எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொல்லுகிறோம் சமூகத்தை ஒழுங்குபடுத்துவது ஜாதி என்பவர்கள், ஆளுகிறார்களே!

சென்னை, ஜூன் 28-ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொல்லும் நேரத்தில், நிலத்தை ஏர் கலப்பை ஒழுங்கு படுத்துவதுபோல ஜாதிதான் சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது என்று சொல்லக் கூடியவர்கள் ஆட்சியில் இருக்கிறார்களே என்றார் மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.

வாய்மையே வெல்லும்!

16.6.2018 அன்று சென்னை வித்யோதயா பள்ளி அரங் கத்தில் மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர் கள் எழுதிய Speaking Truth to Power  (ஆங்கில நூல்) - அந்நூலின் தமிழாக்கமான வாய்மையே வெல்லும் இரு நூல்கள் வெளியிட்டு விழாவில் நூலாசிரியர் ப.சிதம்பரம்  அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

விழாத் தலைவர் ம.ராசேந்திரன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியவர் திரு.கி.வீர மணி அவர்களே,

கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களே,

ஒன்றிரண்டு சுருக்கமான செய்திகளை நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்ப் பத்திரிகைகள் எங்களைப் புறக்கணிக்கின்றன

ஒன்று, நான் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன். ஆனால், நான் ஆங்கிலத்தில் எழுதுவது பஞ்சாபி, உருது, இந்தி, மராட்டி, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அன்றே மொழி பெயர்க்கப்பட்டு அந்த வாரமே வருகிறது. ஒரு மொழியை விட்டுவிட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். தமிழ்ப் பத்திரிகைகளை நான் புறக்கணிக்கவில்லை. தமிழ்ப் பத்திரிகைகள் எங்களைப் புறக்கணிக்கின்றன.

என்னுடைய ஆழ்ந்த வருத்தம் என்னவென்றால், இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் தயாராக இல்லை. இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்காக ஒரு தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்க முடியாது. ஆனால், என்றாவது தமிழ்ப் பத்திரிகைகளில் இந்தக் கட்டுரை வரவேண்டும் என்கிற ஒரு வருத்தத்தைத் தவிர எனக்கு வேறு வருத்தங்கள் கிடையாது.

ஆனால், இன்னொரு ஆசை இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதி விடுகிறேன். தமிழிலேயே எழுத முடியுமா? என்பதை நான் யோசித்துப் பார்க்கிறேன்.

ஆங்கிலத்தில் எழுதி மொழி பெயர்க்காமல், தமிழில் எழுத முடியுமா? ஒரு அச்சம் என்ன தடுக்கிறது. தமிழி லேயே எழுதினால், அந்த எழுத்துக்கும் நாம்தான் பொறுப்பு; அந்தக் கருத்துக்கும் நாம்தான் பொறுப்பு.

ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்தால், அதை நான் எழுதவில்லை, மொழி பெயர்ப்பாளரின் தவறு என்று தள்ளிவிட்டுவிடலாம்.

விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை

ஆனால், என்றாவது ஒரு நாள், ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர, தமிழிலேயே அந்தச் செய்திகளை எழுதவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்குக் காலம் வரும் என்று நினைக்கிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொன்னார்கள், கவிதை - இலக்கியம்; சிறுகதை - இலக்கியம்; நாவல் - இலக்கியம்; குறுநாவல் - இலக்கியம்; நாடகம் - இலக்கியம். ஆனால், தமிழில் எனக்குத் தெரிந்தவரை, விமர்சனம் - இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆய்வுக் கட்டுரைகள் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆங்கிலத்தில் வால்டர் லிப்மான் என்று ஒருவர் இருந்தார். நான் மாணவனாக இருந்தபொழுது, உலகப் புகழ்பெற்ற அரசியல் விமர்சகர். நியூயார்க் டைம்சில் எழுதுவார், இந்து பத்திரிகையில் அதனை வெளி யிடுவார்கள்.

வால்டர் லிப்மானுடைய எழுத்து இலக்கியமாகக் கருதப்படுகிறது. அரசியல் விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதைப்போல, நம்முடைய தமிழ் மொழியிலேயும், மற்ற மொழிகளிலேயும் அரசியல் விமர்சனம், பொருளாதார விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு காலம் வரவேண்டும்.

இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான், அதற்கு ஒரு பெருமை கிடைக்கும். அதற்கு ஒரு நீடித்த புகழ் கிடைக்கும்.

சுயராஜ்ஜியாவில், ராஜாஜி தலையங்கம் எழுதினார்; எம்.ஆர்.மசானி தலையங்கம் எழுதினார். சலபதிராவ் என்ற ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர் இருந்தார், அவர் பல தலையங்கங்களை எழுதினார்.

இந்து பத்திரிகையில் கே.ரங்கசாமி என்பவர் இருந்தார்; பிறகு ஜி.கே.ரெட்டி இருந்தார். குல்தீப் நாயர் இன்னும் நம்மோடு வாழ்கிறார். இவர்கள் எல்லாம் மிகமிகத் தர மான அரசியல் விமர்சகர்கள். அவர்களுடைய எழுத்து வந்திருக்கிறது. ஆனால், அதனை இலக்கியமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் நமக்கு இன்னும் வரவில்லை.

தமிழ் அறிஞர்களுக்கு ஒரு கோரிக்கை!

ஒரு காலத்தில் அரசியல் விமர்சனம், பொருளாதார விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண் டும் என்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

பல பேர் கேட்கிறார்கள், என்ன எழுதுகிறீர்கள் நீங்கள்? நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள், சும்மா இருக்கக்கூடாதா நீங்கள்? என்று. ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? சும்மா இருங்களேன்!

நான் பேராசிரியர் நன்னன் அவர்களை வைத்துக் கொண்டு கேட்டேன், சும்மா என்கிற வார்த் தைக்கு ஈடாக வேறு மொழியில் ஒரு சொல்லை சொல் லுங்களேன் என்றேன்.

சும்மா என்ற சொல்லுக்கு ஈடான சொல் வேறு மொழியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எங்கே வந்தீர்கள் என்றால், சும்மாதான் வந்தேன்.

பையன் என்ன செய்கிறான்? என்று கேட்டால், சும்மாதான் இருக்கிறான்.

சும்மா என்றால் என்ன? சும்மா எப்படி இருக்க முடியும்? சும்மா இருப்பதே சுகம் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால், சும்மா எப்படி இருக்க முடியும்?

யானையினுடைய துதிக்கை சும்மா இருக்குமா?

ஆகவேதான், என்னைப் பார்த்து கேட்பவர்களுக்கு நான் சொல்வேன், சும்மா இருக்கக்கூடாதா? என்று கேட்டால், சும்மா இருக்க முடியாது என்று சொல் வேன்.

என்றைக்கு யானையினுடைய துதிக்கை சும்மா இருக்கிறதோ, அன்றைக்குத்தான் நான் சும்மா இருக்க முடியும்.

யானையினுடைய துதிக்கை சும்மா இருக்கவே முடியாது. அது ஆடிக்கொண்டேதான் இருக்கும். யானையினுடைய துதிக்கை எப்பொழுது சும்மா இருக்கிறதோ, அப்போதுதான் நான் சும்மா இருக்க முடியும் என்று சொன்னேன்.

மூன்று காரணங்கள்!

நான் எழுதுவதற்குக் காரணங்களைச் சொல்வதைவிட உதாரணங்களைச் சொல்கிறேன். எழுதுவதற்கான கார ணத்தினை அந்த உதாரணங்களிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

மூன்று உதாரணங்களைச் சொல்கிறேன்.

ஒன்று, பொருளாதார சம்பந்தமான கட்டுரை. பண மதிப்பிழப்பைப்பற்றி.

அறவழி மீறி குடிமக்களைத் துன்புறுத்தும் அரசைப்பற்றி பேசும், 551 ஆவது திருக்குறளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசாங்கமும், மக்கள்மீது தாங்கொணாத சிரமத்தையும், துயரத்தையும் சுமத்துக்கூடாது.

சரித்திரப் புகழ்பெற்ற ஹிப்போகிராட்ஸ், தம் நூல் ஒன்றில் இப்படி சொல்லியிருக்கிறார்.

துன்பம் விளைவிக்க வேண்டாம் - யாருக்குச் சொன் னார் தெரியுமா? ஹிப்போகிராட்ஸ் வோத் என்று ஒரு உறுதிமொழியை ஒவ்வொரு டாக்டரும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அரசியல் சாசனத்தின்மீது பதவிப் பிராமணம் செய் வதைப்போல, ஹிப்போகிராட்ஸ் வோத் என்று ஒவ் வொரு டாக்டரும் படித்து வந்த பிறகு உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஹிப்போகிராட்ஸ் சொன்னது, டாக்டருக்கு. நீ என்ன செய்யாவிட்டாலும் பரவாயில்லை. யாருக்கும் துன்பம் மட்டும் செய்யாதே!

பண மதிப்பிழப்பால் ஒன்றரை சதவிகிதம்

வளர்ச்சி குறையும் என்று சொன்னேன்!

ஒரு அரசால் நன்மை செய்யாவிட்டாலும்கூட, அந்த அரசு துன்பம் விளைவிக்கக்கூடாது. பண மதிப்பிழப் பைப்போல ஒரு துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது.

21 ஆம் நூற்றாண்டிலே இந்திய பொருளாதாரத்திற்கு மிக மிக மிகப்பெரிய கேடை விளைவித்தது பணமதிப்பிழப்பு. பண மதிப்பிழப்பு நடந்த மறுநாளே, நான் நாடாளுமன்றத்தில் சொன்னேன், ஒன்றரை சதவிகிதம் வளர்ச்சி குறையும் என்று சொன்னேன்.

பிறகு, டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இரண்டு சதவிகிதம் வரை போகலாம் என்று சொன்னார்.

இன்றைக்கு என்ன நடந்திருக்கு? 2015-2016 ஆம் ஆண்டில், 8.2 சதவிகித வளர்ச்சி

2017-2018 ஆம் ஆண்டில் 6.7 சதவிகித வளர்ச்சி; 8.2 -லிருந்து 6.7 அய் கழித்துப் பாருங்கள் - 1.5 சதவிகிதம். நான் சொன்னது பலித்துவிட்டதே என்று மனம் வலித்துக் கொண்டிருக்கிறது.

நான் சொன்னது பலித்துவிட்டதே என்று நான் மகிழ்ச்சி யடையவில்லை. மாறாக மனம் வலிக்கிறது.

இதற்குத்தான் எழுதுகிறேன், ஓர் அரசு மக்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது. அப்படி துன்பம் செய்தால், அதனைத் தட்டிக் கேட்கக்கூடிய மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.

அந்த 551 ஆவது திருக்குறளை சொல்லலாமா? சொல் லக்கூடாதா? என்று எழுதி, எழுதி, அழித்து அழித்து கடைசி யாக சொல்லவேண்டாம் என்கிற முடிவிற்கு வந்தேன்.

காரணம், அந்தத் திருக்குறளில் கடுமையான சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடிய தாகும்.

551 ஆவது திருக்குறள்

இந்தக் குறளை மேற்கோளை எழுதாமல், 551 ஆவது திருக்குறள் என்று மட்டும் சொல்லிவிட்டேன். அந்தத் திருக் குறளை மேற்கோள் காட்டவேண்டும் என்பதில் எனக்குப் பேராசை.

ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கை வரும் பொழுது, திருக்குறளை சொல்லாமல் நான் தொடங்கியது கிடையாது.

ஆனால், இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்ட நான் விரும்பாததற்குக் காரணம், அதில் ஒரு கடுஞ்சொல் அடங்கியிருக்கிறது.

அடுத்த ஒரு உதாரணம்,

இந்திய நாட்டுக் குழந்தைகளைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இதில் உங்கள் குழந்தைகளைப்பற்றி சொல்லவில்லை; என்னுடைய குழந்தைகளைப்பற்றி சொல்லவில்லை. சில பேருடைய குழந்தைகளாக இருக்கலாம். இந்தியாவில், இப்படிப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். நாம் இல்லை என்று நினைக்கலாம்; இல்லை என்கிற ஒரு கற்பனையில் இருக்கிறோம்.

குழந்தைகளின் முதல் அய்ந்தாண்டுகளில் கொடுக்கப் படும் கவனிப்பே, அவர்களுடைய வாழ்க்கை முழுமைக் கான மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான ஆதாரமாக விளங்குவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இரண்டில் ஒரு குழந்தை இரத்தச் சோகையோடு, மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவோடு, வளர்ச்சி குறைந்து போயிருக்க, அய்ந்தில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடும் உள்ளது.

இந்தியாவில், அய்ந்தில் ஒரு குழந்தை முழு மனிதனாக வரவே முடியாது. அய்ந்தில் ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் குறை மனிதனாகவே வாழவேண்டும். ஏனென்றால், முதல் அய்ந்தாண்டில், ஊட்டச்சத்து அந்தக் குழந்தைக்குக் கிடையாது.

25 லட்சம் குழந்தைகள்

ஆக, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால், இன்றைய நிலைமையில், ஏறத்தாழ 25 லட்சம் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அரை மனிதனாக, குறை மனிதனாகத்தான் வாழவேண்டும்.

மன வளர்ச்சியும் இருக்காது; உடல் வளர்ச்சியும் இருக்காது. எந்தப் பங்களிப்பையும் தர முடியாது அவர்களால். இதுதான் இந்தியக் குழந்தைகளின் நிலைமை.

இங்கே குழந்தையும் - தெய்வமும் கொண்டாடக் கூடிய இடத்தில் என்று பேசுகிறேன்.

இந்த வரிகளைத்தான் நான் கட்டுரையின் முடித்தேன் - குழந்தையும் - தெய்வமும் கொண்டாடப்படும் இடத்தில் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. ஆனால், ஒரு தேச மகனாய், தெய்வங்களைக் கொண்டாடுகிறோம் - ஆனால், குழந்தைகளைப் புறக்கணிக்கிறோம்.

கடைசியாக ஒரு உதாரணம்,

ஜாதி - ஒரு அற்புதமான கட்டுரை- அண்மையில்தான் வெளிவந்தது. அந்த ஆசிரியர் ஆரம்பக் காலத்தில், பெரிய தலைவர்கள்கூட ஜாதியைப்பற்றி எழுதும்போதும், பேசும்போதும் தவறாக சித்தரித்தார்கள் என்பதை, நாசூக்காக, தைரியமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

அந்த வரிசையில், மதன்மோகன் மாளவியா, கே.எம். முன்ஷி, ராஜாஜி, தயானந்த சரசுவதி பெயர்களும் அடங்கு கிறது. ஆனால், பிற்காலத்தில் அவர்கள் தங்களுடைய கருத்தை மாற்றிக் கொண்டார்கள்.

ஜாதியைப்பற்றி காந்தியார்!

உதாரணத்திற்கு, காந்திஜி பிற்காலத்தில் சொன்னார், இன்றைய நவீன கால அர்த்தத்தில் நான் ஜாதியை ஏற்கவில்லை. அது வளர்ச்சியைத் தடுக்கும். சீழ்கட்டி - ஊனம் என்றார்.

ஆனால், இன்றைய இந்தியாவில் ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர் சொல்கிறார், நிலங்களில் ஏர்கலப்பை என்ன விதமான பணிகளைச் செய்கிறதோ, அதையேதான் இந்து சமூகத்தின் ஜாதி அமைப்பு செய்கிறது - அதனை நிர்வகித்து ஒழுங்குபடுத்துகிறது.

ஜாதிதான் இந்து மதத்தை ஒழுங்குபடுத்துகிறதாம்!

ஜாதி இந்து அமைப்பினை நிர்வகித்து ஒழுங்கு படுத்துகிறதாம்.

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நாம் பேசுகி றோம். ஆனால், அந்த ஜாதிதான் இந்து மதத்தை ஒழுங்குபடுத்துகிறது என்று சொல்லக்கூடிய ஒரு முதலமைச்சர் இருக்கின்ற 21 ஆம் நூற்றாண்டில், நீங்களும், நானும் வாழ்கிறோம். அதற்காகத்தான் எழுதுகிறோம்.

இந்தக் கொடுமைகள் எல்லாம் ஒழியவேண்டும் என்றால், எல்லோரும் எழுதவேண்டும்; எல்லோரும் பேசவேண்டும்.

பல ஆண்டுகளுக்குமுன்பு ஜவகர்லால் நேரு அவர்கள் சிறையில் இருந்து கடிதம் எழுதினார்.

என்ன எழுதுவது என்று கேட்கிறீர்கள்? யாருக்கு எழுதுவது? என்று கேட்கிறீர்கள். சுலபமான வழி இருக்கிறது. உங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள்; அமெரிக்காவில் வாழக்கூடிய உங்கள் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்.

நான் சும்மா இருக்க முடியாது

என்ன நடக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எழுதாத, பேசாத ஒரு சமுதாயம் - ஊமைத்துரையாக இருக்கக்கூடிய சமுதாயத்தில் இந்த இழுக்கெல்லாம் போகாது. எழுதவேண்டும் - பேசவேண்டும் - அப்பொழுது தான் சமுதாய இழுக்குகள் - அரசியல் ஒழுங்கீனங்கள் - பொருளாதார தவறுகளையெல்லாம் களைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

அதற்காகப் பேசுகிறேன், அதற்காக எழுதுகிறேன் - அதற்காகத்தான் சொன்னேன், நான் சும்மா இருக்க முடியாது என்று சொல்லி, நன்றி கூறி, விடைபெற்றுக் கொள்கிறேன்.

- இவ்வாறு மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner