எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எது தேவையோ அதை ஏற்று தேவையற்றதை வெளியேற்றுங்கள்! பெரியாரை சுவாசிப்பது என்றால் அதன் பொருள் இதுதான்

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப்  பணித் தோழர் கூட்டமைப்பினர் கூட்டத்தில் தமிழர் தலைவர் வாழ்வியல் உரை

திருச்சி, ஜூலை 19  தூய காற்றை உள்வாங்கி, கெட்ட காற்றை வெளியேற்றுவது போல் தேவையான கருத்துகளை ஏற்று, தேவையற்றவைகளை வெளியேற்றுவதுதான்  பெரியாரியல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது உரை வருமாறு:

14.7.2018 அன்று திருச்சியில், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பு

நம்முடைய பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல நேரங்களில், பல சிறப்பான கலந்துரையாடல், மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ளுதல் இவற்றையெல்லாம் உள்ளடக்கி, அருமையான இந்த நிகழ்ச்சியை ஒரு குடும்பத்துக் கொண்டாட்டமாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, கல்வி யாளர்களே, கூட்டமைப்பினுடைய உறுப்பினர் பெருமக்களே, வரவேற் புரையாற்றிய பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் பேராசிரியை செந்தாமரை அவர்களே,

இந்நிகழ்வில் நூறாண்டு கண்டு சிறப்பாக வாழ்ந்து, இன்னும் தான் ஒரு இளைஞர் என்ற ஆவேசத்தைத் தெளிவாக தன்னுடைய உரையில் வெளிப்படுத்திய  101 வயது இளைஞர் அய்யா ஞான.செபஸ்தியான் அவர்களே,

இந்தக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களாக இருக்கக் கூடிய தோழர்களே,    இயக்கக் குடும்பத்தவர்களே, கைவல்யம் முதியோர் இல்லத்தைச் சார்ந்த அருமைத் தோழர்களே மற்றும் திராவிடர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்களே, கல்விக் குடும்பத்தினரே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான மகிழ்ச்சியான வணக்கமும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றபொழுது மிகுந்த உற்சாகத் தையும், மகிழ்ச்சியையும் நம் எல்லோருக்கும் அளிக்கிறது.

ஞான.செபாஸ்தியானும் - டை'யும் போல!

முதலாவதாக எனக்கு ஒரு வியப்போடு கலந்த மகிழ்ச்சி என்னவென்று சொன்னால், அய்யா ஞானசெபஸ்தியான் அவர்கள் இங்கே அழகாக சொன்னதுபோல, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்; குறித்த நேரத்தில் புறப்பட்டு விடுவார். அவர் மிடுக்கோடு இருப்பார் எப்பொழுதும். இப்பொழுதுகூட பாருங்கள் கழுத்தில் டை கட்டியிருக்கிறார். டை என்றால், இணைத்தல். அந்த மாதிரி ஒரு இணைப்பை அவர் வந்ததிலிருந்து பார்த்தீர்களேயானால், வெண்ணிலாவும், வானும் போல என்று கவிதை சொல்வார்கள், ஞான.செபாஸ்தியானும் டையும் போலவே என்று நாம் சொல்லலாம்.

நான் வெளிநாடுகளுக்குச் சென்றால், அவருக்கு என்ன பிடிக்கும் - என்ன வாங்கிக்கொண்டு வரலாம் என்று சொன்னால், ஒரு நல்ல அழகான டையை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்போம். அந்தத் டையை அவர் கட்டிக்கொண்டு ஒரு பார்வை பார்த்தால், இளைஞர் பார்ப்பதுபோலவே இருக்கும். அந்த மகிழ்ச்சி அவருக்கு என்றைக்கும் உண்டு. அப்படிப்பட்டவர், சிறிது நாள்களுக்குமுன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நேரத்தில், மிகவும் கவலைப்பட்டார். ஆனால், இன்றைக்கு அவரை 100 வயதைத் தாண்டி அவரைப் பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெரியார் வயதையும் தாண்டி பெரியார் தொண்டர்கள் வாழுகிறார்கள்

அன்பு சொன்னபொழுது நான் நம்பவேயில்லை. அவர் சொன்னார், அய்யா அலுவலகத்திற்கு வந்துவிட்டார் என்று.

அப்படியா? அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நான் நினைத்தால், அவர் என்னை வழியனுப்புவதற்காக எழுந்து வருகிறார்.

நமது இயக்கத்தவர்களில் பெரிய அளவில் இன்றைக்கு பெரியார் வயதையும் தாண்டி பெரியார் தொண்டர்கள் வாழுகிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் 95 வயது ஆண்டு காலம் வாழ்ந்தார். இன்றைக்குப் பெரியார் தொண்டர்களைப் பார்த்தீர் களேயானால், அய்யா ஞான.செபஸ்தியான் அவர்கள்தான், நெம்பர் ஒன். - 101 இல் இருக்கிறார்.

எதையும் அவர் நேரத்தோடு செய்து முடிப்பவர். இன்னமும் அவர் உற்சாகத்தோடு இருக்கிறார்.

ஒரு பக்கம் பார்த்தீர்களேயானால், ஷேக்ஸ்பியர் வர்ணித்ததுபோல, மனித வாழ்வு பருவத்தில் ஏழு காலகட்டம்.

முதலில் எங்கே ஆரம்பித்தோமே, அங்கே மீண்டும் வந்துவிட்டார். குழந்தைப் பருவத்திற்கே வந்துவிட்டார். முதியவர்களுக்கு வயது ஆக ஆக, அவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள்.

உதாரணமாக நீங்கள் இங்கே பார்க்கலாம், அவரது மகளும், அவருடைய மருமகனாக , மகனாக இருக்கக்கூடிய தாமஸ் ஆகியோரும் ஒரு குழந்தையைப் பராமரிப்பதுபோல, பாதுகாக் கிறார்கள்.

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது

இவர் குழந்தையாக இருக்கும்போது, அவர் பாராட்டி, பாதுகாத்தார். இப்பொழுது அவர் குழந்தையாக இருக்கும் பொழுது, இவர்கள் இருவரும் பாராட்டி, பாதுகாக்கிறார்கள் என்றால், இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. நூறாவது வயதில் ஞான.செபாஸ்தியான் அய்யா அவர்கள் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.

கடந்த சில நாள்களுக்குமுன்பு பச்சை அட்டை குடிஅரசு ஏட்டினை புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய செய்தி கண்ணில் பட்டது.

இலங்கையில் உள்ள திராவிடர் கழகத்துக்காரர், பகுத்தறி வாளர் ஞான.செபஸ்தியான் அவர்களுடைய பெண் மகவுக்கு மாதரசி என்ற பெயர் வைத்ததற்காக ஒரு பெரிய தொகையை குடிஅரசு அலுவலகத்திற்குக் கொடுத்தார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஒரு ரூபாய் என்றால், ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்!

நீங்கள் எல்லாம் நினைக்கலாம், அவ்வளவு பெரிய தொகையா என்று? ஒரு ரூபாய் கொடுத்திருந்தார்கள்.

என்னடா, ஒரு ரூபாய்தானா என்று நீங்கள் நினைக்காதீர்கள். 70 ஆண்டுகளுக்குமுன்னால், ஒரு ரூபாய் என்றால், அன்றைக்கு சாதாரண விஷயமல்ல; ஒரு ரூபாய் என்றால், ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்.

தந்தை பெரியார் அவர்களிடம் ஒரு காசு, 2 காசு, பத்து காசு எல்லாம் நன்கொடையாகக் கொடுத்தார்கள். அதையெல்லாம் முடிச்சுப் போட்டு அய்யா வைத்திருப்பார். அதன் விளைவு தான், கட்டடங்கள், நிறுவனங்கள் எல்லாம் வந்திருக்கின்றன.

இத்தனை ஆண்டுகள் கழித்து, அய்யா ஞான.செபஸ்தி யான் அவர்களுடைய குடும்பத்தை ஒரே குடும்பமாக இந்த மேடையில் பார்ப்பது என்பது எதைக் காட்டுகிறது என்றால், பெரியாருடைய கொள்கையின் நீளம் - அகலம் - ஆழம் எவ்வளவு என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது நோய்கள் இறக்குமதி ஆகின்றன. பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த நோய்க்கு மருந் தில்லை, இந்த நோய்க்கு மருந்தில்லை என்று சொல்கின்ற காலகட்டத்தில், இவ்வளவையும் தாண்டி, அய்யா அவர்கள் வந்திருக்கிறார். அவருக்குப் பல்வேறு வகையில் சோதனைகள் ஏற்பட்டன.

எங்களை வரவேற்ற

அய்யா ஞான.செபஸ்தியான்

நானும், நம்முடைய கழகப் பொருளாளராக இருந்த குப்புசாமி, தேவசகாயம் ஆகியோர் 1982 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அய்ரோப்பாவிற்குச் சென்றிருந்தோம்.

அய்யா ஞான.செபஸ்தியான் அவர்கள் இலங்கையில் இருந்தார். நாங்கள் அய்ரோப்பிய பயணத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையத்திற்கு வரும்பொழுது, எங்களை வரவேற்பதற்காக அய்யா ஞான.செபஸ்தியான் அவர்கள் நின்றிருந்தார்.

இலங்கையில், திராவிடர் கழக அமைப்பை உருவாக் கினார்கள் அய்யா ஞான.செபஸ்தியான் அவர்களும், ஒரு இசுலாமியத் தோழர், இன்னும் சில நண்பர்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கினார்கள்.

அவருக்க அன்றைக்கு ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே, ஜாதி, மதம் இவை அத்தனையும் தாண்டி, மனிதநேயம் என்பதை மிகைப்படுத்தி இங்கே வந்தார்கள்.

அவரை நாங்கள், அய்யா நீங்கள் திரும்பிப் போக வேண் டாம்; இங்கே இருங்கள். பெரியார் மருந்தியல் கல்லூரியில் பணியாற்றச் சொன்னோம்.

செவிலித்தாய்க்கு மேல் ஒரு தாயாக இருந்து...

அவருடைய குடும்பத்தில் உள்ள அத்துணை பேரும் நம் குடும்பத்து உறுப்பினர் போன்று இருக்கக்கூடியவர்கள். அவருக்கு நடுவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், அவரை நம்முடைய தேவன் அவர்கள், மிக அற்புதமாக அவருடைய மருத்துவமனையில் வைத்து கவனித்து வந்தார்கள்.

செவிலித்தாய்க்கு மேல் ஒரு தாயாக இருந்து மாதரசியும், அவருடைய மருமகன் தாமஸ் ஆகியோரும் கண்காணித்து பேணிக் காத்து வந்தனர்.

தந்தை பெரியார் அவர்களை, அன்னை மணியம்மையார் அவர்கள் கண்காணித்துப் பேணி வந்தார். அதனால்தான் அய்யா அவர்கள் 95 வயது வரை வாழ்ந்தார்.

அன்னை மணியம்மையாரைப் பார்க்கின்றவர்கள், என்ன இவ்வளவு கொடுமையாக நடந்துகொள்கிறாரே என்று கூட தவறாக நினைத்துக் கொள்வார்கள்.

அய்யா அவர்கள் தொண்டர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிட்டுவிடுவார். உடலுக்கு ஒத்துக்கொள்ளாததை சாப்பிட் டால், அவருடைய உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படும். அதனால், அன்னை மணியம்மையாருக்குத் தெரியாமல், வாய்க்குள் வைத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்பொழுது, அன்னை மணியம்மையார் அவர்கள், அவரை இழுத்துப் பிடித்து வாய்க்குள் விரலை விட்டு, உள்ளே இருப்பதை வெளியே எடுத்துப் போட்டுவிடுவார்.

அய்யாவை நல்ல உடல்நலத்தோடு காப்பாற்றவேண்டும் அதுதான் மிக முக்கியம்

இந்தக் காட்சியை யாராவது பார்த்தால், என்ன இந்த அம்மா இப்படி நடந்துகொள்கிறாரே? என்று நினைப்பார்கள்.

ஆனால், மணியம்மையார் அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், என்னைப்பற்றி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். எனக்கு அய் யாவை நல்ல உடல்நலத்தோடு காப்பாற்றவேண்டும் அதுதான் மிக முக்கியம் என்பார்.

அதுபோன்று, அய்யா ஞான.செபஸ்தியான் அவர்கள் இவ்வளவு நாள் வாழ்வதற்குக் காரணமாக இருக்கின்ற இவர்களைப் பாராட்டுவது என்பது மிகமிக முக்கியம்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும் என்றால், பெரிய அத்தியாயம் அத்தியாயமாக எழுதவேண்டும்.

நம்முடைய ஆசிரியர்ப் பெருமக்களுக்கு, மற்ற நிறுவனங் களில்கூட இதுபோன்று கிடையாது; அவர்கள் நூற்றுக்கு நூறு வாங்கிய  ஆசிரியர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்; அவர்களுடைய உழைப்பை அங்கீகரிக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஊக்கத் தொகைகளையும் அளித்திருக்கிறோம். இது ஒவ் வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது.

நாம் எல்லோருமே சக தோழர்கள்தான்; பணித் தோழர்கள்தான்

இந்தப் பணிக் கூட்டமைப்பு என்று வரும்பொழுது, அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கின்றோம். நம் தோழர்கள் கூடுமானவரையில், நம்முடைய பணிகளில் நூற்றுக்கு நூறு என்பது குறையவே கூடாது. நம் பள்ளிகளைப் பார்த்து எல்லோரும் வியப்படையக் கூடிய அளவில் இருக்கிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சிதான். நாங்கள் சில உத்தரவுகளைப் போட்டு இப்படி நடக்கவேண்டும், அப்படி நடக்கவேண்டும் என்று சொல்வது கிடையாது. நாம் எல்லோருமே சக தோழர்கள்தான்; பணித் தோழர்கள்தான்.

பணித் தோழர்கள் கூட்டமைப்பு என்கிற வார்த்தையைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். தோழர்கள் என்பதுதான் மிக முக்கியம். தோழர்கள் என்றால், என்ன தொந்தரவுகள் ஏற்பட் டாலும், தோள் கொடுப்பார்கள் என்பதுதான். ஒரு குடும்பம் போன்று இருக்கக்கூடியவர்கள் நாம் எல்லோரும். மாதம் ஒருமுறை சந்திக்கக்கூடிய ஏற்பாட்டினை செய்யவேண்டும்.

விடுதலை அலுவலகத்தில் ஒரு நல்ல ஏற்பாட்டினை செய்திருக்கிறார்கள்!

விடுதலை அலுவலகத்தில் ஒரு நல்ல ஏற்பாட்டினை செய்திருக்கிறார்கள். பணியாளர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அந்த மாதத்தில் யார் யாருக்குப் பிறந்த நாள் வருகிறதோ, அவர்களையெல்லாம் அழைத்து, கேக் வெட்டி, அவருக்கு ஊட்டிவிட்டு, மீதியை அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று குடும்பத்தவர்களுக்கும் கொடுக்கின்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சுமை அதிகம். என்ன சுமை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆண்கள் எல்லாம் உத்தரவு போடுகின்ற தன்மையில்தான் இருக்கிறார்கள். ஏன் இன்னும் சமையல் செய்யவில்லை? ஏன் நேரமாகிறது? என்று கேட்கின்ற இடத்தில்தான் இருக்கிறார்கள். மற்ற நாடுகளில், ஆண்கள் அவ்வளவு கேள்வி கேட்க மாட்டார்கள்; பெண்களுக்கு உதவி செய்வார்கள்; ஆனால், நம் நாட்டில் அப்படி கிடையாது.

அதனால், குறிப்பாக பெண்களாக இருக்கக்கூடிய தோழர்கள், ஆசிரியைப் பெருமக்களுக்கு இரட்டை வேலை அவர்களுக்கு. கல்லூரியில் வந்து இங்கே பணியாற்றவேண்டும்; அதேநேரத்தில், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைக்க வேண்டும்; பிள்ளைகளை வளர்க்கவேண்டும் போன்ற பணிகள் இருக்கின்றன. அவர்களுக்கு ஒரு இளைப்பாறுதல்; மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுதல். அதற்கு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி. இங்கே இறுக்கமாக அமர்ந்திருக்கக் கூடாது. கலகலப்பாக இருக்கவேண்டும்.

யாரையும் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை!

இந்த அமைப்பைப் பொறுத்தவரையில், எப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கவேண்டும் என்றால், யாரையும் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை - யார் பிரின்சிபல், யார் ஆசிரியர் என்பது கிடையாது. எல்லோரும் ஒரே நிலைதான்.

பணித் தோழர்கள் என்றால், கடைசியாக கதவு சாத்துகிற வரிலிருந்து, கூட்டுபவரிலிருந்து எல்லோரும் ஒன்றுதான். உங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும், கலந்து பேசவேண்டும். முதுமை, வளர்ச்சி, ஓய்வு பெறுதல் என்றாலும் - ஹார்ட் அட்டாக் போன்றவைகளிலிருந்து காப்பாற்றிக் கொள் வதற்கு மருத்துவர்களின் ஆலோசனை என்னவென்றால், நல்ல நண்பர்கள் தேவை என்கிறார்கள். நல்ல நட்பு வட்டம் வேண்டும் என்கிறார்கள்.

மனதில் உள்ளவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். யாராவது ஒருவரிடம் கலந்து பேசவேண்டும்.

எளிமையான பணியாக இருந்தாலும், அது சுமையாகத்தான் தெரியும்!

அதற்கு உங்களுக்குப் பிடித்தமான பணியை செய்ய வேண்டும்.  ஏதோ பணிக்கு வந்தோம்; எப்பொழுது மணி யாகும் வீட்டிற்குப் போகலாம் என்று நினைத்தால், எல்லா வேலையும் சுமையாகும். எளிமையான பணியாக இருந்தாலும், அது சுமையாகத்தான் தெரியும்.

அதற்குப் பதிலாக நாம் என்ன செய்யவேண்டும் என்றால், மகிழ்ச்சியோடு பணியை செய்யவேண்டும்; உற்சாகத்தோடு அந்தப் பணியை செய்யவேண்டும்.

அய்யா ஞான.செபஸ்தியான் அவர்கள் சிறிது நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவுற்று இங்கே வர முடியாத  சூழல் இருந்தது. ஆனால், அவர் இங்கே வந்து அமர்ந்தால்தான், அவர் திருப்தியடைகிறார். அதுபோன்று ஒரு உணர்வினை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்.

மாணவ, மாணவிகளைப்பற்றி சொன்னார்கள்; வரவேற் புரையில் சொன்னதுபோன்று, மிக முக்கியமாக செய்ய வேண்டியது - மாணவர்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்று சொல்வதைவிட, மாணவர்கள் இன்றைக்குப் படிக்கிறார்கள்; ஆசிரியர்களான நீங்கள் முதல் நாள் படித்துவிட்டு வருகிறீர்கள். பல செய்திகளை நீங்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். என்னை பொறுத்தவரையில், எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது வேறு விஷயம்.

வாழ்நாள் பெரியார் மாணவன் நான்!

ஆனால், எனக்குப் பெரிதாக ஒரு தகுதி இருக்கிறது என்று நான் நினைத்துக்கொள்வது என்னவென்றால், நான் பெருமையுள்ளம் உள்ள ஒரு வாழ்நாள் பெரியார் மாணவன்.

மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், பெரியாரை வாசிப்பதைத் தாண்டி - படிப்பதைத் தாண்டி - பெரியாரை சுவாசிப்போம். பெருவாழ்வு பெறுவோம்!

இது மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட இரட்டிப்பு மடங்கு ஆசிரியப் பெருமக்களாக இருக்கின்ற உங்களுக்கு அதிகம்.

பெரியார் என்று சொன்னால், பெரியார் ஒரு தனி மனித ரல்ல. அண்ணா அவர்கள் சொன்னதுபோல,

பெரியார் ஒரு காலகட்டம்; ஒரு சகாப்தம்; ஒரு திருப்பம்.

பெரியாருடைய சிந்தனை என்பது மனிதநேயத்தினுடைய மறுமலர்ச்சி.

பெரியாருடைய சிந்தனை என்பது பாலின வேறுபாடு பார்த்து மற்றவர்கள் யாரும் பிரிக்கக்கூடாது.

ஆண் உயர்ந்தவர் - பெண் தாழ்ந்தவர்.

மேல்ஜாதிக்காரர் - கீழ்ஜாதிக்காரர்

தொடக்கூடாத ஜாதிக்காரர் - தொடக்கூடிய ஜாதிக்காரர்

இதுபோன்ற பிரிவுகள் தேவையில்லை என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

நம்மைவிட நெருக்கமான உறவுக்காரர்கள் வேறு யாரும்  இல்லை என்று சொல்லி, ஒருவருக்குத் துன்பம் ஏற்படுகிறது என்றால், மற்றவர்கள் முந்திக்கொண்டு அந்தத் துன்பத்தைத் துயரத்தைத் துடைக்க முன்வரவேண்டும்.

அதேபோன்று, ஒருவருக்கு இன்பம் ஏற்படுகிறதா, அதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப்போல. நீங்கள் எல்லோரும் அதனைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

பெரியாரை வாசிப்போம் - சுவாசிப்போம்!

அதற்கு வகுப்பு நேரத்தில் நேரமிருக்காது; அல்லது வாழ்க்கைப் பணிகளை செய்யும்பொழுது நேரமிருக்காது. அதற்கு எது நேரம் என்றால், இந்தக் கூட்டமைப்பு இருக்கிறதே, இந்தக் கூட்டம்தான் மிகச் சரியான நேரமாகும்.

பெரியாரை சுவாசிப்போம் என்கிற வார்த்தை இருக்கிறதே - பெரியாரை வாசிப்போம் - சுவாசிப்போம் என்று சொல்வத னால், ஒலி நன்றாக இருக்கிறது - அதற்காக இதனை சொல்லியி ருப்பார்களோ என்று யாரும் தயவுசெய்து நினைக்க வேண்டும்.

வாசிப்பது என்பது படிப்பது -

சுவாசிப்பது என்பது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது.

சுவாசிப்பதில், இரண்டு அம்சங்கள் இருக்கின்றதை  ஆசிரி யப் பெருமக்களாகிய நீங்கள் எங்களைவிட அதிகமாக அறிவியலைப் படித்தவர்கள்.

சுவாசிப்பது என்றால், மூச்சை உள் வாங்குவது - மூச்சை வெளியில் விடுவது என்பதுதான்.

மூச்சை உள்ளே வாங்குவதும் - வெளியில் விடுவதும்தான் வாழ்க்கை. எப்பொழுது மூச்சு நிற்கிறதோ, அப்பொழுது வாழ்க்கை நின்று போய்விட்டது என்று அர்த்தம்.

மூச்சை உள்வாங்குகிறோம் - மூச்சை வெளி விடுகிறோம் இந்த இரண்டிற்கும் பேர்தான் சுவாசித்தல் என்பது.

அசுத்த காற்றை வெளியேற்றுவது என்பதும் மிகவும் முக்கியம்!

சுவாசித்தல் என்று வரும்பொழுது, எந்தக் காற்றை உள்ளே இழுக்கிறோம் - உயிர்க்காற்று - பிராண வாயு. நல்ல காற்று. நம்முடைய உடலமைப்பு எப்படிப்பட்டது என்றால், நல்ல காற்றை நாம் உள்ளே இழுத்து - அசுத்தக் காற்றை வெளி விடுகிறோம். அதைத்தான் இன்ஹேல், எக்ஸ்ஹேல் என்று சொல்கிறோம்.

மூச்சை உள்வாங்குகிறோம் - மூச்சை வெளியிடுகிறோம் என்றால், அதற்கு இரண்டு அர்த்தம் இருக்கிறது.

நல்ல காற்றை உள்வாங்குவது எவ்வளவு முக்கியமோ - அவ்வளவு முக்கியம் - தேவையில்லாத அசுத்த காற்றை வெளியேற்றுவது என்பதும் மிகவும் முக்கியம்.

பெரியாரை சுவாசிப்போம்' என்றால், வாழ்க்கைக்கு எது தேவையோ, அதனை உள்வாங்கிக் கொள்ளுங்கள்; எது தேவையில்லையோ, அதனை வெளியே தள்ளுங்கள். இதை எப்போது நீங்கள் உணருகிறீர்களோ, அதுதான் பெரியாரை சுவாசிப்பது என்று அர்த்தம்.

வாசிப்பது என்றால் படிப்பது. அதற்கு உள்ளே வர வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால், சுவாசிப்பது என்பது பகுத்தறிவை உள்வாங்குவது. பகுத்தறிவுக்கு முர ணான செய்திகள் எதுவாக இருந்தாலும், அதனை வெளியே தள்ளுங்கள். வெளியேற்றுதல் - கைவிடுதல். அதனைப் பின்பற்றாமல் ஒதுக்கிவிடுங்கள். இவை அத்தனையும் அந்த ஒரு வார்த்தைக்குள் - அந்தத் தத்துவத்திற்குள் தெளிவாக இருக்கிறது.

பகுத்தறிவு எல்லோருக்கும் பயன்படக்கூடியது!

ஆகவே, ஆசிரியப் பெருமக்களாக இருக்கக்கூடிய நீங்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகவும் இருக்கலாம் அல்லது கல்லூரி பேராசிரியர்களாகவும் இருக்கலாம் - இதில் ஒன்றும் வித்தியாசமில்லை. பகுத்தறிவு எல்லோருக்கும் பயன்படக் கூடியது. சிந்தித்தால்தான், வளர்ச்சி ஏற்படும். இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி வந்தது?

எல்லாம் வல்ல ஆண்டவன் அருளைப் பெற வேண்டிக் கொள்கிறோம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். உங்களில் சில பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருப்பீர்கள். ஏனென்றால், பயம்தான் காரணம். நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள்தான். அய்யா ஞான.செபஸ்தியான் அவர்கள் கடவுள் மறுப்பாளர்தான். இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், கடவுள் மறுப்பா ளர்கள் 100 வயதைத் தாண்டி வாழ்கிறார்கள். கடவுளை மறுத்த பெரியார் 95 வயதுவரை வாழ்ந்தார். கடவுள் அவதாரம் என்று சொன்ன சங்கராச்சாரியார் எத்தனை வயது வரை வாழ்ந்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

300 ஆண்டுகளுக்குமுன்பு இந்தியாவில் உள்ளவர்களின் சராசரி வயது என்ன?

இந்தியாவில் உள்ளவர்களின் சராசரி வயது என்ன தெரியுமா? 300 ஆண்டுகளுக்குமுன்பு 20 வயதைத் தாண்டியது கிடையாது. 200 ஆண்டுகளுக்குமுன்பு ஒரு இரண்டாண்டு கூடுதலாயிற்று. இன்றைக்கு நாம் மருந்தியல் கல்லூரியில் இருக்கிறோம். எந்த நோய் வந்தாலும், அதற்கான மருந்துகளும் கண்டுபிடிக் கப்பட்டன. நோய் வருவதற்குமுன் தடுப்பு முறைகளையும் கையாண்டார்கள்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்

என்று வள்ளுவர் சொன்னார் மிக அழுகாக. வருமுன்னர் காத்துக்கொள்ளவேண்டும்.

ஆகவே, அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் பகுத்தறிவு. அந்தப் பகுத்தறிவினு டைய வளர்ச்சிதான் 30 வயதாயிற்று. இன்றைக்குப் பெண்க ளுடைய சராசரி வயது ஆண்களைவிட இரண்டு வயது அதி கம். பெண்களின் சராசரி வயது 73; ஆண்களின் வயது 71.

இது எப்படி நடந்தது? கடவுள் செயல் என்று சொல்லவும் முடியாது; நம்மூரில் கடவுள்கள் நீண்ட காலமாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

கடவுள்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பு

இப்பொழுது நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது எல்லா கடவுள்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என்று.

நான் சொல்வது யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல - பண்படுத்துவதற்காகத்தான். தன்னம்பிக்கை வந்தால், மூடநம்பிக்கை தானாகவே வெளியேறிவிடும்.

பெரியாரை சுவாசித்தால்  வெளியேற்றப்படவேண்டிய மூடநம்பிக்கைகள் என்னவென்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். பிறகு தன்னம்பிக்கை தானே வரும். அந்தத் தன்னம்பிக்கைதான் நூறு வயதிற்குமேலே நம்மை வாழ வைக்கும். அப்படிப்பட்ட வாழ்க்கை முறையை நாம் உரு வாக்கிக் கொள்ளவேண்டும்.

அறிவியல் வாழ்க்கை முறை. இன்றைக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சி வந்திருக்கிறது என்றால், அறிவியல் வளர்ச்சி யின் காரணமாகத்தான்.

காரில் ஏதாவது ஒரு பாகம் பழுதடைந்தால், அந்தப் பாகத்தை கழற்றிப் போட்டுவிட்டு, புதிய பாகத்தைப் பொருத் திக் கொள்ளலாம். அதேபோன்று, மனிதர்களுக்கும் வந்தா யிற்று.

உறுப்பு மாற்று சிகிச்சை என்பது முப்பத்தி முக்கோடி தேவர்களில் ஒருவருக்கும் தெரியாது; 48 ஆயிரம் ரிஷிகளில் ஒருவருக்கும் தெரியாது.

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், நம் உடலில் மிகவும் நுட்பமானது கல்லீரல். அதை அறுவை சிகிச்சை செய்வதில் வல்லவர்களான மருத்துவர்கள் நம்நாட்டில் ஏராளம் உண்டு.

தீர்வு இல்லாத பிரச்சினைகளே உலகத்தில் கிடையாது!

எனவேதான் தோழர்களே, நீங்கள் பெரியாரை சுவாசி யுங்கள்! நீங்களும் புரிந்து, மாணவர்களுக்கும் புரிய வையுங்கள். மாணவர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டுங்கள். எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும், எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம். தீர்வு இல்லாத பிரச்சினைகளே உலகத்தில் கிடையாது. கொஞ்சம் தாமதமாக கிடைக்குமே தவிர, கண்டிப்பாக அதற்குத் தீர்வு உண்டு. மூளையை கொஞ்சம் தாராளமாகப் பயன்படுத்தவேண்டும்.

தடைக்கற்கள் உண்டென்றாலும், தாங்கும், தாண்டும் தடந்தோள்கள் உண்டு!

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு உணர்வை நாம் பெற வேண்டும். அதற்கு நம்முடைய அய்யா ஞான.செபாஸ்தியான் எடுத்துக்காட்டானவர். இன்றைக்கு அவரைப் பாராட்டுவதின் மூலமாக,  எத்தனை சோதனைகள் வந்தாலும், தடைக்கற்கள் உண்டென்றாலும், தாங்கும், தாண்டும் தடந்தோள்கள் உண்டு என்ற நினைக்கக்கூடிய அளவில், எல்லோரும் வரவேண்டும்.

ஆகவே, அந்த முயற்சியில், இங்கே பணிக்கு வருகிறவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல மகிழ்ச்சியோடு, கலகலப்போடு இருங்கள்.

நாகம்மையார் அனாதை குழந்தைகள் இல்லம் என்று  சொன்னார்கள். ஆனால், அனாதை என்கிற வார்த்தை அந்தக் குழந்தைகளைப் பாதித்தது. நாம் எல்லோருக்கும் இருக்கும் பொழுது அவர்கள் எப்படி அனாதை ஆவார்கள். இருக்கவும் விடமாட்டோம்; தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்டு, இன்றைக்கு 60 ஆண்டுகள் ஆகின்றன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வருகிறது, அப்பொழுது நீதிபதி ஒருவர் சொல்கிறார், அந்தக் குழந்தைகள் இல்லம் சரியாக நடைபெறவில்லை என்பதினால், அந்தக் குழந்தை களையெல்லாம் திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்ற பெயரில் பெரியார் அறக்கட்டளை நடத்துகிறது - அந்த இல்லத்தில் கொண்டு போய் விடுங்கள் என்று சொல் கிறார். இதைவிட நமக்குப் பெருமை வேறு எதுவும் கிடையாது.

மாணவர்களின் பலவீனத்தை பலமாக்கவேண்டும் நீங்கள்!

மெட்ரிக்குலேசன் பள்ளியாக இருந்தாலும், பெரியார் மணியம்மை மேனிலைப்பள்ளியாக இருந்தாலும், நான் பொறுப்பேற்றவுடன் முதலில் சொன்னது என்னவென்றால், நம் வீட்டுக் குழந்தைகளை எப்படி கவனிப்பீர்களோ - அதே போன்று இந்தப் பிள்ளைகளை எதில் பலவீனமாக இருக் கிறார்களோ அதனை கவனித்து அவர்களைப் பலப்படுத்த வேண்டும் என்று சொன்னேன்.

இங்கே படித்த பிள்ளைகள் மருத்துவர்களாக, பொறியாளர் களாக இருக்கிறார்கள்; வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநாட்டில் பங்கேற்கச் செல்லும்பொழுது, நம் இல்லத்தில் படித்து வளர்ந்து இப்பொழுது நல்ல நிலையில் இருக்கும் ஒருவரின் வீட்டில்தான் சாப்பிட்டோம். இதுதான் நமக்குப் பெருமை.

பாராட்டும் - மகிழ்ச்சியும்!

அய்யா அவர்கள், அம்மா அவர்கள் எதைச் செய்தார் களோ, அதைத்தான் நானும் செய்கிறேன். நீங்கள் உங்கள் கூட்டு முயற்சியில் அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு நன்கொடை அளித்திருக்கிறீர்களே, அதற்கு என்னுடைய அன்பான பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கி றேன்.

நாம் சம்பாதிப்பதில் ஒரு  பகுதியை மற்றவர்களுக்காகப் பயன்படுத்தவேண்டும். ஈதல் இசைபட வாழ்தல் என்கிற குறளுக்கேற்ப,

ஈத்துவக்கும் இன்பம் என்பது போலவும்

எனவேதான், நீங்கள் எல்லோரும், அதுபோன்ற உணர்வு களைப் பெறுங்கள்.

அத்தனையும் அதற்குள் அடக்கம்!

மாணவர்களுக்கு நீங்கள் நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு, கட்டுப்பாட்டை கற்றுக்கொடுப்பதற்கு, சமத்து வத்தை சொல்லிக் கொடுப்பதற்கு, மனிதநேயத்தை சொல்லிக் கொடுப்பதற்கு, பெரியாரை சுவாசியுங்கள் என்று சொன்னாலே, அவை அத்தனையும் அதற்குள் அடக்கம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, அய்யா ஞான.செபஸ்தியான் போன்றவர்கள் பல்லாண்டு வாழ்க என்று கூறி, என்னுரையை முடிக்கிறேன்.

அடுத்த முறை நாம் சந்திக்கும்பொழுது நான் ஒரு பத்து நிமிடம் அறிமுக உரையாற்றுவேன்.

அடுத்த கூட்டங்களில் வெறும் சொற்பொழிவு நிகழ்த்தாமல், நான் உங்களைக் கேள்வி கேட்பேன்; நீங்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கலாம். எதைப்பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் - அது கலகலப்பாக இருக்கும், உற்சாகமாக இருக்கும்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner