம்பின் நச்சுக் கோப்பையில் பிரசவமான பாரதீய ஜனதா என்ற பார்ப்பன ஆதிக்கக் கட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து விட்டது. அதனை இயக்கும் சாவியை ஆர்.எஸ்.எஸ். தன் நகக் கண்ணில் வைத்துக் கொண்டு விட்டது.

ஓரிரு தலைமுறை ஆரிய ஆதிக்கத்தின் ஆணி வேர் அசைக்கப்பட்டு விட்டது அடிமட்டத்து ஆசாமிகள் எல்லாம் தலையெடுத்து விட்டார்கள் - இதற்கு மேல் இவர்களை வளர விடக் கூடாது எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கி விடும் - அதுதான் இந்த 'நீட்' தேர்வு.

12 ஆண்டுகள் படித்த +2 தேர்வு குப்பைக் கூடையில் 'நீட்' என்ற அவாளின் பர்ண சாலையான சி.பி.எஸ்.சி.யால் உருவாக்கப்பட்ட அகில இந்தியத் தேர்வு திணிக்கப்பட்டு விட்டது.

கரடியாய் கத்தினோம் வீதிக்கு வந்தும் போராடினோம். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று முத்தரப்பினரையும் கூட்டி மாநாடுகளும் நடத்தினோம் - மக்கள் மன்றத்திலும் போராடினோம்.

தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே நீட்டிலிருந்து விலக்குக் கோரும் இரு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியும் வைத்தோம்.

எல்லோருக்கும் 'பெப்பே' காட்டி விட்டது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல, இப்பொழுது நீட்டையும் தாண்டி குருகுலக் கல்வி என்னும் குடுமிகளின் சித்தாந்த சாரம் பாடத் திட்டமாக வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உஜ்ஜைனி யில் கூடி தீர்மானித்து விட்டார்கள் - உடனடியாக அதனைச் செயல்படுத்த உத்தரவு வெளிவருவதுதான் பாக்கி.

பத்தாம் வகுப்பு வரை படிக்கத் தேவையில்லை சமஸ்கிருதப் பாடங்களை நான் படித்து முடித்து விட்டேன் என்று கூறி தனக்குத்தானே சான்று பத்திரம் அளித்து விட்டால் போதும்; நேரடியாக பத்தாம் வகுப்பில் சேர்ந்து விடலாம்; (இப்படி செய்பவர்கள்தான் 'தகுதி, திறமை'பற்றி நீட்டி முழங்குகிறார்கள்).

இந்தத் திட்டம் யாருக்கானது என்று புரியவில்லையா? வேறு எந்த மண்ணுக்கும் புரிவதைவிட பெரியார் பிறந்த மண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே மேலெழுந்த வாரியாகப் பார்த்த மாத்திரத்திலேயே பளிச்சென்று புரிந்து விடாதா!

அதனைத்தான் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் அவிழ்த்துக் கொட்டினார். அதுவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே போஸ்ட் மார்ட்டம் செய்து காட்டினார்.

மழையின் தொடக்கத்தோடு சென்னை - புரசை வாக்கத்திலே குருகுலக் கல்விக்கான எதிர்மறை கால்கோள் விழா நேற்று நடத்தப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கொடுத்தார் நீட்டின் நீள அகல உயரத்தை எல்லாம் துல்லியமாக அளந்து காட்டினார்.

அய்.ஏ.எஸ். தேர்வு வரை ஆரியம் நுழைக்கும் நுட்ப மான விஷம நீரோட்டத்தை நூல் பிடித்துக் காட்டினார்.

தந்தை பெரியார் காலத்திலும், கர்மவீரர் காமராசர் காலத்திலும், அறிஞர் அண்ணா காலத்திலும் இருந்த எதிரிகளிடத்திலே நாணயம் இருந்தது.

இப்பொழுது நமது காலத்தில் நாம் சந்திக்க வேண்டிய எதிரிகளோ நாணயமற்ற நாசகாரர்கள் என்று அடையாளம் காட்டினார்.

என்ன சூழ்ச்சி வலைகளைப் பின்னினாலும் அவற்றை அறுத்துக் கொண்டு வெற்றித் திருமுகத்துடன் திராவிடம் வெளி வரும்! தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இந்த அணி வகுப்பின் முகப்பிலே நின்று ஆரிய வட கயிறுகளைத் துண்டு துண்டாக்கிக் காட்டும்.

திராவிடர் கழகத்துக்காரர்களோ, சகோதரர் வைகோ அவர்களோ சந்திக்காத வழக்குகளா - செல்லாத சிறைச் சாலைகளா? நாங்கள் முன்ஜாமீன் கேட்க ஓடிப் பதுங்கும் கோழைகள் அல்லவே என்று  ஆசிரியர் மானமிகு ஆசிரியர் அவர்கள் அடுக்கடுக்காக நாட்டு நடப்புகளை எடுத்து கொடுத்தார்.

தோட்டத்துப் புடலங்காயா தமிழன் நாடு? கருஞ்சிறுத்தைக் கண் விழித்தால் தெரியும்  சேதி என்று ஆவேசமாக வைகோ என்னும் திராவிட இயக்க எரிமலை வெடித்துக் கிளம்பியது.

நரேந்திரமோடியின் நச்சு எண்ணங்களின் பல்வரிசை களை ஒவ்வொன்றாக உடைத்துக் காட்டினார். தந்தை பெரியாரின் தமிழ் மண்ணிலே உங்கள் இந்துத்துவா ஆட்டம் செல்லுபடியாகாது.

இந்துத்துவாவின் விலா எலும்புகளை உடைத் தெறிவோம். அண்ணன் வீரமணி அவர்கள் சொன்னது போல, நம் காலத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நாணயமற்ற கோழைகள். காவிகளே உங்கள் காலத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உங்கள் வீழ்ச்சிப் படலம் தொடங்கி விட்டது! என்னுடைய கணக்கு 2019இல் உங்களுக்கான இடம் அதிகப்படியாக 145 ஆக இருக்கலாம்.

2019ஆம் ஆண்டோடு உங்களின் அதிகார ஆட்டம் அஸ்தமனமாகி விடும் அதையும் தாண்டி 2019இல் மீண்டும் இந்தியாவின் அதிகார பீடத்தில் அமர்ந்து விடுவீர்களே யானால் இந்தியா என்ற ஒன்று இருக்காது - அந்த அளவுக்கு உங்களின் இந்துத்துவா புரை ஏறி, மற்றவர்களை மற்ற மற்ற மாநிலங்களை புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்யும்.

என்னைத் திராவிட இயக்க போர்வாள் என்று தாய்க் கழகத்தின் தலைவரான எங்கள் அண்ணன் மானமிகு வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அந்த வார்த்தை பொய்த்துப் போகாது - அது மெய் யானது என்பதை என் எஞ்சிய காலத்தில் நிரூபிப்பேன்.

எங்கள் தந்தை பெரியார் 1973 டிசம்பர் 19ஆம் நாள் முழங்கினாரே - அந்த முழக்கத்தில் அடங்கியவற்றை முடிக்காமல் வெற்றிச் சிம்மாசனத்தில் அதனை ஏற்றாமல் நாங்கள் ஓய மாட்டோம். எப்படையை கூட்டி வந்தாலும் அதனைச் சந்திக்கும் திறமை திராவிட இயக்கத்துக்கு உண்டு.

முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர் உடலால் முடியாமல் இருக்கலாம்; ஆனால் தளபதி ஸ்டாலின் இருக்கிறார் - அவரை வழி நடத்த காரணங்களை   - ஆவணங்களை எடுத்து வைத்து நாட்டு மக்களை அடைகாத்திட ஆருயிர் அண்ணன் வீரமணி இருக்கிறார்.

திராவிடத்தை வீழ்த்த எந்தக் கொம்பனாலும் முடியாது. முடியவே முடியாது என்று முழக்கினார் புரட்சிப் புயல் மானமிகு வைகோ.

இயற்கையாக மழை பொழிந்தது. அதனோடு திராவிட இயக்க சித்தாந்த மின்னலும் சேர்ந்து இடி ஓசையும் கேட்டது - மின்னலும் வெளிச்சக் காற்றை வாரி வீசியது. மழையை பொருட்படுத்தாமல் வெகு மக்களும் திரண்டே வந்தனர். கூட்டத்தின் சொற்பொழிவுகளை முழுமையாக கேட்டனர்.

 

கொட்டும் மழையிலும் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்த மக்கள் திரள் (6.6.2018)

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner