எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 13 மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று (12.7.2018) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்தரங்கில் தலைமை வகித்து உரையாற்றினார்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார்.

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடக்க உரையாற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவன மேனாள் இயக்குநர் முனைவர் மு.சண்முகம், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து நிறைவாக தமிழக உயர் கல்வி மன்ற முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ. இராமசாமி உரையாற்றினார்.

மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறினார்.

கல்வி காவிமயமாவதன் நோக்கம் மற்றும் அதன் ஆபத்தை விளக்கி அனைவரும் பேசினார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மோடி தலைமையில் அமைந்த நாள்முதல், மத்திய அரசு  கல்வித்துறையை காவிமயமாக்கி வருகிறது. வாஜ்பாய் தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றபோதும் கல்வித்துறையில் காவியைப் புகுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. தற்பொழுது தீவிரமாக கல்வியை காவிமயப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கல்வி உரிமையைப் பறித்து, சமூக நீதியைப் புறந்தள்ளி, இந்திய அரசமைப்புச்சட்டத்துக்கு எதிராக  தொடர்ச்சியான முயற்சிகள் நடந்து வருகின்றன. பன்னாட்டு சுரண்டலுக்கு கல்வியை இட்டுச்செல்வதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. நீட் தேர்வுத் திணிப்பு, யுஜிசி கலைப்பு, கல்வியை இந்திய மயமாக்கல் என்பதன் பெயரால் குருகுலக்கல்வியைத் திணிப்பது, சமஸ்கிருதத்தை திணிப்பது உள்ளிட்ட அனைத் திலும் ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளைப் புகுத்துவதுதான் மத்திய அரசின் கல்விக்கொள்கை, மக்கள் விரோத கல்விக் கொள்கையாக இருக்கிறது. அதை ஒருங்கிணைந்து முறியடிப் போம் என்று கருத்தரங்கில் பேசிய கல்வியாளர்கள் குறிப் பிட்டார்கள்.

பல கலாச்சாரம், பல மொழிகள், பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட இந்நாட்டில் ஒரு மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் புகுத்துகின்ற மத்திய அரசின் செயலை முறியடித்து, மீண்டும் பாஜக அரசு வரமுடியாத அளவிற்கு ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என்றும் சூளுரைத்தார்கள்.

நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்களான 'நீட் தேர்வு அவலங்கள்' (ரூ.30), 'நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?' (ரூ.10), 'மீண்டும் மாநிலப்பட்டியலில் கல்வி ஏன்?' (ரூ.50),  'புதிய கல்விக் கொள்கையா? நவீன குலக்கல்வித்திட்டமா?' (ரூ.20), நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய  நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்? (ரூ.10) ஆகிய புத்த கங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். 5 புத்தகங்களின் நன்கொடை மதிப்பு ரூ.120. கருத்தரங்கத்தில் ரூ.20 தள்ளு படியுடன் ரூ.100க்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன.

நூல்களைப் பெற்றுக் கொண்டவர்கள்

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன்,  பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், தங்க.தனலட்சுமி, கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், கி.சத்தியநாராயணன், தென்.மாறன், இராமேசுவரம் கேம்எம்.சிகாமணி, குன்றத்தூர் திருமலை, ஊரப்பாக்கம் சீனுவாசன், தமிழ்செல்வி, மாணவர் கழகம் தொண்டறம் உள்பட ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

கலந்துகொண்டவர்கள்

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன், புலவர் பா.வீரமணி, திண்டிவனம் சிறீராமுலு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

யு.ஜி.சி. கலைப்பு அரசமைப்புச்சட்ட விரோதம்

தமிழர் தலைவர் பேட்டி

கருத்தரங்கத்தின் முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

மாநிலங்களுடைய உரிமை கல்வி.அதை அறவே எடுத்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ்சினுடைய ஆணைப்படி, மத்திய அரசு மோடி அரசு நடந்து கொண்டிருக்கிறது. கல்வியை மாநிலப்பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரன்ட் லிஸ்ட்டுக்கு கொண்டு போயிருந்தும்கூட, நேரடியாக மத்திய அரசின் பட்டியலாகவே அதை ஆக்கிக்கொண்டு, யாரையும் கலக்காமல், எந்த மாநிலத்தையும் கலக்காமல், அவர்கள் தங்கள் இஷ்டம்போல, பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைப்போம், நாங்கள் பார்த்து பணம் கொடுக்கக்கூடிய கமிட்டியை உருவாக்குவோம் என்று சொல்வது இருக்கிறதே, இது முழுக்க முழுக்க அரசமைப்புச்சட்ட விரோதம்.  கலாச்சார, கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமையைப் பறிப்பதற்கு நாடாளுமன்றமே சட்டம் இயற்றினாலும்கூட, அது அரசமைப்புச்சட்டத்தினுடைய கட்டுமானத்தை உடைப்பதாகும்.

அடிப்படைக் கட்டுமானத்தை உடைக்கக்கூடிய சட்டம்கூட நிறைவேற்றப்பட முடியாது. நிறைவேற்றினால், அது அரசமைப்புச்சட்டத்துக்கு முரணாகும்.  இதையெல்லாம் திடீரென்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குக் கதவைத் திறப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை கல்வி அறிஞர்கள் இன்றைக்கு விளக்கி இருக்கிறார்கள்.  நாடு தழுவிய அளவிலே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மேற்பட்டப்படிப்பு படிக்கிறவர்கள் இதை உணரவேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner