எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 25 பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்விழாவில், கொள்கை எதிரியாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர் மக்களை ஏமாற்றி, வாக்குகளைப் பறிக்கும் நோக்கில் காமராசரின் பெயரைக் கூறிவருகின்றனர் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டி பேசினார்.

தமிழ்நாடு காங்கிரசு இலக்கிய அணி யின் சார்பில் சென்னை தண்டை யார்ப்பேட்டை வாணி மகாலில் பெருந் தலைவர் காமராசர் 116ஆவது பிறந்த நாள் விழா  நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த காமராசர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

‘மத சார்பின்மையும், மனிதநேயமும்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

காலம் காலமாக நிலைத்து இருக்கக் கூடிய ஒரு கட்டடத்தின் அடித்தளம் போன்று அரசமைப்புச்சட்டத்தின் அடித் தளமாக அதன் முகவுரை உள்ளது. அந்த முகவுரையில்

WE, THE PEOPLE OF INDIA, having solemnly
resolved to constitute India into a
SOVEREIGN
SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens...

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அடிப்படைக்ட்டுமானத்தை உடைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அரசமைப்புச்சட்டத்தின் இந்த அடித் தளத்தையே மாற்ற ஆர்.எஸ்.எஸ். அரசு முயற்சித்து வருகிறது.

செக்குயூலர் என்பதையே இல்லாமல் பாஜக அரசு அரசமைப்புச்சட்டத்தின் அட்டைப்படத்தை வெளியிட்டு பாஜக ஆட்சி விளம்பரம் செய்கிறது.

தந்தை பெரியார், பாபாசாகெப் அம்பேத்கர், காமராசர் ஆகியோர்குறித்து பரப்புவது ஒரு பக்கம், மதவெறி சக்திகள், திரிபுவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

மதசார்பின்மை, மனிதநேயக் கொள் கைக்கு எதிராக இருக்கக்கூடியவர்கள் காமராசர் பெயரை உச்சரிக்கின்றனர்.

உள்ளே உள்ள சரக்கு வேறு, உள்ளே மத வெறி சரக்கு. வெளியே லேபிளாக காமராசரைப் பயன்படுத்துகின்றனர்.

எந்த காமராசரை உயிரோடு கொளுத்த  ஆர்.எஸ்.எஸ். கூட்டம் முயன்றதோ, அந்தக் கூட்டம் காமராசரின் படத்தை ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் வெளியிடுகிறது.

தந்தை பெரியார் ஆற்றிய பணியின் காரணமாக உருவானது காமராசர் ஆட்சி. காமராசர் ஆட்சி என்பது சிறந்த ஆட்சி, மதசார்பற்ற ஆட்சி, விருப்பு வெறுப்பு இல்லாத நிர்வாகம்தான் காமராசர் ஆட்சி.

‘ஆனந்த விகடனில்’ கல்வி வளர்ச் சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று வெளியிட்டது.

தகுதி, திறமை, மோசடி

குருகுலக்கல்வியை ஒழித்தார் காம ராசர். தகுதி, திறமை என்று கூறுவது மோசடி என்றார்.

இன்றைக்கு பசுப்பாதுகாப்பு படை என்று சொல்வதா? என்று உச்சநீதிமன்றமே கேட்கிறது. அரசியல், கட்சி மாறுபாடுகள், வேறுபாடுகளைக் கடந்து, மதவெறித்தீயை அணைத்திட ஒன்றுபடவேண்டும். இந்து மத, பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ். வெறித்தனம், கும்பல் வன்முறைகுறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. பாலை விட பசு மாட்டின்மூத்திரம் விலை அதிகம் என்கிறார்கள்.  முன் எப்போதும் தேவைப் பட்டதைவிட, இப்போது காமராசர் தத் துவம் தேவைப்படுகிறது.

மதவெறி மாய்ப்போம், மனித நேயம் காப்போம்

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் தோழர் தா.பாண்டியன், காங்கிரசு கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரசு கட்சி இலக்கிய அணி புரவலர் உ.பலராமன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள் பட பலரும் பெருந்தலைவர் காமராசர் ஆற்றிய பணிகள்குறித்து எடுத்துரைத்தார்கள்.

தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் இலக்கிய அணியின் பொறுப்பாளர் நாஞ்சில்.கி.இராஜேந்திரன் தலைமையில், காங்கிரசு கட்சி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம், திமுக பொறுப்பாளர் வே.சுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி முன்னிலையில் சக்தி. டி.இராஜேந்திரன் வரவேற்றார். இராயபுரம் ஆர்.மனோகர் தொடக்க உரையாற்றினார்.

விழாவில் பத்திரிகையாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய ‘காமராஜ் காட்டும் சேவை அரசியல்’ எனும் தலைப்பிலான நூலை கல்வியாளர் நடிகர் கே.இராஜன் வெளியிட, எம்.எஸ்.திரவியம் பெற்றுக் கொண்டார்.

காங்கிரசு கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் பி.எஸ்.புத்தன், சொல்வேந்தன், கே.மாரியப்பன், சங்கொலி எம்.சங்கரலிங்கம், ஆர்.கே.செல்வமணி, பிற் படுத்தப்பட்டவர்களின் குரல் இதழாசிரியர் பார்த்தசாரதி, புலவர் பா.வீரமணி, சென்னை மண்டல செயலாளர் கொடுங் கையூர் கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,   தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் மோகன்,  பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, ஓவியர் பெரு.இளங்கோ, பெரம்பூர் கோபால கிருஷ்ணன், திருவொற்றியூர் இராசேந்திரன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்  கலைமணி, மாணவர் கழகம் பிரவீன்குமார், புதுவண்ணை சு.செல்வம், சுதன், மகேஸ்வரன், சக்திவேல், திமுக வின்சென்ட் மற்றும் காங்கிரசு கட்சியின் பொறுப்பாளர்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.

விழா முடிவில் இளஞ்சுடர் இந்திரன் நன்றி கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner