எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடசென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்

காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர்

சென்னை, ஜூலை 18 வடசென்னை மாவட்ட கழக இளை ஞரணி சார்பில், கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள், காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் என்று சுட்டிக் காட்டிப் பேசினார். வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில், கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, 14.07.2018 அன்று மாலை 7 மணிக்கு அரும்பாக்கம் என்.எஸ்.கிருஷ்ணன் நகர் முதன்மைச் சாலையில் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.இர.சிவசாமி, மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் நா.பார்த்திபன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சோ.சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கல்வி வள்ளல் காமராஜரை பெரிதும் போற்றக்காரணம் சுயமரியாதை உணர்வா? அரசியல் நாகரிகமா?, ஜன நாயகப் பண்பா?, கல்வி வளர்ச்சித் தொண்டா?, என்று நான்கு கோணங்களில் எது சிறந்தது என்கின்ற வகையில் சுழற்சி முறையில் சொற்போர் நடைபெற்றது.

காமராஜரின் அரசியல் நாகரிகம்!

தொடக்கத்தில் காமராஜரின் அரசியல் நாகரிகம் என்ற தலைப்பில் உரையாற்றிய கா.அமுதரசன், 1961 இல் நடைபெற்ற தேவகோட்டை திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார் தன் மரணவாக்குமூலமாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். அதாவது, மூவேந்தர் ஆட்சிக்காலத்தையும் உள்ளடக்கிய கடந்த 2000 ஆண்டு களில் இல்லாத சமூக வளர்ச்சி காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்காவது தமிழர்கள் காமராஜரை ஆதரிக்க வேண்டும் என்பதைத் தொடக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர நேர்ந்த போது, அதற்கு காங்கிரஸ் எதிராக இருந்தாலும், அதே காங்கிரசுகாரரான காமராஜர் பெரியாரின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நேருவிடம் பேசியதையும், ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் இந்தி வந்து அங்கே குந்திக்கும் என்று குறிப்பிட்டதையும் சொல்லி காமராஜரின் அரசியல் நாகரிகத்தைப் பட்டியலிட்டார்.

காமராஜரின் ஜனநாயகப்பண்பு!

காமராஜரின் ஜனநாயகப்பண்பு என்ற தலைப்பில் வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி தனது உரையில், கண் பார்வை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு வெளி நாட்டுக்குச் சென்று 10 நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் நிலையில், அவ்வளவு விரைவாகச் செல்ல சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பதைக் கேள்விப்பட்ட காமராஜர் அதிகாரிகளைக் கடிந்து கொண்டதையும், மக்களுக்காகச் சட்டமா? சட்டத்திற்காக மக்களா? என்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பி, உடனடியாக அச்சிறுவனை வெளிநாட்டிற்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னதையும், காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒரு அமைச்சர், அதிகாரிகளை மதிப்பதேயில்லை என்ற தகவலை பாதிக்கப்பட்ட ஒரு அதிகாரியே காமராஜரிடம் நேரில் சென்று முறையிடுகிறார். காமராஜரும் சம்பந்தப்பட்ட அதிகாரியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே அமைச்சரை அழைத்து அதுகுறித்துப் பேசாமல் வேறு அலுவல்களைப்பேசி, சொல்ல வேண்டியதை குறிப் பாலேயே உணர்த்திவிட்டதையும் குறிப்பிட்டு அவரின் ஜனநாயகப் பண்புகளை பட்டியலிட்டார்.

காமராஜரின் கல்வி வளர்ச்சித்தொண்டு!

கல்வி வளர்ச்சித்தொண்டு என்ற தலைப்பில் பேசிய சென்னை மண்டல மாணவர் கழக செயலாளரும், வழக்குரைஞருமான பா.மணியம்மை, நிலம் ஈரமாக இருந்தால்தான் பயிரிட முடியும். அதுபோல வயிறு காயாமல் இருந்தால்தான் கல்வி பயில முடியும் என்று மதிய உணவு போட்டவர் காமராஜர்! இதற்காக 150 கல்வி சீர்திருத்த மாநாடுகள் நடத்தி மக்களிடமிருந்து 64 கோடி அளவுக்கு பொருட்களை பெற்று நம் கல்விக்காக அளித்தவர் காமராஜர் என்றும், எந்த தாழ்த்தப்பட்டவன் டாக்டராகி ஊசி போட்டு எவன் செத்திருக்கான்? எந்த பிற்படுத்தப்பட்டவன் பாலம் கட்டி இடிஞ்சி விழுந் திருக்கு? வாய்ப்புக் கொடுத்தால் அவனவன் தகுதி திறமை வளர்ந்துட்டுப் போகுது! வாய்ப்பே கொடுக்காமலிருந்தால் எப்படி? என்று கேள்வி கேட்டு, தகுதி திறமை என்று பேசிக்கொண்டிருந்தவர்களின் வாயை அடைத்தவர் என்றும் குறிப்பிட்டு, இலவசக்கல்வி என்றால் காமராஜர், காவிக்கல்வி என்றால் நரேந்திரமோடி என்று குறிப்பிட்டு தனது உரையை முடித்துக்கொண்டார்.

காமராஜரின் சுயமரியாதை உணர்வு!

சுழலும் சொற்போரில் இறுதியாகப்பேசிய வழக்கு ரைஞரும், வடசென்னை மாவட்டத் தலைவருமான சு.குமாரதேவன் அவர்கள், காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக்கு எதிரணியில் இருந்தவர் காமராஜர் என்றும், அதனால், ஆச்சாரியாரின் சம்பந்தியான காந்தி அரிஜன் இதழில் காமராஜரை கிளிக் (சிறீவீஹீமீ) என்ற சொல்லால் குறைவுபடுத்தி விமரிசித்து எழுதினார். சுயமரியாதையால் உந்தப்பட்ட காமராஜர் காந்தியின் மீதே கடுமையாக கோபப்பட்டார். இந்த சூழலில் 1946 இல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது, காமராஜரை மட்டம் தட்டுவதற்காக, அவருக்கு எதிராக ராஜாஜி செய்த சூழ்ச்சியையும், அதை காமராஜர் மதிநுட்பத்துடன் எதிர் கொண்ட வரலாற்றுச் சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார். மொத்தத்தில் தந்தை பெரியார் அவர்கள் மூட்டிய அணையாதத் தீயான சுயமரியாதைத்தீ, தமிழ்நாடெங்கும் பல்கிப் பரவியதைப்போல, சுயமரியாதை இயக்கத்தில் இல்லாவிட்டாலும்கூட, அந்த உணர்வுதான் காம ராஜரையும் வழிநடத்தியது என்ற கருத்தில் உரையாற்றினார்.

தமிழர்களின் ரட்சகர் காமராஜர்!

இறுதியாக நான்கு பேரும் பேசிய கருத்துக்களை ஒட்டியும், விடுபட்ட விசயங்களையும் தொகுத்துப் பேசிய செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் கூடுதலாக, தந்தை பெரியார் காமராஜரை தமிழர்களின் ரட்சகர் என்றும், பச்சைத்தமிழர் என்றும் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிவிட்டு, இந்த சொல்லை வெல்லும் சொல் வேறுண்டா? என்று மக்களைப்பார்த்து கேட்டார். காமராஜரை அப்படிக் கொண்டாடியவர் பெரியார். எங்களைப் பார்த்து காமராஜர் பிறந்தநாளை தி.க.வினர் கொண்டாடுகிறார்களே என்று கேட்கின்றவர்கள் இன்றும் இருக்கின்றனர். காமராஜரை கொல்ல முயற்சித்தவர்கள் இன்று காமராஜருக்கு பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அவர்களைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி இது என்று சுளுக்கென்று சாட்டையை வீசினார். தொடர்ந்து சமீபத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் பெரியார் திடலில் காமராஜரைப்பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டு, பெரியாரா காமராஜரை முதலமைச்சர் ஆக்குனாரு? எம்.எல்.ஏக்கள்தான் ஆக்குனாங்க என்று திருச்சி வேலுசாமி அறியாமல் பேசி யதற்கு, அது தெரியாதா எங்களுக்கு? இவரு ஏதோ புதுசா கண்டுபிடிச்சு சொல்றாரு! எம்.எல்.ஏ ஓட்டு போட்டான்யா! அந்த எம்.எல்.ஏக்களை ஓட்டு போட வைத்தது யாரு? பெரியாரல்லவா! அதுமட்டுமா, வரதராஜூலு அவர்களின் வீட்டில் வைத்து காமராஜரை, முதலமைச்சர் பதவியை ஏற்கச் சொல்லி சம்மதிக்க வைத்தவர் பெரியாரல்லவா! குணாளா! குலக்கொழுந்தே! என்று அண்ணா எழுதியதையும் நினைவூட்டி, திராவிடர் இயக்கத்திற்கும், காமராஜருக்கும் இருக்கும் தொடர்பை எடுத்துரைத்து, திருச்சி வேலுச்சாமியை கண்டித்தார்.

பார்ப்பனர்களைப் பழிவாங்கியவர் காமராஜர்!

தொடர்ந்து யாரை வைத்து குலக்கல்வியை ராஜாஜி கொண்டு வந்தாரோ, அதே சி.சுப்பரமணியத்தை வைத்து அந்தக் குலக்கல்வியை திரும்பப்பெற வைத்தவர் காமராஜர். அதனால்தானே நாமெல்லாம் தப்பித்தோம் என்று நமக்கு வந்த ஆபத்தைச் சுட்டிக்காட்டிவிட்டு, யாரை கோயிலுக்குள் நுழைய விடமுடியவில்லையோ, அந்த ஜாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதரின் மைத்துனரும், இரட்டைமலை சீனிவாசனின் பேரனுமான பரமேஸ்வரனை மடாலய மந்திரியாகப் (அறநிலையத் துறை அமைச்சர்) போட்டு, சிதம்பரம் கோயிலுக்குள் அமைச்சரை வரவேற்க வைத்து, அவருக்கு பரிவட்டமும் கட்டவைத்து பார்ப்பனர்களை பழிவாங்கியவர் காம ராஜர் என்றதும் பார்வையாளர்கள் தம்மை மறந்து கைதட்டினர். மேலும் அவர், காமராஜரை படிக்காதவர் என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அவர் கட வுளை ஏற்றுக்கொள்ளாதவர். மக்களை நேசித்தவர். காங்கிரசில் இருந்தாலும் அசுரர் குலத்தலைவர்! காரணம் காங்கிரசிலேயே இருந்த அவாளின் ஆதிக்கத்தை எதிர்த் தவர் என்று காமராஜரின் பல்வேறு சிறப்புகளை பட்டியலிட்டு, எல்லாக் கோணங்களிலும் காமராஜர் இந்த இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர் தான். அப்போதுதான் இப்போதிருக்கும் அரசுகளும், அதன் ஆட்சியாளர்களின் யோக்கியதையும் மக்களுக்குத் தெரியும். அதற்குத்தான் இந்த கூட்டம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கழக செயலவைத்தலைவர், கழக சொற்பொழிவாளர்கள், மாநில, மண்டலப்பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு பய னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட காங்கிரசு தலைவர் க.வீரபாண்டியன், த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் சுரேஷ்பாபு, தி.மு.க.வைச் சேர்ந்த ஜீ. திவாகர், பகுஜன் சமாஜ் கட்சி பகுதி தலைவர் வா.செல்வக்குமார், பெரியார் பெருந்தொண்டர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட இளைஞரணியிப் பொறுப்பாளர்கள், மாணவர் கழகத்தில் இணைந்த மாணவர்களுக்கு கழக செயலவைத் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். நிசழ்ச்சியை முன்னிட்டு கடைவீதிகளில் நன்கொடை திரட்டும் பணிகளில் ஈடுபட்ட பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் சோ.சுரேஷ், துணைச்செயலாளர் கோ.பகல வன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. கலைமணி, புரசை பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா.காரல்மார்க்ஸ், சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் செ.பிரவின்குமார், ஆவடி மாவட்ட மாணவர்கழக அமைப்பாளர் வ.ம.வேலவன், அரும்பாக்கம் க.தமிழ்ச் செல்வன், சு.விமல்ராசு, பி.முரளிகிருட்டிணன், அம்பேத்கர், சிகரன், யாழ்திலீபன், முகில்வேந்தன் ஆகியோருக்கு கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்!

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. வீரபத்திரன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி, வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் கி.இராமலிங்கம், சி.பாஸ்கர், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், செந்துறை சா.இராசேந்திரன், இசை இன்பன், மகளிரணித்தோழர்கள் க.பார்வதி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, அமைப்பாளர் க.சுமதி, தங்க.தனலட்சுமி, மு.தமிழ்ச்செல்வி, பவானி மற்றும் கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் துணைத்தலைவர் ச.முகிலரசு, அமைப் பாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மஞ்சநாதன், திரு வொற்றியூர் பா.பாலு, ஊரப்பாக்கம் அரங்க. பொய்யா மொழி, கொரட்டூர் கோபால், அமரன் உள்ளிட்டவர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக கழக புழல்நகர செயலாளர் அறிவுமாணன் குழுவினரின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நெடுஞ்சாலை, கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன் முதன்மைச் சாலை சந்திப்பில் தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோரது மின்விளக்கு கட்அவுட்கள் நெடிதுயர்ந்து அமைக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலையிலும் கழகக்கொடிகள், வரிசையான வெள்ளைக் குழல் விளக்குகள், பதாகைகள் ஆகியவை அமைக்கப்பட்டு ஒரு மாநாட்டுக்கான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட் டத்தின் நிறைவாக புரசைப்பகுதி இளைஞரணி அமைப் பாளர் சா.காரல்மார்க்ஸ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner