எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 10  யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்டோர்நல சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழியர் ஞா.மலர்க்கொடி வங்கிப் பணியை நிறைவு செய்தமைக்கும், அவரது மகன் செல்வன்.சத்தியன் ஞானசேகரன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 காமன்வெல்த் விளையாட்டில், டேபிள் டென்னிஸ் போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்றதற்கும் பாராட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் அமைந்துள்ள அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது.

விழா நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நமது பாரம்பரிய நாதசுவர இசையுடன் துவங்கியது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி வரவேற்று பேசினார்.

விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் காப்பாளருமானதிரு.டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்து பேசினார்.தனது உரையில், மண்டல் குழு பரிந்துரையை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையும், நாடாளுமன்றத்தில் தங்களது குரலை எழுப்பினாலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்பதையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து தாம் போராடுவதாக கூறினார்.

திராவிடர் கழகத்தின் தலைவர்  கி.வீரமணி அவர்கள், விழாவில் கலந்து கொண்டு, தோழியர் ஞா.மலர்க்கொடி அவரது மகன் ஞா.சத்தியன் ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, சிறப்பானதொரு பாராட்டுரை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்தில் தந்தை பெரியாரின் தியாகத்தால் பெற்றுள்ள சமூக நீதி முன்னேற்றத்தை விரிவாக எடுத்துரைத்து, ஏனைய மாநிலங்களும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பின்பற்றி நடந்திட வேண்டும் என வட மாநிலங்களில் இருந்த விழாவிற்கு வருகை தந்த தோழர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். வாய்ப்பு கிடைத்தால், உலக அளவில் அனைவரும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு, உலக அளவில் சிறப்பான வெற்றியை பெற்றுவரும் சத்தியன், ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு என்று பலத்த கரவொலிக்கிடையே கூறினார். ஆசிரியரின் ஆங்கில உரையை கவனமுடனும், உற்சாகத்துடனும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் கரவொலி மூலம் தங்களது ஒப்புதலை தெரிவித்தனர்.

யூனியன்வங்கியின் சென்னை பிராந்தியத் துணை பொது மேலாளர் பி.எஸ்.வெங்கடேஷ், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவரும், பிற்படுத்தப்பட்டோர் குரல் மாத இதழின் ஆசிரியர் ஜே.பார்த்தசாரதி ஆகியோர்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தங்களது ஏற்புரையில், பாராட்டுரை வழங்கிய தமிழர் தலைவர் மற்றும் வாழ்த்துரை வழங்கிய பெருமக்களுக்கும், வருகை தந்த அனைவருக்கும் நன்றியினை தோழியர் ஞா.மலர்க்கொடி, ஞா.சத்தியன் தெரிவித்தனர்.

நல சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார். தோழியர் ஜி. ராஜகவிதா விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஏ.ராஜசேகரன் (அய்.ஓ.பி), எம்.இளங்கோவன் (அய்.அய்.டி), முத்துக்குமரன் (எம்.எப்.எல்), துரைராஜ், வேம்பையன் (சி.பி.சி.எல்), ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் (அய்.சி.எப்), சுரேஷ் (எச்.வி.எப்,ஆவடி), வடமலை ராசு, பிரபாகரன் (ஜி.அய்.சி.), இ.அய்.எஸ்.சி, நிறுவன நிர்வாகிகள், யூனியன் வங்கியில் இருந்து இந்தியா முழுமையிலும் உள்ள நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக நாதசுவரம் இசை வழங்கிய தோழர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். மேலும், யூனியன் வங்கியில் பணி நிறைவு செய்த தோழர்கள் ஜூவகுமாரி, ஆல்பர்ட் ராஜ் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

விழாவிற்கு உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், ராஜஸ்தான், மகாராட்டிரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகை தந்த அனைத்து பிரதி நிதிகளுக்கும், நல சங்கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் படம், தமிழர் தலைவரால் அளிக்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின் நடைபெற்ற நல சங்கத்தின் பொதுக்குழுவில், அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் தலைவராக கோ.கருணாநிதி, செயல் தலைவராக டாக்டர் அமிர்தான்சு, பொதுச் செயலாளராக டி.ரவிக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் தமிழ் நாடு பிரிவிற்கு தலைவராக கோ.கருணா நிதி, பொதுச் செயலளாராக எஸ்.நடராசன், பொருளாளராக எம்.பாக்கியராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner